காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது : அனைத்து கட்சி கூட்டத்தில் கடும் எதிர்ப்பு| Dinamalar

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது : அனைத்து கட்சி கூட்டத்தில் கடும் எதிர்ப்பு

Added : மார் 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement

பெங்களூரு: முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக, சட்ட வல்லுனர்களின் ஆலோசனை பெற்று செயல்படுவதென, அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக, தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்த வழக்கில், பிப்ரவரி 16ல், உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. அப்போது, ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்றும், 14.75 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகா, கூடுதலாக பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதனால், மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க கோரி, தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த, அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, பிரதமரை சந்தித்து முறையிடுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, காவிரி நதி நீரால் பயன் பெறும் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில தலைமை செயலர்களுடன், மத்திய நீர்வளத்துறை செயலர் டில்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில், கர்நாடகாவின் நிலைப்பாடு குறித்து விளக்க, முதல்வர் சித்தராமையா தலைமையில், பெங்களூரு விதான் சவுதாவில், நேற்று மாலை, 4:45 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் துவங்கி, மாலை, 6:45 மணிக்கு நிறைவடைந்தது. ஆளுங்கட்சி சார்பில், அமைச்சர்கள் எம்.பி.பாட்டீல், ஜெயசந்திரா, ஜார்ஜ், மஞ்சு, மஹாதேவப்பா, ஆஞ்சநேயா, உமாஸ்ரீ, பா.ஜ., சார்பில் எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், எம்.பி., - பி.சி.மோகன், ம.ஜ.த., சார்பில், எம்.எல்.சி., பசவராஜ் ஹொரட்டி, ஒய்.எஸ்.வி.தத்தா மற்றும் அரசு தலைமை செயலர் ரத்ன பிரபா, அட்வகேட் ஜெனரல் மதுசூதன் நாயக் உட்பட நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் சாதக, பாதகங்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது ஆகிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு, பா.ஜ.,வும், ம.ஜ.த.,வும் எதிர்ப்பு தெரிவித்தன. அதே வேளையில், தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யும்படி, பா.ஜ., ஆலோசனை கூறியது. கூட்டத்துக்கு பின், முதல்வர் சித்தராமையா கூறியதாவது: தீர்ப்பாயத்தின் தீர்ப்பு படி, 192 டி.எம்.சி., தண்ணீர் தமிழகத்துக்கு வழங்கி வந்தோம். இதிலிருந்து, 14.75 டி.எம்.சி., தண்ணீரை, கர்நாடகா பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறியுள்ளதால், 177.25 டி.எம்.சி., தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்வதென, ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. இந்த இரண்டு விஷயங்கள் குறித்தும், நாரிமன் தலைமையிலான சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென கூறியுள்ள உச்ச நீதிமன்றம், எப்படி அமைக்க வேண்டுமென்று தெளிவுபடுத்தவில்லை. இது தொடர்பாக, டில்லியில் நடக்கவுள்ள கூட்டத்தில், கர்நாடக அரசின் நிலைப்பாட்டை தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்துக்கு திறந்து விட வேண்டிய தண்ணீர் காலம், டிசம்பருக்குள் முடிந்து விட்டது. தற்போது, இயற்கையாக செல்லும் தண்ணீர் செல்கிறது. எனவே, தற்போதைக்கு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு வாய்ப்பில்லை.
- எம்.பி.பாட்டீல், நீர்வளத்துறை அமைச்சர், கர்நாடகா
கர்நாடகா, கூடுதலாக, 14.75 டி.எம்.சி., தண்ணீர் பயன்படுத்தி கொள்ளும்படி உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது, ஓரளவு மட்டுமே சரி. ஆனாலும், எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு, பா.ஜ., எதிர்ப்பு தெரிவிக்கிறது. மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது பற்றி, தமிழக அரசு எடுக்கும் முடிவை பார்த்து, நாமும் எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
- ஜெகதீஷ் ஷெட்டர், எதிர்க்கட்சி தலைவர், சட்டசபை, கர்நாடகா
கட்கரியுடன் கவுடா சந்திப்பு : பெங்களூரில் அனைத்து கட்சி கூட்டம் நடப்பதற்கு முன்னதாக, முன்னாள் பிரதமரும், ம.ஜ.த., தேசிய தலைவருமான தேவகவுடா, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை டில்லியில் நேற்று மதியம் சந்தித்து பேசினார்.அப்போது, 'உச்ச நீதிமன்ற தீர்ப்பினால், கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம், கர்நாடகா இரண்டு மாநிலங்களுக்கும் நியாயம் கிடைக்கும் படி, நடவடிக்கை எடுக்குமாறும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கூடுதல் கால அவகாசம் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் முறையிடுமாறும் வலியுறுத்தினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasekar - Trivandrum,இந்தியா
09-மார்-201812:36:40 IST Report Abuse
Rajasekar "முதல்வர் சித்தராமையா கூறியதாவது: தீர்ப்பாயத்தின் தீர்ப்பு படி, 192 டி.எம்.சி., தண்ணீர் தமிழகத்துக்கு வழங்கி வந்தோம். இதிலிருந்து, 14.75 டி.எம்.சி., தண்ணீரை, கர்நாடகா பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறியுள்ளதால், 177.25 டி.எம்.சி., தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன."............................... அடப்பாவிகளா??? 192 TMC எப்படா வழங்கினீங்க??? நீங்கல்லாம் துணிந்து பொய் சொல்ரீங்க ஆனால் எங்கப்பக்கம் உண்மையா சொல்லக்கூட ஒருத்தரும் இல்ல................
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை