சுரப்பிகளின் விளையாட்டை என்னென்று சொல்வது!| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சுரப்பிகளின் விளையாட்டை என்னென்று சொல்வது!

Updated : பிப் 14, 2018 | Added : பிப் 13, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
சுரப்பிகள் விளையாட்டு , லவ்வர்ஸ் டே, காதலர்கள் தினம், அன்பர்கள் தினம் , கார்ல் ரோஜர்ஸ், ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன், அட்ரினலின் சுரப்பி, game of glands, lovers day, dear day, Carl Rogers, Androgen, Estrogen, Adrenaline Gland,

கல்லாய்ப் பிறந்தால் காந்தக் கல்லாய்ப் பிற செடியாய்ப் பிறந்தால் தொட்டால் சிணுங்கிச்செடியாகப் பிறமனிதனானால் காதல் செய்.-- மகாகவி பாரதி

காதலர்கள் தினம் - காதலர்களே பெரும்பாலும் கொண்டாடுவதால் இது காதலர்கள் தினம்.லவ்வர்ஸ் டே - மேலை நாட்டுப் பண்பாட்டைத் திணிக்கும், அதை மிக அதிகமாய் வெளிக்காட்டிக் கொள்ளும் நாள். நினைவுப் பரிசுப் பொருட்களை விற்கும் மேல்தட்டு வணிகமயமாக்கலால்உருவான, லவ்வர்ஸ் டே!

அன்பர்கள் தினம் - காதலர்கள் தவிர பலதரப்பட்ட ஆண்களும், பெண்களும் தங்கள் அன்பை தெரிவித்துக் கொள்ளும் நாளாகவும் இது இருப்பதால், அன்பர்கள் தினம். எதிர்பாலினர் மீது அன்பு, ஆசை கலந்து ஒரு ஈர்ப்பு உண்டாகும் உணர்வை தான் காதல் என்கிறோம். இப்போது ஒரே பாலினர்களிடையேயும் இதே அன்பும் ஆசையும் உருவாகிறது என்பதும், அடிக்கடி காதில் விழுகிற செய்தி தான். 'அதுவும் காதல் தான்' என்பவர்கள் இருக்கும்வரை, அவர்களுக்கும் இது காதலர்கள் தினம் தான்.

பசி, துாக்கம், கோபம் போன்ற ஓர் இயல்பான உணர்வு இந்த காதல். உடலில் சுரக்கும் ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன், அட்ரினலின் சுரப்பிகளின் விளையாட்டு. மற்றவர் மீது உருவாகும், இனம்புரியாத, கண்மூடித்தனமான அன்பு, ஆசை என எப்படி வேண்டுமானாலும் பெயரிட்டுக் கொள்ளலாம். இதை விரும்பாதோர் யாருமில்லை.

தனி உலகம் இது. நம்மைத் தவிர அந்த உலகில் யாருமில்லை; உலகமே நம்மை மட்டுமே சுற்றி வரும்.டீன் ஏஜ் பருவத்தில் உடலும் மனமும் புதுமையை தேடும் ஏக்கத்தில் இருக்கும். கண்ணுக்கு அழகாக இருப்பவர்கள் அல்லது தைரியமாக முன்வந்து பேசுபவர்களை, மனம் விரும்பும். அதை காதல் என்று தவறாக நினைத்து, உடல், உள்ளம் உருகிப் போய் கிடப்போம்.

இந்த உலகில் வாழ ஒவ்வொருவருக்கும் ஒரு துணை தேவை. அது பெற்றோராய், கூட பிறந்தவர்களாய், நட்பாய், ஒரு குறிப்பிட்ட தேவைகளுக்கு, ஒரு குறிப்பிட்ட காலம் வரை வருவதாய் இருக்கும். ஆனால், கடைசி வரை துணையாக, எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள தேடும் ஒரு ஜீவன் தான், ஆணுக்கு பெண்ணும்; பெண்ணுக்கு ஆணும்.

இந்த இணை அளவிட முடியா அன்போடும், பாசத்தோடும் இருந்தால் காலம் இன்னும் கனிவாய் இருக்குமல்லவா! அதற்கான முன்னேற்பாடு தான் இந்த காதல். ஆண் - பெண் காதலுக்கும், பாசம் கலந்த, அப்பா - அம்மா - சகோதரர்கள் மீதான காதலுக்கும் இடையே, உணர்வு ரீதியான தெளிவான வேறுபாடுண்டு.

காதலை வெளிப்படுத்த நாள் - நட்சத்திரம் அவசியமில்லை. காதல் ஒரு நாளுக்குரியதுமில்லை. அது வாழ்வின் எல்லை வரை தொடர வேண்டிய ஒரு நல்ல விஷயம். ஆனால் எது காதல் என்பதில் தான், இங்கு ஆயிரம் பார்வைகள், ஆயிரம் மறுதலித்தல்கள், பிரச்னைகள், தீர்வில்லா தர்க்கங்கள்.

* முதல் பார்வையில் பார்த்தவுடன் காதல் - இது வெளி அழகை வைத்து வசீகரத்தை வைத்து மட்டும் வர வாய்ப்புகள் அதிகம்.
* நட்பினால் ஈர்ப்பு ஏற்பட்டு, பின் காதல் - உயிர் கொடுக்கும் அளவிற்கு நட்பில் கலந்து உருகி உருகி காதலிக்க தோன்றும் இந்த நட்பு காதல்.
* நீயில்லையென்றால் உலகமே இல்லை என்கிற தீவிர காதல் - நம்மைத் தவிர இவ்வுலகில் மற்றவர்களும் உண்டு என நினைப்பையே மறக்கடிக்கும் காதல் இது.
* காதல் செய்தே ஆகவேண்டும் என்று காட்டிக் கொள்ள நினைக்கும் பெருமைக்காதல் - தன் அந்தஸ்து, பொருள், இளமை, கவுரவம் ஆகியவற்றுக்கெல்லாம், இன்னுமொரு அந்தஸ்தாய் காதலை நினைக்கும் தன்மை.
* 'கணவன் - மனைவி ஆகிவிட்டோம்; இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டே ஆக வேண்டும்' என்ற கட்டாயக் காதல்.
* பார்த்து வியந்து பிரமிப்போடு தனக்குள்ளேயே வளர்த்துக் கொள்ளும் முட்டாள்தனமான காதல்.
* நீயும், நானும் உறவாகி விட்டோம்; அதனால் நீ என்னையும், நான் உன்னையும் காதலிக்க வேண்டும் என நினைக்க வைக்கிற, உறவுக் காதல்.
* இவற்றையெல்லாம் தாண்டியது தான், இயல்பான காதல். முதலில் நம்பிக்கையில் தொடங்கும்; பொறுப்புணர்வு முழுமையாக இருக்கும்; அதன் பின்னரே காமம் வரும். இந்த மூன்றும் சரியான விகிதத்தில் கலந்து இருப்பது தான் உண்மையான காதல் என, கிட்டத்தட்ட வரையறுக்கலாம்.

அன்பு, நம்பிக்கை, சுதந்திரம், காமம் என, எல்லாம் கலந்த ஆண் - பெண் உறவே காதலாகிறது. அப்படியில்லாமல், காதல் என்றாலே, வெறும் காமம் என்றோ அல்லது காமத்தை முழுமையாக கடந்த புனிதம் என்று சொல்வதோ தவறு.

காதல் இல்லாமல், இந்த கலியுகம் இல்லை. ஆனால் காதலிப்பது அவ்வளவு எளிதா என்றால், 'இல்லை; அது தற்கொலைக்கு சமம்' என்கின்றனர் அனுபவஸ்தர்கள். அதனால் தான் காதலிக்கும், 100ல் 10பேர் கூட, தன் காதலை திருமணத்தில் முடிக்க முடிவதில்லை.

வாழ்க்கையின் கஷ்டங்களிலிருந்தும், அதன் அர்த்தமற்ற நிலையிலிருந்தும், தப்பித்துக் கொள்வதற்குக் காதலைப் பயன்படுத்திக் கொள்வது அதிகரித்து விட்டது. 'நாம் ஈர்க்கப்பட்டது வெறும் இனக்கவர்ச்சியால் மட்டுமே. அறிவுப்பூர்வமாய் யோசித்து நாம் காதலில் விழவில்லை' என்று யோசித்த பிறகு, பெரும்பாலாேனார் விலகிக் கொள்கின்றனர்; இதுவும் சரி தான்.

நம் மனதை சுறுசுறுப்பாக வைக்க, காதலைத் தவிர வேற உணர்வுகளால் முடியாது. 'வாழ்க்கை இப்படி அலுப்பாய், சோர்வாய் இருக்கிறதே... மனதில் இனம் புரியாத ஏக்கம் உள்ளதே... செய்ய ஒன்றுமே இல்லையே...' என யோசிக்கும் போது தான், காதலிக்க ஆரம்பிக்கிறோம்.

காதல் என்கிற உணர்வு பெரும் நெருப்பு. இதயம் குளிர்காய இந்த நெருப்பு பயன்படப் போகிறதா, வீட்டையே தீப்பற்ற வைக்கப் போகிறதா என்பதை யாராலும் தீர்மானிக்க முடியாது.'இதெல்லாம் எங்கள் பிரச்னையில்லை. இதைப் பற்றி யோசிக்கவும் எங்களால் இயலாது' என்று தங்கள் பாட்டுக்கு காதலிப்பவர்கள் அதிகரித்தபடியே, காதலை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வாயிலாக, இன்னும் இளமையாய், இன்னும் வளமையாய், இன்னும் இன்னும் சுவாரசியமாய் வளர்கிறது காதல் என்பது மட்டும் உண்மை.


காதல்ன்னா சும்மா இல்லே...!


கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்தபடியாக, வாழ்த்து அட்டை அனுப்புவதில் இரண்டாவது இடத்தில் உள்ள கொண்டாட்ட தினமான, வாலன்டைன்ஸ் தினத்திற்கு, உலகம் முழுவதிலும் வருடத்திற்கு ஏறத்தாழ ஒரு பில்லியன் வாலன்டைன்ஸ் அட்டைகள் அனுப்பப்படுவதாக அமெரிக்க வாழ்த்து அட்டை அமைப்பு கணக்கிட்டுள்ளது.
3,50,00,000 இருதய வடிவம் கொண்ட சாக்லெட் பெட்டிகள்
18,90,00,000 சிவப்பு ரோசாப்பூக்கள்
14,50,00,000 வாழ்த்து அட்டைகள்
இது, அமெரிக்காவில் ஒரு காதல் தினத்தின் புள்ளி விபரம். செமையா இருக்கு தானே!!தமிழன் என்று சொல்லடா!!!
காதலர்கள் தினம் மேற்கத்திய திருவிழா என்று நினைத்திருப்பதை, அறியாமை என்கிறது ஒரு வரலாற்று சான்று. 2500 ஆண்டுகளுக்கு முன், இந்திர விழா, காதல் விழா, காமன் விழா என்ற பெயர்களில், காதலர் தினம் கொண்டாடப்பட்டிருந்தது.


இது தான் காரணமாம்...!


கடந்த, 270ம் ஆண்டில், ரோமப் பேரரசை ஆண்டு வந்த அரசன் கிளாடிஸ், தன் போர் வீரர்கள், திருமணம் செய்து குடும்பமாக இருந்தால், போர் செய்வதில் தீவிரம் காட்ட மாட்டார்கள் என்ற காரணத்தால், அவர்களை கல்யாணம் செய்துக் கொள்ளக் கூடாது என சட்டம் இட்டான்.
ஆனால், பிஷப் வாலன்டைன்ஸ் என்பவர், அரசனின் கட்டளைக்கு எதிராக திருட்டுத்தனமாக பல போர் வீரர்களுக்கு, திருமணம் செய்து வைத்தார். இதனால், சிறையில் அடைக்கப்பட்டு, வாலன்டைனுக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அந்த நாள், பிப்ரவரி 14! இதைத் தான் நாம், 'வாலன்டைன் டே' எனக் கொண்டாடுகிறோம்.


அர்த்தமுள்ள காதல் மதம்


கார்ல் ரோஜர்ஸ் என்ற உளவியலாளர், மனிதனின் குண நலன்கள் மற்றும் ஆளுமைகள் மாறியபடி இருக்கின்றன. ஏனெனில், மாறிக் கொண்டே இருக்கும் உலகில், மனிதன் வாழ்கிறான் என்று சொல்லியிருப்பது, இன்றைய காதலுக்கு, மிகப் பொருத்தமாய் அமைந்து விடுகிறது.காதல் அழியாது என்று சொல்ல உதவுவது, இந்தக் காதலர் தினம் தான்.


அதெல்லாம் அந்தக்காலம்


தான் விரும்பிய பெண் தனக்கு கிடைக்கவில்லையென்றால் ஆண் மடலேறுவது, அந்தக் கால பழக்கம். இந்த காலத்தில் தனக்கு கிடைக்காத பெண் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது எனச் செயல்படுவது, பழக்கமாகி விட்டது.

மனித சமூகத்தை ஆட்டிப் படைக்கும் பணம், பதவி, புகழ் இவற்றையெல்லாம் விட, காதல் மேன்மையான உணர்வு. தாயுணர்வையும் தாண்டியது தான் இந்த காதல் உணர்வு.அப்பா, அம்மாவை தேர்ந்தெடுக்கும் உரிமை எப்படி நமக்கில்லையோ, அது போல, இவரிடம் தான் காதல் வர வேண்டும் என்பதை வரையறுக்க முடியாது.

