தமிழ் என்றால் இனிமை இன்று உலக தாய்மொழி தினம்| Dinamalar

தமிழ் என்றால் இனிமை இன்று உலக தாய்மொழி தினம்

Added : பிப் 21, 2018
Advertisement
 தமிழ் என்றால் இனிமை  இன்று உலக தாய்மொழி தினம்

மொழி நம் பண்பாட்டின் விழி. மொழியில்லாத வாழ்க்கை ஒளியில்லாத வாழ்க்கை. மூச்சைப் போல் மொழியும் முக்கியம்.


பேச்சைப் போல் அதில்உள்ளுறைந்து வாழ்வின் வழியை நமக்குக் காட்டும் தாய்மொழி அதைவிட முக்கியம். அறிதலுக்கும் தெரிதலுக்கும் புரிதலுக்கும் உணர்தலுக்கும் ஆராய்தலுக்கும் காரணமான உயிர் ஊடகம் மொழிதான். மனித இனத்தின் நாகரிகத்தின் அடையாளம் மொழி. பண்பாட்டின் அடையாளம் தாய்மொழி. தாயிடம் இருந்து கற்கும் மொழி தாய்மொழி. தாயாக நம்மைக் காக்கும் மொழி தாய்மொழி.

தமிழ்க்குடியின் நீண்ட வரலாறும் அதன் தொன்மையும் தொடர்ச்சியும் நம் தாய்மொழியில்தான் பொதிந்து வைக்கப்பட்டுள்ளது. '5000 ஆண்டு பழமை உடைய ஹராப்பா, மொகஞ்சாதரோ புதைபொருட்களில் இடம்பெற்றுள்ள உருவ எழுத்துகள் தமிழ் எழுத்துகளே' என அறிஞர்கள் கருதுகின்றனர். தமிழ் எழுத்துமொழி மூவாயிரம் ஆண்டுகள் பழைமையானது எனக்கொண்டால், தமிழ்ப் பேச்சுமொழி ஐயாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று புரிந்துகொள்ளலாம்.
திராவிட மொழிக்குடும்பத்தின் தாயாகத் திகழ்வது தமிழ்தான் என்றும், தமிழில் இருந்துதான் திராவிட மொழிகள் தோன்றின எனவும் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.


தாய்மொழிஅறிவின் வளர்ச்சி தாய்மொழியால் மட்டுமே சாத்தியம். தாய்மொழியே நம் அடையாளம், பண்பாட்டின் நீட்சி. சிந்தையில் விந்தையை ஏற்படுத்தும் ஆற்றல் தாய்மொழிக்கு மட்டுமே உண்டு. மக்களால் பேசப்படாத மொழி மரித்துப் போகிறது. உலகில் இரண்டு வாரங்களுக்கு ஒரு மொழி வழக்கிழந்து அழிந்துபோகிறது. மொழியின் உயிர்ப்பு மக்கள் பயன்பாட்டில் இருக்கிறது.
நோபல்பரிசு பெற்ற தாகூரின் 'கீதாஞ்சலி' அவர் தாய்மொழியான வங்கமொழியில்தான் முதலில் எழுதப்பட்டது. மகாத்மா காந்தி சுயசரிதையை, தாய்மொழியான குஜராத்தியில்தான் முதலில் எழுதினார். நம் சிந்தனைகளை தாய்மொழியில் மட்டுமே தங்குதடையில்லாமல் நம்மால் தரமுடியும்.

மூவாயிரம் ஆண்டுகளாக தமிழ் மொழி, மக்களால் பேசப்பட்டும் எழுதப்பட்டும் இந்த நுாற்றாண்டிலும் இளமையாகவும் இனிமையாகவும் உயிர்ப்போடும் இருக்கிறது. உலக நாடுகளில் 90 மில்லியன் மக்களாலும் பேசப்படும் மொழியாக நம் அன்னைத் தமிழ் திகழ்கிறது.
எத்திசையும் புகழ் மணக்க எல்லோராலும் விரும்பப்படும் மொழியான நம் தாய்மொழியில் பேசும்போது, நமக்குக் கிடைக்கும் இன்பம் கொஞ்சநஞ்சமா?'என்றுமுள தென்தமிழ்' என
கம்பரால் புகழ்ந்து பாராட்டப்பட்ட தமிழ் பழமையானது. தமிழ் பேசினாலும் கேட்டாலும் இனிமை தரும் மொழியாய் திகழ்வதால் மகாகவி பாரதியார், 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என பாடியுள்ளார். தமிழ் எனும் சொல்லின் பொருள் இனிமை என்பதாகும்.
ஆங்கில வழிப்பள்ளிகளில் நம் குழந்தைகள் பயிலத்தொடங்கிய பின் தமிழில் எழுதுவதும் பேசுவதும்கடினமாக மாறத்தொடங்கியது. 'பத்து' என்று சொன்னால் புரியாத நிலையில் 'டென்' என்று சொல்லிப் புரியவைக்க வேண்டியுள்ளது. மலேஷிய நாட்டில் தாய்மொழியோடு தங்கள் வேரறுந்து போகாமல் இருக்க ஐநுாறுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகளை நடத்துகிறார்கள். இங்கிலாந்து நாட்டில் இருபது தமிழ் அமைப்புகள் இணைந்து வாரவிடுமுறை நாட்களில், புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளுக்காகமுறையாக வகுப்புகள் நடத்தி தமிழுணர்வை ஊட்டி வருகின்றன. பிறமொழி பேசும் மக்களுக்குத் தமிழ்ப் பயிற்சி தரும் தமிழ்ப் பள்ளிகளை உலகெங்கும் நாம் உருவாக்கவேண்டும்.


நாம் செய்யவேண்டியது என்ன'தகுதி உள்ளதே தப்பிப் பிழைக்கும்' என்ற டார்வினின் கோட்பாட்டின்படி, மனிதன் தப்பிப் பிழைப்பதன் காரணம், காலத்துக்கேற்பத் தன்னை மாற்றி நவீனமயமாக்கித் தற்காத்துக் கொண்டதுதான். பல்லாயிரம் ஆண்டு இலக்கிய, இலக்கண வரலாறு பெற்றது தமிழ். ஆனாலும் இணையத்தின் இதயத்தில் இடம்பெற்ற இணையற்ற மொழியாக தமிழ் திகழ்வதன் காரணம் அந்தந்த காலத்தின் மாற்றங்களை ஏற்றுத் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே வருகிறது.இலக்கியங்கள் குறித்த ஆய்வுகள் நடைபெற்ற அளவுக்கு, வட்டாரப்பேச்சு வழக்கு பற்றிய ஆய்வுகள் நடைபெறவில்லை.

திருநெல்வேலிதமிழுக்கும், மதுரைத் தமிழுக்கும், சென்னைத் தமிழுக்குமான ஒப்பியல் ஆய்வுகள், வட்டார வழக்குச் சொல்லகராதி தொடர்பான ஆய்வுகள் தமிழகத்திற்குள் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் நடத்தப்பட்டு இணையத்தில் அந்தந்த மக்களின் குரலில் பதிவாக்கப்படவேண்டும்.உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலக இலக்கியமாய் ஐ.நா. சபை மூலம் அறிவிக்க வைத்து, உலகின் அனைத்து மக்களுக்கும் அவரவர் மொழியில் திருக்குறளை
கொண்டு செல்ல வேண்டும். தமிழ்மொழி, ஆய்வகங்கள்மூலம் இன்னும் நவீன உத்திகளோடு ஒலி வடிவிலும், ஒளி வடிவிலும் கற்றுத் தரப்படவேண்டும்.


தமிழ் இனி


1. தமிழ் மொழியாம் தாய்மொழியைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் பயின்று விடலாம் என்ற நிலை மாற வேண்டும்.

