கம்பம்:''கூட்டுக்குடிநீர் திட்ட மெயின் பகிர்மான குழாய்களில் ஏற்படும் உடைப்பு மற்றும் பழுதுகளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புகைப்படம் எடுத்து அனுப்பி, செயற்கைகோல் (சார்டிலைட்) மூலம் பார்த்து உறுதி செய்த பின் பழுது நீக்கும் பணி மேற்கொள்ள வேண்டும்'' என்று குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
1956 ல் தேனி மாவட்டத்தில் லோயர்கேம்பில் கம்பம் பள்ளத்தாக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் துவங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள பெரும்பாலான ஊர்கள் குடிநீர் பெற்றன. ஆனால், காலப்போக்கில் உள்ளாட்சிகள் முல்லைப் பெரியாற்றில் உறைகிணறு அமைத்து, சொந்தமாக 'பம்பிங்' செய்து பயன்படுத்துகின்றனர்.
இருப்பினும், வாரியம் பெரிய அளவிலான 25 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. கம்பம் கூட்டுக்குடிநீர் திட்டம், கேபிடி திட்டம், ஓடைப்பட்டி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இதில் அடங்கும். இந்த திட்டங்களில் மெயின் பகிர்மான குழாய்களில் ஏற்படும் பழுதுகள், உடைப்பு உள்ளிட்டவற்றை சரிபண்ண ஒப்பந்ததாரர்கள் உள்ளனர்.
அவ்வப்போது அவர்கள் பழுதுகளை சரிபண்ணி, வினியோகத்தை முறைப்படுத்தி வந்தனர். தற்போது குடிநீர்வாரியம் பிறப்பித்த உத்தரவில், 'கூட்டுகுடிநீர் திட்டத்தில் பழுது ஏற்பட்டுள்ளது என்றால், சம்பந்தப்பட்ட இடத்திற்கு உதவி பொறியாளர் சென்று தனது ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் படம் எடுப்பார். அந்த புகைப்படத்தை அதற்காக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள செயலியில் பதிவேற்றுவார்.
அதை வாரிய உயர் அதிகாரிகள் செயற்கைகோல் (சாட்டிலைட்) இணையம் மூலம் பார்த்து, பழுது ஏற்பட்டுள்ளதை உறுதி செய்த பின், பழுதுநீக்க நடவடிக்கைக்கு அனுமதி வழங்குவார்கள். அதுவரை பழுதுநீக்க பணி மேற்கொள்ளக் கூடாது'' என, கூறப்பட்டுள்ளது. எனவே, பொது பகிர்மான குழாய்களில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக சரிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என, குடிநீர் வாரிய அலுவலர்கள் கூறியுள்ளனர்.