உணவுக் கழிவில் உரம்; இனி இல்லை துர்நாற்றம்!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

உணவுக் கழிவில் உரம்; இனி இல்லை துர்நாற்றம்!

Updated : ஏப் 17, 2018 | Added : ஏப் 17, 2018
Advertisement

கோவை:உணவு கழிவுகளில் இருந்து உரம் தயாரிப்பதற்கான இயந்திரம், கோவை மேற்கு மண்டல மாநகராட்சிஅலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ளது.கோவையில் நாளொன்றுக்கு, 850 டன் குப்பை சேகரமாகிறது. உணவு மற்றும் காய்கறி கழிவுகளில் இருந்து உரம் அல்லது காஸ் தயாரிப்பது; மறுசுழற்சிக்கு பயன்படும் பொருட்களை, தனியார் நிறுவனங்களுக்கு விற்க, மத்திய அரசு வலியுறுத்துகிறது.
மூன்று ஆண்டுக்கு முன், ஆர்.எஸ்.புரம், 23வது வார்டில், 'சூன்யா' திட்டம் செயல்படுத்தப்பட்டது. குப்பை தொட்டி இல்லாத வார்டாக மாறியதால், சுவிட்சர்லாந்து துாதரக அமைப்பு, 'கெபாசிட்டீஸ்' திட்டத்தில், 'இக்ளி' அமைப்புடன் இணைந்து, 22 மற்றும், 23வது வார்டுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இவ்வார்டுகளில் சேகரமாகும் உணவு கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்க, சிறிய அளவில், இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.
வீடு வீடாகச் சென்று, தரம் பிரித்து குப்பை கொடுக்க, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதை தொடர்ந்து, வீதிகளில் இருந்த தொட்டிகள் அகற்றப்பட்டு வருகின்றன. 22வது வார்டில், அழகேசன் ரோடு, பாரதி பார்க், 7வது மற்றும், 8வது கிராஸ், ராஜா அண்ணாமலை ரோடு, எஸ்.ஆர்.பி., பொன்னுசாமி நகர், பாரதி பார்க், 4, 5 லிங்க் ரோடு ஆகிய இடங்களில் இருந்த குப்பை தொட்டிகள் எடுக்கப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
வார்டு எண், 24ல் பாதர் ரண்டி வீதி மற்றும் தடாகம் ரோடு சந்திப்பு, லைட் ஹவுஸ் ரோட்டில் குப்பை கொட்டப்பட்டு, அருவருப்பாக இருந்த இடங்களில், சாணம் மெழுகி, கோலமிட்டு சுத்தப்படுத்தியதால், தற்போது யாரும் குப்பை போடுவதில்லை.பெரும்பாலான மக்கள், தரம் பிரித்து குப்பை கொடுக்கின்றனர். உணவு கழிவுகளாக, 22வது வார்டில், 1,275 கிலோ, 24ல், 930 கிலோ, உலர் குப்பையாக, 22வது வார்டில், 1,950 கிலோ, 24ல் 840 கிலோ சேகரமாகிறது.
தினமும், 125 கிலோ உணவு கழிவில் இருந்து உரம் தயாரிப்பதற்கான இயந்திரம், மேற்கு மண்டல மாநகராட்சி அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில், சுற்றுவட்டார மெஸ்களில் வெளியேற்றும் உணவு கழிவு உரமாக்கப்படுகிறது.
பணம் செலுத்த தேவை இல்லை!
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'தினமும், 125 கிலோ உணவு கழிவில் உரம் தயாரிக்கும் இயந்திரம், ரூ.8.5 லட்சம் செலவில் வாங்கப்பட்டு உள்ளது. சோதனை அடிப்படையில் இயக்கி வருகிறோம். 'ஓட்டல் மற்றும் லாட்ஜ், அடுக்குமாடி குடியிருப்புகளில், இத்தகைய இயந்திரத்தை நிறுவி, அவர்களே உரமாக்கி, செடிகளுக்கு பயன்படுத்தலாம். குப்பை அள்ள மாநகராட்சிக்கு பணம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை