பொதுநலன் போற்றுவோம்!| Dinamalar

பொதுநலன் போற்றுவோம்!

Added : பிப் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

'அப்பா! சத்யா எதுவுமே கொடுக்காம எல்லாத்தையும் தின்னுட்டான்' என்ற புகாருடன் ஓடி வந்தாள் மகள் லீலா. 'அப்பா! எழுத பென்சில் கேட்டேன். 'என் பென்சில்'ன்னு சொல்லி அக்கா தரவே இல்லை. அதான் அவளுக்கு கொடுக்காம பால்கோவாவை அப்படியே தின்னுட்டேன்' என்றான் சத்யா. இப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் சத்யாவை அடிக்க கை ஓங்கினாள். சண்டை துவங்கியது. இது என் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி மட்டுமல்ல. அனேகமாக எல்லோர் வீடுகளிலும் இந்த கதை நடக்கவே செய்கின்றது.'நான்', 'எனது' என்ற வார்த்தைகள் குழந்தைகளிடம் அதன் உண்மைப்பொருள் உணராமலே அவர்களால் பேசப்படுகின்றன. இவ்வார்த்தைகள் பாசாங்காக குழந்தைகளிடையே அதன் பொருள் உணராமலே பேசப்பட்டு 'சுயநலம்' என்ற பெருஉருவாக மாறி, வாழ்வில் துயரத்தை கொடுப்பவையாக அமைந்துவிடுகின்றன. 'நான்', 'எனது' என்ற சுயநலத்தைத் துறந்து பொதுநலனை ஏற்பவர்கள், துயரம் தொடாத மகிழ்ச்சியை எட்டி, மரணத்தை வென்று விளங்குவார்கள் என்கிறது சாஸ்திரம். பிறருக்கு ஒதுக்கப்பட்ட பொருளை அது அமிர்தமாக இருந்தாலும் தின்னக்கூடாது என்பதை குழந்தைகளிடம் எடுத்துரைக்க வேண்டும். பிறர் பொருளின் மீது ஆசை வந்தால் அது தீமையை தரும் என்பதை குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.அதனையே திருவள்ளுவர்,'இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னும் செருக்கு' என்கிறார்.அதாவது பிறர்பொருளை விரும்புவது அழிவைத் தரும்; விரும்பாமை வெற்றியைத் தரும்.முல்லா கதைமுல்லா தன் வீட்டுக் கொல்லையில் துணிகளைக் காயப் போடுவதற்கு விலை உயர்ந்த புதிய கயிறுகளை வாங்கியிருந்தார். அதில் துணிகளைக் காயப் போட்டு வந்தார். இதை கவனித்த பக்கத்து வீட்டுக்காரர் ஒரு நாள் முல்லாவிடம், 'உங்கள் துணிக் கொடியை கொஞ்சம் இரவலாகக் கொடுக்க முடியுமா? நாளை தந்து விடுகின்றேன்' எனக் கேட்டார். 'மன்னிக்கவும். அதில் நான் கோதுமையைக் காயப் போட்டிருக்கின்றேன். தர இயலாத நிலையில் இருக்கின்றேன்!' எனப் பதில் தந்தார்.'என்னது? கொடியிலே யாரவது கோதுமையைக் காயப் போடுவார்களா? இப்படியும் நடக்குமா?' என அதிர்ந்து பக்கத்து வீட்டுக்காரர் கேட்டார்.அதற்கு முல்லா சொன்னார், 'ஒரு பொருளை ஒருவருக்கு இரவல் கொடுக்க விருப்பம் இல்லாதபோது இப்படியும் நடக்கும்; எப்படியும் நடக்கும்!'.இது முல்லா கதை மட்டுமல்ல. யதார்த்த நிலை. குழந்தைகள் முதல் பெரியவர் வரை பிறர் வைத்துள்ள புதிய பொருள்களைப் பார்த்தவுடன் ஆசைக் கொண்டு இரவல் கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். 'இல்லை' என்று எப்படியும் மறுப்பதையும் வழக்கமாகவே இருப்பவர்கள் கொண்டுள்ளனர். பொதுநலன் பிறர் பொருளுக்கு ஆசைப்படாது. சுயநலன் என்ற பேராசை, பொருள் வைத்திருப்பவருக்கு தெரியாமல் கவர்வதற்கு முயற்சிக்கிறது. அதனால் ஏற்படும் இழுக்கு மோசமானது என்பதை உணராமலே தவறு செய்ய வைக்கின்றது.
