'லேடி பாகுபலி'- கிரண் டெம்பலா -| Dinamalar

'லேடி பாகுபலி'- கிரண் டெம்பலா -

Added : மார் 08, 2018
Advertisement
'லேடி பாகுபலி'- கிரண் டெம்பலா -

'ரதகஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும் அதகளம் புரிந்திடும் வீரம்... இவள் மத புஜம் இரண்டும் மலையென எழுந்திட செருகளம் சிதைந்திடும் வீரம்'... என அசாத்திய தைரியம் கொண்ட வீர மங்கையாய் 'பிட்னஸ்' துறையில் சாதித்து வருகிறார் தாஜ்மகால் நகரான ஆக்ராவை சேர்ந்த 'லேடி பாகுபலி' கிரண் டெம்பலா.
சில பெண்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும் ஆனால், இவருக்கு அந்த பளுவை துாக்குவது தான் வேலை. 'பெண்கள் என்றால் எப்போதும் 'ஹேன்ட் பேக்' மாட்டிக் கொண்டு வேலை, குடும்பம் என இயந்திரமாய் தான் இயங்க வேண்டுமா' என, கண்ணாடி முன் நின்று தன்னை தானே கேள்வி கேட்டுக் கொண்ட போது தான் பிட்னஸ் துறையில் சாதிக்க வேண்டும் தோன்றியது. அன்றே 'ஹேன்ட் பேக்'கை துாக்கி வீசிவிட்டு 'சிக்ஸ் பேக்' பயிற்சியில் களமிறங்கினார்.இந்த மகளிர் தினத்தில் தமிழ்நாட்டு பெண்களுக்குள் ஒரு வீரத்தை விதைக்க வேண்டும் என்பதற்காக கிரண் டெம்பலாவிடம் பேசினோம்...
''இசை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் அதனால் தான் 2016ல் ஐதராபாத்தில் என்னுடைய, டி.ஜெ., (டான்ஸிங் ஜாக்கி) பயணத்தை துவங்கினேன். அந்த இசை என் மனசுக்குள் மெல்லிய உணர்வுகளை ஏற்படுத்தியது; மனம் லேசானது. ஆனால், உடலுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டுமே என்று நினைத்த போது தான் பிட்னஸ் துறை ஞாபகம் வந்தது. அதற்கு பின் நேரம், காலம் பார்க்காமல் கடுமையாக பயிற்சி செய்து 'சிக்ஸ் பேக்' கொண்டு வந்தேன்.இதற்கெல்லாம் நான் யாரையும் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ளவில்லை; எனக்கு நான் தான் ரோல் மாடலாக இருக்கிறேன். இன்று சினிமா நடிகர், நடிகைகள் பலருக்கும் நான் பிட்னஸ் பயிற்சியாளராக இருக்கிறேன். ஒரு தாயாக, மகளாக, மனைவியாக மட்டுமல்லாமல் ஒரு பெண்ணாக என்னை நான் உணர்கிறேன்.
எனக்குள் இருக்கும் திறமைகளை பட்டை தீட்டிக் கொண்டே இருக்கிறேன். நான் தேர்ந்தெடுத்த பிட்னஸ், டி.ஜெ., துறைகளில் இன்னும் பல சாதனைகள் நிகழ்த்த வேண்டும்.இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு பெண்ணும் தன் மனதையும், உடம்பையும் பிட்டாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும். பெண்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாய் குரல் கொடுத்து தங்களுக்குள் வீரம் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும்'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X