வயலூர் வளர்ச்சி அடைவது எப்போது?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வயலூர் வளர்ச்சி அடைவது எப்போது?

Added : மார் 15, 2018
Advertisement

வயலுார்:எவ்வித வசதியும் இல்லாத வயலுார், வளர்ச்சி அடைவது எப்போது என்ற கேள்வி, மக்களிடையே எழுந்துள்ளது.
கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்டது, வயலுார் ஊராட்சி. இந்த ஊராட்சியில், வயலுார், சூரகாபுரம், உச்சிமேடு, மும்முடிக்குப்பம், அகரம் ஆகிய கிராமங்களில், ஒன்பது வார்டுகள் உள்ளன. இங்கு, 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இப்பகுதி மக்கள், பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போது, நிலத்தடி நீர்மட்டம் போதிய அளவு இல்லாததால், கூலி வேலைக்கு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.இதற்கு, ஊராட்சி பகுதிகளில் உள்ள ஏரி மற்றும் குளங்களை, முறையாக துார்வாரி பராமரிப்பு பணி மேற்கொள்ளாததே, முக்கிய காரணம் என, மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மருத்துவ வசதி இல்லை
இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அடிப்படை மருத்துவ வசதிக்கு மக்கள் அவதிப்படுகின்றனர். ஏனெனில், மக்கள் தங்கள் அடிப்படை மருத்துவ வசதிக்குக் கூட இங்கிருந்து, 7 கி.மீ., துாரமுள்ள உழுந்தை கிராமத்திற்கு செல்ல வேண்டும் அல்லது, 10 கி.மீ., துாரமுள்ள, ஸ்ரீபெரும்புதுார் மற்றும் சுங்குவார்சத்திரம் செல்ல வேண்டும்.
இதனால், நேரம் மற்றும் பணம் விரயம் ஏற்படுவதோடு, சில நேரங்களில் உயிர் பலியும் ஏற்படுகிறது. எனவே, கிராமத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டுமென்பது, மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.மேலும், ஊராட்சி பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன், பெண்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட, ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தில், 2011 - 12ல், 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில், பெயரளவிற்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்பின், ஆறு ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், உட்புறம் மிகவும் சேதமடைந்து, பயன்பாடில்லாமல் வீணாகி வருகிறது. இதனால், பெண்கள் அவதிப்படுகின்றனர்.இதே போல், ஊராட்சியில், 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமுதாய கூடத்திற்கு, மின் இணைப்பு, தண்ணீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால், இதுவரை பயன்பாடில்லாமல் வீணாகி வருகிறது.
இதனால், மக்கள் தங்களது இல்ல சுப நிகழ்ச்சிகளுக்கு, தனியார் மண்டபங்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பயன்பாடில்லாத சமுதாயக் கூடம், தற்போது கிடங்காக பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, 14.50 லட்சம் ரூபாய் செலவில், இரு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கிராம சேவை மையம், இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் வீணாகிறது. இந்த கிராம சேவை மைய கட்டடத்திற்கு, மின் இணைப்பு வழங்காதது குறிப்பிடத்தக்கது.
பராமரிப்பு இல்லை
ஊராட்சி பகுதியில் உள்ள பயணியர் நிழற்குடை அருகே, 30 ஆண்டுகளுக்கு முன், மக்கள் பயன்பாட்டிற்காக, 60 ஆயிரம் லி., கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இது கட்டி முடிக்கப்பட்ட நாள் முதல், இது வரை, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவில்லை.இதனால், மக்களுக்கு நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும், குடிநீர் தொட்டியில் மேற்புரம், மிகவும் சேதம்அடைந்து மோசமான நிலையில் உள்ளது.
இந்த குடிநீர் தொட்டிக்கு பதிலாக, புதிய குடிநீர் தொட்டி கட்ட வேண்டும் என, மக்கள் பலமுறை மனு அளித்தும், ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்காதது, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.ஊராட்சி பகுதிகளில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக துார்வாரி முறையாக பராமரிக்கப் படவில்லை. இதனால், குளம் மற்றும் ஏரி நீரை, மக்கள் பயன்படுத்த முடிவதில்லை.
மேலும், ஏரி மற்றும் குளத்து நீர் துர்நாற்றம் வீசுவதால், மக்கள் இந்த நீரை எந்த உபயோகத்திற்கும் பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதோடு, கோடைக் காலங்களில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு, பல்வேறு குறைபாடுகள் உள்ள வயலுார் ஊராட்சி, வளர்ச்சி அடைவது எப்போது என்ற கேள்வி, மக்களிடையே எழுந்துள்ளது.
எதிர்பார்ப்பு
சாலை வசதி அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர், விளையாட்டு மைதானம் புதிய குடிநீர் தொட்டி புதிய மருத்துவமனை நெற்களம் ஏரி, குளங்கள் துார்வார வேண்டும்

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை