அருப்புக்கோட்டை: மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச்செல்ல முயன்ற கல்லூரி பேராசிரியை இன்று மாலை கைது செய்து செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் தேவாங்கர் கலைக்கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை மூளை சலவை செய்து அவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தது தெரியவந்தது. இது தொடர்பாக பேராசிரியை மாணவிகளிடம் பேசிய உரையாடல் 'வாட்ஸ் ஆப்'பில் பரவியது. இதனை கண்டித்து மாதர் சங்கத்தினர் மற்றும் மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
3 பிரிவுகளில் வழக்கு
சம்பந்தப்பட்ட பேராசிரியை மீது போலீசில் புகார் அளிக்குமாறு கல்வி துறை செயலர் சுனில் பாலிவால் கேட்டு கொண்டார். இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் தாசில்தார் கார்த்திகேயனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டி.எஸ்.பி., தனபாலிடம் , கல்லூரி முதல்வர் பாண்டிய ராஜன், மாதர்சங்கத்தினர் இணைந்து புகார் அளிக்கவுள்ளனர். சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என டி.எஸ்.பி., தனபால் கூறியுள்ளார். இதனையடுத்து பேராசிரியை நிர்மலா தேவியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். தன்னை போலீசார் கைது செய்ய வந்தது தெரிந்த பேராசிரியை பிற்பகலிலிருந்து வீட்டை உற்புறமாக பூட்டிக்கொண்டு வெளியே வர மறுத்தார். பின்னர் போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நிர்மலா தேவியை கைது செய்தனர். கல்லுாரி நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிர்மலா தேவி மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
விசாரணை குழு அமைப்பு
பேராசிரியர் நிர்மலா தேவி மீது புகார் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டார் கவர்னர் பன்வாரிலால் புரோகித். குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்த தப்ப முடியாது என கவர்னர் கூறியுள்ளார்.