சுயநலன் : பொதுநலன் என்பது உலக நன்மைக்காக தன்னையே பலியிடும். சுயநலன் என்பதோ தனக்காக உலகத்தையே பலிகொடுக்கத்தயாராகும். பொதுநலன் தன்னலம் அற்றது, உயரியது. சுயநலன் என்பது போலியானது, பாசாங்கானது. ஒவ்வொரு மனிதனும் பொதுநலனுடன் செயல்பட வேண்டும். தனிமனித செயல்பாடு பொதுநல நிறைவை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும் என்கிறது ஸனாதனம். ஆனால், இன்று மனிதனின் எண்ணம், பேச்சு, செயல் எல்லாமே பாசாங்காக மட்டுமே இருக்கின்றன.உதாரணத்திற்கு, ஒரு கதையை பார்ப்போம்.ஒரு மனிதன் படகுப் பயணம் சென்றான். அவன் பயணம் மேற்கொண்ட கடல் அமைதியானது. திடீரென்று ஒரு குட்டிச் சுறா அவனை நோக்கி பாய்ந்து வந்தது. வந்த வேகத்தில் படகை ஓங்கி அடித்தது. அவன் படகிலிருந்து எறியப்பட்டான். அந்தரத்தில் பறந்தான். கீழே வாயைப் பிளந்தபடி குட்டிச் சுறா காத்திருந்தது. 'கடவுளே! காப்பாற்று' என்று கத்தினான். உடனே கடவுள் அவனை அந்தரத்திலே நிறுத்தி வைத்தார். காப்பாற்றினார்.உயிர்பிழைத்தவன் கேட்டான், 'கடவுளே உன் மேல் உள்ள நம்பிக்கைதான் என்னைக் காப்பாற்றியுள்ளது. அதே போல், அந்தக் குட்டிச் சுறாவுக்கும் நம்பிக்கையைக் கொடு. அப்போதுதான் என்னை விழுங்காது'.அவன் கேட்டபடி சுறாவுக்கு நம்பிக்கையைத் தந்து மறைந்தார். அவர் மறைந்ததும் உற்சாகமாக கத்தினான், 'இறைவா இந்தச் சுறாவை இரையாகத் தந்தமைக்கு நன்றி'. இப்படித்தான் இறை நம்பிக்கையும் தன்னலம் கொண்டதாக அமைந்துவிடுகின்றது. சுயநலத்தில் உருவாகக் கூடிய பக்தியும் தீமைத்தரக்கூடியதே.ஆசையை அறுத்தால்சூரியன், காற்று, மழை என எல்லாம் எல்லோருக்கும் பொதுவாகச் செயல்படுகின்றன. இயற்கை பொதுநலமாக செயல்பட்டு, நாம் வேண்டாமலே நமது சுயநலத்தைப் பூர்த்தி செய்துவிடுகிறது. படைப்பின் தத்துவமே பொதுநலன் எனும் குறிக்கோளில் செயல்படுகிறது. தனிமனிதனின் சிந்தனை வளர்ச்சிக்கு, அவனது பொதுநலனே அளவுகோள். மனிதன் பொதுநலன் கொண்டு செயல்படுவது நல்லது. அது, அவனது சுயநலனின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கும்.அன்பு, காதல், இரக்கம், பாசம் போன்ற எதுவாயினும் நோக்கம் தன்னலமற்றதானால் மட்டுமே அவை உயரிய நலன்கள் நல்கும். சுயநலம் தோன்றவும் வலுவடையவும் ஆசைகளே காரணம். ஆசைகள் இன்பத்தை சுவைக்கும் தகுதியை இழக்கச் செய்கின்றன. ஆசையை அறுத்தால் சுயநலம் மறைந்துவிடும். பொதுநலன் முளைத்துவிடும்.இளவரசர் யார் என்ற போட்டி ஏற்பட்ட போது, பீஷ்மர் நாட்டை இரண்டாக பிரிக்க முடிவு செய்தார். ஹஸ்தினாபுரத்தை துரியோதனுக்கும், காண்டவப் பிரஸ்தத்தை தருமனுக்கும் அளிக்க முடிவெடுத்தார். இதனை திருதராஷ்டிரன் தருமனிடம் கூறியபோது, 'நாட்டைப் பிரிக்கப் போகிறீர்களா பெரியப்பா? வேண்டாம். நாட்டின் என் பங்கினையும் சேர்த்து துரியோதனனுக்கே கொடுத்து விடுங்கள்.
பிரிவினையால் எல்லைகள் குறுகும். பலம் குன்றிவிடும். சாம்ராஜ்யத்தின் கட்டுக்கோப்பே சிதைந்துவிடும். யார் மன்னனானால் என்ன? தம்பி துரியோதனனே நாடாளட்டும்' என்றான்.தருமனிடம் தன்னலமற்ற பொதுநலன் இருந்தது. ஆகவே அவனால் நாட்டையே விட்டுக் கொடுக்க முடிந்தது.பாண்டவர்களை அரக்கு மாளிகைக்கு துரியோதனனால் நேரிடையாக போகச் சொல்ல முடியவில்லை. அதனால் மறைமுக சூழ்ச்சிகளை அவன் நாடினான். அவர்களின் அஞ்ஞாத வாசத்தை உடைக்க விராட நாட்டின் மீது போர் தொடுக்கவும், மறைமுக சமாதானங்களையும் பொய்க்காரணங்களையும் நாடினான். அவன் நோக்கில் அதர்மம் இருந்தது. அதர்மம் எப்போதும் தோல்வியையே தழுவும். பொதுநலன் எப்போதும் தர்மத்தையே நாடும்.'உனது வாழ்க்கைப் பயணம் நல்லவர்களோடு இணைந்து தொடரட்டும். அது, உனது சுயநலனை பொதுநலனாக மாற்றிவிடும்' என்கிறார் ஆதிசங்கரர்.சுயநலமே இன்று நடக்கும் அனைத்து அட்டூழியங்களுக்கும் காரணமாக இருக்கிறது. விவாகரத்து, போட்டி, பொறாமை, பகை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு அத்தனையிலும் சுயநலத்தின் பங்கு உள்ளது. ஆகவே, நமது குழந்தைகளை சுயநலம் அற்றவர்களாக வளர்ப்போம். அவர்கள் மனதில் பொதுநலன் என்ற விதையை விதைப்போம்.கங்கோத்ரியில் ஒரு பாறைப் பிளவில் உருவாகிப் புறப்படும் கங்கை நதிதான், பிரமாண்டமாக வளர்ந்து பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆகவே, சிறிய அளவில் பிறருக்கு உதவுதல் எனும் பண்பை மனப்பிளவில் விதைப்போம். அதுவே பிரமாண்ட பொதுநலன் என்ற நதியாக பெருக்கெடுக்கும். தலைக்காவிரியில் ஒரு கையளவு ஊற்றிலிருந்து கிளம்பும் காவிரிதான் பின் பல மாநிலங்களினுாடே பரவி ஓடும் மாபெரும் நதியாகிறது. ஒரு கைப்பிடி சோற்றை பிறருக்கு கொடுத்து உண்ணும் பண்பை குழந்தைப் பருவத்தில் இருந்து வளர்ப்போம். அதுவே பொதுநலன் என்ற பெருநதியாக வாழ்க்கையில் பெருக்கெடுத்து வாழ்வில் இன்பத்தை கொடுக்கும். பொதுநலன் எனும் உயர்நலன் போற்றுவோம்.
-க.சரவணன்தலைமையாசிரியர், டாக்டர் டி.திருஞானம் துவக்கப் பள்ளி, மதுரை99441 44263

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா
18-பிப்-201807:42:46 IST Report Abuse
Sukumaran Sankaran Nair தலைமை ஆசிரியர் க.சரவணன் அவர்களுக்கு,வணக்கம் பல. பொது நலன் பற்றிய விளக்கம் மிக அருமை 'ஆன்மிகத்தைப் பிரதிபலித்தல்' (Reflection of Spirit) என்ற பாட(book 1) போதனையிலிருந்து 'துடிப்புமிக்க சமூகத்தை நிறுவுதல் '(Building a Vibrant Community)வலியுறுத்தப்படும் பொது நல அரசு(Commonwealth of Nation)க்கான தீவிர போதனை திட்டங்கள் இன்று உலக முழுவதுமான மக்களுக்காக முறையாக (tamic Teaching Programme) பஹாய் ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் நடைபெற்று வருகிறது . அதில்,குறிப்பாக 'கலந்துரையாடல்' (Consultation) எப்படி நடத்தப்படவேண்டுமென்பதை விளக்கும் பிரிவுகளை ஆன்மிக கல்வி வட்டம் மூலம் உளகளாவிய ஆன்மிக விழிப்புணர்வு பெறுவதற்காக பயின்றுவிக்கப்படுகிறது..தங்கள் விளக்கம் எங்களுடைய புரிதலுக்கு மிகவும் துணையாக பயன்படுகிறது தங்களுக்கு பஹாய்கள் சார்பாக நன்றியையும்,பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X