கலப்பட டீ தூள்; விற்பனை செம தூள்! புறநகர் பகுதியில் தயாரிப்புப் பணிகள், 'ஜோர்' :நடவடிக்கையில் உணவு பாதுகாப்புத்துறை, 'கொர்'| Dinamalar

தமிழ்நாடு

கலப்பட டீ தூள்; விற்பனை செம தூள்! புறநகர் பகுதியில் தயாரிப்புப் பணிகள், 'ஜோர்' :நடவடிக்கையில் உணவு பாதுகாப்புத்துறை, 'கொர்'

Updated : பிப் 13, 2018 | Added : பிப் 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 கலப்பட டீ தூள்; விற்பனை செம தூள்! புறநகர் பகுதியில் தயாரிப்புப் பணிகள், 'ஜோர்' :நடவடிக்கையில் உணவு பாதுகாப்புத்துறை, 'கொர்'

கோவை:கோவை புறநகர் பகுதிகளில், கலப்பட டீ துாள் தயாரிப்பு பணிகளை தடுக்க, உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அன்றாடம் கூலி வேலை செய்பவர்களுக்கும், கடின உடல் உழைப்பு உள்ளவர்களுக்கும் புத்துணர்ச்சி தரும் பானமாக 'டீ' இருந்து வருகிறது. உணவு உட்கொள்ளாவிடினும், டீ குடித்து பசியை சமாளிக்கும் பலர் நம்மில் இருக்கின்றனர். இவர்களை நம்பியே பல்வேறு பகுதிகளிலும், டீக்கடைகள், பேக்கரிக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
டீ தயாரிப்புக்கு, தேயிலையிலிருந்து பெறப்பட்ட டீத்துாள் பயன்படுத்தப்படுகிறது. டீ நல்ல நிறத்திலும், வாசனையுடனும் இருந்தால் மட்டுமே தரமிக்க டீத்துாள் என, பலரும் நம்புகின்றனர். இதைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு சிலர், டீத்துாளில் நிறமிகள் மூலம் செயற்கையாக நிறம் ஏற்றுவது மற்றும் ரசாயனங்கள் மூலம் வாசனை சேர்ப்பது உள்ளிட்ட மோசடிகளை செய்கின்றனர். இவ்வாறு செயற்கையாக, நிறமி, வாசனை சேர்ப்பதால், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கோவை மாவட்டத்தில், பல ஆயிரம் டீக்கடைகள், பேக்கரிக்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தரமிக்க டீத்துாள் மற்றும் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என, விதிகள் கூறுகின்றன. இந்த பேக்கரி மற்றும் டீக்கடைகளை மையப்படுத்தி, போலியான பெயர்களில், கலப்பட டீத்துாள் தயாரித்து விற்பனை செய்வது சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கோவை புறநகர் பகுதிகளில், வாடகைக்கு வீடு மற்றும் அலுவலகங்களை தேர்வு செய்யும் மோசடி கும்பல்கள், அங்கு முதலில் குடித்தனம் செய்யும் போர்வையில் குடியேறுகின்றன. அதன் பின் மெல்ல தங்களது கலப்பட டீத்துாள் தயாரிப்பு பணியை மேற்கொள்ள துவங்குகின்றனர்.ஊட்டி, வால்பாறை போன்ற இடங்களில் டீ எஸ்டேட்களில் இருந்து, டீத்துாள் தயாரிப்பின் போது வெளியாகும், 'டஸ்ட்' எனும் கழிவுகளை வாங்கி வந்து செயற்கையாக நிறமிகள், வாசனை ரசாயனங்களை இத்துடன் கலக்கின்றனர். இவ்வாறு தயார் செய்யப்பட்ட டீத்துாள் பார்ப்பதற்கு முதல்தர டீத்துாள் போன்று இருக்கும். இதை கவர்ச்சிகரமான பொட்டலங்களில் பேக் செய்யாமல், சாதாரண பொட்டலங்களாக பேக் செய்து டீக்கடைகளுக்கு எடுத்து சென்று விற்பனை செய்கின்றனர்.