2. கல்லுாரிகளில் பகுதி - 1 என்று தமிழ் இருந்தாலும், அந்த மதிப்பெண்ணையும் பட்டம் வழங்கும் போது தர மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

3. கற்றலையும் தேர்வு எழுதுதலையும் மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொள்ளாமல்,
மாணவர்களைப் படைப்பாளிகளாக்கும் வகையில் நவீன முறையில் தமிழ்ப்பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

4. வகுப்பறை சார்ந்துமட்டும் அமையாமல் பண்பாடு, மக்கள் வாழ்வியல் சார்ந்த கள ஆய்வுகள், பங்கேற்றல் அனுபவங்களைத் தரும் வகையில் பாடங்கள் அமைதல் வேண்டும்.

5. பி.ஏ., (தமிழ்), எம்.ஏ., (தமிழ்) போன்ற இலக்கியம் சார்ந்த பாடங்களோடு இணையப் பயன்பாட்டுத் தமிழ், மக்கள் தொடர்பு ஊடகத் தமிழ், கலைச்சொல் உருவாக்கத்தமிழ், இதழியல் மொழிசார்ந்த தமிழ் போன்றவற்றைத் தற்போதுள்ள நிலையைவிட இன்னும் மேம்பட்ட நிலையில் அளித்தால் தமிழ் கற்போர் ஆர்வம் மேம்படும்.

6. சங்க இலக்கியங்களைப் பொருள் சொல்லி விளக்குவதோடன்றி, நவீனத் துறைகளான அழகியல், அமைப்பியல், உளவியல், சமூகவியல் போன்றவற்றின் அடித்தளத்தோடு நவீனக் கோட்பாட்டு முறையில் இன்னும் சிறப்பாக நடத்தலாம்.

7. பல்கலைகளில் உரைநடைக்கான, கவிதைகளுக்கான, சிறுகதைகளுக்கான, புதினங்களுக்கான, கடித இலக்கியங்களுக்கான தனித்தனித் துறைகள் ஏற்படுத்தப்பட்டு நவீனக் கோட்பாட்டு ஆய்வுகள் பயன் மிகுந்த முறையில் நிகழ்த்தப்பட வேண்டும்.

பண்பாட்டு மொழி

தமிழ், எழுத்துகளோடு மட்டும் தொடர்புடைய மொழியன்று. பண்பாட்டோடு தொடர்புடைய மொழி. உலகின் முதல் மனிதன் தோன்றியதாகக் கருதப்படும் லெமூரியாக் கண்டத்தை ஆழ்
கடல் ஆய்வுக்கு உட்படுத்தும் முயற்சியை, வரும்காலத்தில் முக்கியமானதாகக் கருத வேண்டும். மொழி நவீனமாகும் போது, பண்பாடு எழுச்சி அடைகிறது. தமிழ் என்றால், 'இனி
அனைத்தும் உள்ளடக்கிய நவீனப் புதுமை' என்ற பொருள் புனையப்படட்டும்.

தமிழ் நவீன மின்னணு அங்கியோடு இணையத்தில் ஆட்சி செய்யும். அன்று கணினி முன் எல்லாரும் கம்பராமாயணத்தைப் படக் காட்சிகளோடு ஒலி, வரி வடிவில் கற்பார்கள். அன்று வீடுகளே வகுப்பறையாகும்.காசிநகர்ப் புலவன் பேசும் உரைதனைக் கனடாத் தமிழன் நேரடி இணைப்பில் நிறைவாகப் படிப்பான். கற்போரெல்லாம் கவிதை எழுதுவர்: மாணாக்கர் மனிதம் பேணுவர். எதிர்காலத்தில் தமிழ்த் துறையின் துணையாகஆயிரமாயிரம் புதிய துறைகள்
புலரும்.

இலக்கணக் குறிப்பு கற்பது மட்டுமே தமிழ்க்கல்வி என்ற நிலை மாறி, இணையப் பூங்குன்றனார்கள் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என புதிய பூபாளம் இசைப்பர்.

-பேராசிரியர்

சவுந்தர மகாதேவன்

தமிழ்த்துறைத் தலைவர்

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுாரி

திருநெல்வேலி

99521 40275

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X