காதல் உணர்வுக்கு, எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. பருவத்திலும், பருவம் தாண்டியும் தோன்றி, மரணத்தையும் தாண்டி நிலைக்கும் காதல். ஏதோ ஒரு சமயத்தில் நமக்கு ஆறுதலாக இருந்த உறவுகள், ஆயுள் முழுவதும் நம்முடன் ஆறுதலாக இருப்பர் என்று கண்மூடித்தனமாக நம்பிக்கை வைப்பது, நம் முட்டாள்தனமே. இதனால் நடத்தப்படும் கொலைகளும், தற்கொலைகளும், வன்முறையும், தடுக்கப்பட வேண்டும்.
காதல் நகரம் காதலர் தினத்தைக் குறிக்கும், வாலன்டைஸ், லவ்லேண்ட் என்ற பெயரிலும் அமெரிக்காவில் நகரங்கள் உள்ளன.

முதல்,'கார்டு' இங்கிலாந்தில், 1415ல், 'டியூக் ஆப் ஆர்லீன்ஸ்' மன்னர், பிரான்ஸ் நாட்டிலிருந்த தன் மனைவிக்கு, தானே வாழ்த்து அட்டையைத் தயார் செய்து, அதில், ஒரு காதல் கவிதையை எழுதி அனுப்பினார். இதுதான் முதல் காதலர் தின வாழ்த்து அட்டை!
உண்மையான காதல் பெண் என்பவள் வெறும் உடல் மட்டும் தான் என்ற சிந்தனையை, சமூகத்தில் இருந்தும்; தங்கள் உடல் குறித்த பயத்தையும், பெருமிதத்தையும், பெண்களிடமிருந்தும்; பெண் என்றால் ஏற்படும் ஒரு மாயையான பிரமிப்பை, ஆண்களிடமிருந்தும் பிரித்தெடுக்கும் போது தான், உண்மையான காதலுக்கு உருவம் உண்டாகும்.
அவரவர் விருப்பம் காதலோ, காதலர் தினமோ நமக்கு பிடிக்காமல் இருக்கலாம். அது நம் விருப்பம்; உரிமை. அதேபோல், பிறர் காதலிப்பதும், அவரவர் உரிமை. காதலர் தினம் கொண்டாடுவதும், அவரவர் உரிமை. இதில் தலையிடுவதோ, நம் காதல் மறுப்பு கொள்கையை திணிப்பதோ சரியாக இருக்காது. முக்கியமாக, வன்முறையாக தம் எதிர்ப்பைக் காட்டுவது, மிக மிகத் தவறு. ஒரு பெண்ணின், ஆணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலியவை பற்றி, மற்றொரு பெண்ணோ, ஆணோ பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்ப்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமை கிடையாது.
அடையாளம் காதலர் தினத்தின் அடையாளமாக பலரும் நினைப்பது வில், அம்பு மற்றும் இறக்கையுடன் கூடிய குழந்தை. அதன் பெயர், 'கியூபிட்!' ரோமானியர்களின் காதல் தெய்வம் வீனஸ் மற்றும் போர் தெய்வம் மார்ஸ்சின் குழந்தை தான், 'கியூபிட்' என, இதற்கு ஒரு புராணக் கதை கூறப்படுகிறது. பிப்ரவரி காதல் திருவிழாவின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
சிறந்த இடம் உலகம் முழுவதும் காதலர்கள் உள்ளனர். ஒவ்வொரு காதலரும், இத்தினத்தை ஒவ்வொரு விதமாக கொண்டாடுகின்றனர். சிலர் விரும்பிய இடங்கள், விரும்பிய பொருட்கள், உணவு என பரிசளிக்கின்றனர். இந்தியாவில் காதலர்கள் அதிகம் விரும்பும்
இடங்கள்: ஷில்லாங் - - மேகாலயா, கோவா -- கோவா, உதய்பூர் -- ராஜஸ்தான், ஊட்டி - - தமிழகம், ஸ்ரீநகர் -- காஷ்மீர்.


காதல் ஜோசியம்


மேஷம் - நிச்சயம் காதலிப்பர்; காதலிக்கப்படுவர். காதலிக்க ஏற்ற குணம். எண்ணம் முரண்டு பிடிக்கும்.
ரிஷபம் - எளிதில் கவர்ந்து காதலிக்க வைக்கப்படுவதில் கில்லாடி. தூய்மையான காதலுக்கு சொந்தக்காரர்.
மிதுனம் - தங்களையே காதலிக்கும் இயல்பு குணம் உண்டு. பிற காதலை ஏற்க, ரொம்ப யோசிப்பர்.
கடகம் - வேண்டாமென ஒதுங்கிப் போய் விடுவர். தானாக தவிர்ப்பதால், தோல்வியிலிருந்து தப்பித்துக் கொள்வர்.

