குளங்கள் இருந்தென்ன? நீர் வழிப்பாதையில் அதிகரித்த ஆக்கிரமிப்பு = அலட்சிய அதிகாரிகளால் வறட்சியே பரிசு| Dinamalar

தமிழ்நாடு

குளங்கள் இருந்தென்ன? நீர் வழிப்பாதையில் அதிகரித்த ஆக்கிரமிப்பு = அலட்சிய அதிகாரிகளால் வறட்சியே பரிசு

Updated : ஏப் 17, 2018 | Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
குளங்கள் இருந்தென்ன? நீர் வழிப்பாதையில் அதிகரித்த ஆக்கிரமிப்பு = அலட்சிய அதிகாரிகளால் வறட்சியே பரிசு

அவிநாசி;அவிநாசி சுற்றுப்பகுதிகளில், 11 குளங்கள் இருந்தும், நீர் வழித்தடம் மாயமானதால்,குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. இதனால், மழைக்காலங்களில்,மழை நீரை முழுமையாக அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவிநாசி தாலுகாவில், விவசாயம் பிரதானமாக உள்ளது. பாசனம் திட்டம் எதுவும் இல்லாததால், முற்றிலும் கிணற்று பாசனமே நடைபெறுகிறது. நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாக, மழை நீரை சேமித்து, ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் வகையில் பெரிய அளவிலான குளங்கள் அமைந்துள்ளன.
அவிநாசி பகுதியில், பொதுப்பணித்துறை வசம், புஞ்சை தாமரைக்குளம், 1.39 சதுர கி.மீ.,பரப்பளவிலும், பாப்பாங்குளம் குளம், 1.67 சதுர கி.மீ., நடுவச்சேரி குளம், 1.11 சதுர கி.மீ., கிளாகுளம், 2.50 சதுர கி.மீ., சேவூர் குளம், 2.78 கி.மீ., சதுர பரப்பளவிலும், அவிநாசிலிங்கம்பாளையம் குளம், 5.20 சதுர கி.மீ., கானுார் குளம், 3.06 கி.மீ., முறியாண்டம்பாளையம் குளம், 0.83 சதுர கி.மீ., புதுப்பாளையம் குளம், 2.25 கி.மீ., தாமரைக்குளம், 3.90 சதுர கி.மீ., கருவலுார் குளம், 1.67 சதுர கி.மீ., அமைந்துள்ளது.
அத்துடன், பெரும்பாலான கிராமங்களில், நுாற்றுக்கணக்கான குட்டைகளும் உள்ளன. மாவட்டத்தில் அதிக அளவிலான குளங்கள் மற்றும் அதிகளவு மழை பொழிவு உள்ள பகுதியாக அவிநாசி உள்ளது.ஒரு காலத்தில் குளங்கள் நிரம்பி, சுற்றுப்புற பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் செழிப்பாகவும், வாழை, மஞ்சள், நிலக்கடலை, தானிய பயிர்கள், காய்கறிகள் உற்பத்தி மிகுந்த பகுதியாகவும் இருந்தது.
இயற்கையாக அமைந்த, நல்லாறு மற்றும் 50க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான ஓடைகள் மூலம், குளங்கள் நீர் வரத்து பெற்றதும், பல குளங்கள் சங்கிலித்தொடர் அமைப்பில் அடுத்தடுத்து நிரம்புவது என அருமையான கட்டமைப்புகளுடன் இருந்தது. இயற்கையாக கிடைக்கும் மழை நீரை சேமிப்பதில் காட்டிய அலட்சியம் காரணமாக, குளம், குட்டைகள் ஆக்கிரமிப்பு, குளங்களுக்கு நீர் வரும், ஓடை, ஆறு உள்ளிட்ட நீர் வழித்தடங்கள் மாயமாகியுள்ளது.பல இடங்களில் மறிக்கப்பட்டு, குடியிருப்புகள், விவசாய நிலங்கள் தொழிற்சாலையாக மாற்றப்பட்டுள்ளன.
நீர் வழித்தடங்களை மீட்பது, குளம், குட்டைகளை பாதுகாப்பதில், பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால், நீர் நிலைகள் வேகமாக அழிந்தும், மாயமாகியும் வருகின்றன.
குளம், குட்டை நீர் வரத்து இல்லாமல், பல ஆண்டுகளாக வறண்டு காணப்படுவதோடு, அவ்வப்போது குளங்களின் சுற்றுப்பகுதிகளில் பெய்யும் மழை நீர் குறைந்தளவே தேங்கி வருகிறது. இதனால், அவிநாசி பகுதி மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் அபாய கட்டத்திற்கு சென்ற ஆபத்தான பகுதியாக மாறியுள்ளது.
குளங்கள் இருந்தும், நீர் வரத்து இல்லாமல் வறட்சியின் பிடியில் உள்ள அவிநாசி பகுதிகளில், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த, மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.நிலத்தடி நீர் மட்ட ஆய்வாளர்கள் கூறுகையில், 'அவிநாசி வட்டாரத்தில், ஆண்டுக்கு, 700 முதல் 900 மி.மீ., வரை மழை கிடைக்கிறது. இதனை கருத்தில் கொண்டே, ஏராளமான குளம், குட்டைகள் அமைக்கப்பட்டது.
புவியியல் அமைப்பில், அவிநாசி வட்டாரம் மேடாகவும், பாறை, நிலத்தின் தன்மை காரணமாக நிலத்தடி நீர் மட்டம், 1,500 அடிக்கு கீழ் சென்றுள்ளது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் அபாய கட்டத்தில் உள்ள பகுதியாக உள்ளது. குளம், குட்டைகளுக்கான நீர் வரத்து வழித்தடங்களை மீட்டு, பெய்யும் மழை நீரை சேமிக்க வேண்டியது அவசியம்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'புதுப்பாளையம், அவிநாசிலிங்கம்பாளையம் குளங்களுக்கான வழங்கு வாய்க்கால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. முழுமையான குளங்களுக்கான நீர் வழித்தடங்களை புதுப்பிக்க, சிறப்பு திட்டம் வடிவமைத்து, நிதி ஒதுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை