பத்திரப் பதிவு செய்ய முடியாமல் ஊழியர்கள்... திணறல்! மந்தகதியில் நடந்ததால் மக்கள் கடும் அவதி | Dinamalar

தமிழ்நாடு

பத்திரப் பதிவு செய்ய முடியாமல் ஊழியர்கள்... திணறல்! மந்தகதியில் நடந்ததால் மக்கள் கடும் அவதி

Added : பிப் 15, 2018
பத்திரப் பதிவு செய்ய முடியாமல் ஊழியர்கள்... திணறல்! மந்தகதியில் நடந்ததால் மக்கள் கடும் அவதி

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் ஆன்-லைனில் பத்திரப்பதிவு செய்வதில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதால், அதிகாரிகள் பொது மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி வருகின்றனர்.

பதிவுத் துறையில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்பதற்காக ஆன்-லைன் பத்திரப்பதிவைக் கடந்த 12ம் தேதி சென்னையில் முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து 13ம் தேதி முதல் தமிழகத்திலுள்ள அனைத்து பதிவுத்துறை அலுவலகங்களிலும் ஆன்-லைனில் பத்திரப்பதிவு செய்யும் பணி துவங்கியது.

ஆனால், அதற்கேற்றாற்போல இணையதளம் வசதி வேகம் குறைவாக இருந்ததால் முறையாக பதிவு செய்ய முடியவில்லை. ஆன்-லைனில் பத்திரப்பதிவு செய்யும் பணியை டி.சி.எஸ்., சாப்ட் வேர் கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவின்போது ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் இடர்பாடுகளைக் களையவும், பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும் 1800 1025174 என்கிற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டது.

அந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் போனை எடுப்பதில்லை. இதனால் அதிகாரிகள், பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். நேற்று மாவட்டம் முழுவதும் பத்திரப்பதிவு மந்த நிலையிலேயே நடந்தன. ஒவ்வொரு அலுவலகத்திலும் ஓரிரு பத்திரங்கள் மட்டும் ஆன்-லைனில் பதிவு செய்யப்பட்டன.

இது குறித்து தமிழ்நாடு ரியல் எஸ்டேட் உரிமையாளர் மற்றும் முகவர் சங்கச் செயலர் அசோகன் கூறுகையில், 'ஆன்-லைனில் பத்திரப்பதிவு செய்வதற்கு ஊழியர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்க வேண்டும். இணைய தளம் மிகுந்த வேகம் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் பத்திரப்பதிவு முறையாக செய்ய முடியும். நேற்று கடலுார் ஜாயிண்ட் 1, 2 அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்காக கொடுத்துவிட்டு காத்திருந்தோம். ஆனால் பதிவு செய்ய முடியவில்லை. காரணம் கேட்டால் சென்னையில் உள்ள அதிகாரிகளைப்போய் கேளுங்கள் என்று பதிலளிக்கின்றனர்' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X