முதலில் டீக்கடைகளுக்கு செல்லும் இவர்கள் சாம்பிள் பாக்கெட்களை வழங்கி, அதை பயன்படுத்தச் சொல்வர். மேலும், பிரபல நிறுவனத்தின் பெயரை தெரிவித்து அந்நிறுவனத்தில் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்வதாகவும் கூறுகின்றனர். குறைந்த விலை, வாசனை, நிறம் ஆகியவற்றில் மயங்கும் டீக்கடை உரிமையாளர்கள், அதிகளவு கலப்பட டீத்துாளை வாங்கி, பயன்படுத்த துவங்குகின்றனர்.தொடர்ந்து இவர்கள் கலப்பட டீத்துாள் சப்ளை நடப்பதால், அதிலிருக்கும் ஆபத்தை டீக்கடை உரிமையாளர்கள் அறிவதில்லை. கலப்பட டீத்துாள் விற்பனை செய்பவர்களின் இலக்கு சிறிய அளவிலான கடைகள் மட்டுமே.
இவர்கள் பெரிய கடைகளுக்கு செல்வதில்லை. ஒரு சில பெரிய பேக்கரிக்கள், டீக்கடைகளிலும், தற்போது இவர்கள் தங்களது கால்தடத்தை பதித்திருப்பது தான் வேதனைக்குரிய விஷயம். இதை அருந்தும் வாடிக்கையாளர்களின் நிலை தான் கவலைக்கிடமாக மாறுகிறது. இத்தகைய கலப்பட டீத்துாள் தயாரிப்பு, விற்பனை சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவையின் புறநகர் பகுதிகளில் கலப்பட டீத்துாள் தயாரிப்பு கனஜோராக நடத்து வருகிறது.கலப்பட டீத்துாள் தயாரிப்பு மற்றும் விற்பனையை தடுக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
வியாபார நோக்கில் உணவு பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும் விற்பனையாளர்களுக்கு லைசென்ஸ் வழங்குவதில் தீவிரமாக உள்ள உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கலப்பட டீத்துாள் தயாரிப்பையும் கண்காணிக்க வேண்டும் என, கூறப்படுகிறது. கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்துறை உணவுப் பிரிவு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறுகையில், ''கலப்பட டீத்துாள் குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
''இருப்பினும் குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில், கலப்பட டீத்துாள் தயாரிப்பை மேற்கொள்வதால், அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்படுகிறது. கலப்பட டீத்துாள் தயாரிப்பு குறித்து தெரிந்தால், உணவு பாதுகாப்பு துறைக்கு, 94440 42322 என்ற, 'வாட்ஸ் ஆப்' எண் மற்றும் 0422 - 2220922 என்ற எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம். சோதனை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
கண்டறிவது எப்படி?
பாலில் கலக்கும்போது, நிறம் அதிகமாக கிடைக்க, டீ துாளில் ரசாயன நிறமிகள் அதிகம் கலக்கப்படுகின்றன. தரமான டீ துாள் மெதுவாக தண்ணீரில் கீழிறங்கும். மரத்துாள் போன்ற பொருட்கள் கலந்திருந்தால், தண்ணீரில் தனியாக மிதக்கும். தரமான டீத்துாளை சுடு தண்ணீரில் போட்டால் மட்டுமே தண்ணீரின் நிறம் மாறும். கலப்பட டீத்துாளை சாதாரண நீரில் போட்டாலே தண்ணீரின் நிறம் மாறும். சாதாரண நீரில் கலப்பட டீத்துாளை போடும் போது நீரின் மட்டத்தில் டம்ளரில் வளையம் ஏற்படும். இதன் மூலம் கலப்பட டீத்துாளை அடையாளம் காணலாம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X