சிம்மம் - காதலை மகத்துவமாய் எடுத்துக் கொள்வர். இதயத்தில் இருக்கும் சிறந்த காதலை, வெளிப்படுத்த தெரியாது.

கன்னி - அன்போடு, கடமை உணர்வும் கொண்டவர்கள்; யோசித்தே காதலில் ஈடுபடுவர்.
துலாம் - கை வந்த கலை, காதல். எளிதாக காதல் வாய்க்கும்; ஆனால் திருமணத்தில்முடியாது.

விருச்சிகம் - காதலை அதிகம் காதலிப்பர்; தன்னை பிறர் காதலிக்க வேண்டும் எனகாத்திருப்பர்.

தனுசு - திறமையாக காதலை கையாண்டு, வெற்றி பெறுவர்; ஆயுள் முழுவதும், காதலிலேயே வாழ்க்கையை செலவழிப்பர்.

மகரம் - காதல் இல்லாமல் இருக்க முடியாதவர்; காதலுக்கு முக்கியத்துவம் தரக்கூடியவர்.

கும்பம் - உண்மை, உயிர் என காதலை கொண்டாடுபவர்; புரிந்து கொள்வதும்,புரிந்திருப்பதுமே காதல் என நம்புவர்.

மீனம் - அன்பும், பொறுமையும் நிலைத்திருப்பது போல், காதலும் அதில் வெற்றியும் நிலையாய் பெறுபவர்; அன்பிற்காக அனைத்தையும் இழப்பவர்.
-- ம.வான்மதி -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - kerala,இந்தியா
14-பிப்-201811:36:07 IST Report Abuse
rajan காதல் வேறு காமம் வேறு. காதல் ஆத்மார்த்தம் சார்ந்தது, காமம் உடல் கூறு சார்ந்தது. காதல் சமூகம் சார்ந்தது காமம் குற்றம் சார்ந்த செயல். இதை புரிந்து கொண்டாடு.
Rate this:
Share this comment
Cancel
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
14-பிப்-201809:55:35 IST Report Abuse
Muthukrishnan,Ram இந்த காதலர் தினம் என்ன வென்று சொல்வது? இஷ்ட பட்ட கழுத்தை கஷ்டப்பட்டு போகட்டும். ஆனால் இதை ஒரு திருவிழாவாக வைத்து நல்ல அதாவது அந்த சிந்தனையே இல்லாத படித்து சாதிக்க வேண்டும் என்ற பிள்ளைகளையும் இந்த (காதல்) விஷயத்தை பற்றி சிந்திக்க வைத்து, அந்த ஊறுகாயில் அப்படி என்ன தான் டேஸ்ட் நாமும் ஒரு நாள் நக்கி பார்ப்போமே என்ற ஆவலை தூண்டுவதாக இந்த நாள் அமைவதால் (இந்த காதலர் தினத்தை வன்மையாக கண்டிக்கிறேன்) என்னுடைய இந்த பதிவை எதிர்ப்பவன் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு சிந்திக்க ஒரு சொல். நாம் மாணவனாக வாலிப வயதில் இருக்கும் பொது, ஊரார் வீட்டு பெண்ணை கட்டிப்பிடிக்கும் போது சுகமாகத்தான் இருக்கும் ஆனால் நாம் கல்யாணம் செய்து ஒரு பெண் பிள்ளையை பெற்று நம்ம கண் முன்னாடி ஊர் பேர் தெரியாதவன் கட்டிப்பிடிக்கும் போது அன்று நாம் கண்ட அதே சுகம் இன்று எப்படி இருக்கும். வயிறு எரியும் தானே? அதனால் தான் அந்த கண்ராவி (கா) தினம் நம் நாட்டுக்கு ஒத்துவராது. விருந்தாளி வீட்டுக்கு வந்தால் கை எடுத்து கும்பிட்டு வரவேற்க்கணும். ஊரான் பொண்டாட்டிய கட்டி பிடித்து முத்தம் கொடுத்து வரவேற்றும் கலாசாரம் நமக்கு ஒத்து வராது. இந்திய நாகரீகத்துக்கு குறிப்பாக தமிழ் பண்பாட்டுக்கு விரோதமான கொள்கையை நாம கடைபிடிக்க வேண்டுமா? ( இந்த கமெண்ட் சிரிப்பதற்கோ, வெறுப்பதற்கோ, அல்ல சிந்திப்பதற்கு. )
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை