வைகையில் கை வைக்கும் மணல் மாபியா; இயற்கை வளத்தை சுரண்டி குடிநீருக்கு வேட்டு| Dinamalar

தமிழ்நாடு

வைகையில் கை வைக்கும் மணல் மாபியா; இயற்கை வளத்தை சுரண்டி குடிநீருக்கு வேட்டு

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement
வைகையில் கை வைக்கும் மணல் மாபியா; இயற்கை வளத்தை சுரண்டி குடிநீருக்கு வேட்டு

மதுரை வைகை ஆற்றில் மணல் திருட்டு தொடர்ந்து நடக்கிறது. பகலில் மாட்டு வண்டிகள், டிராக்டர்கள் மூலமும், இரவில் தலைச்சுமையாகவும் மணலை கொள்ளையடிக்கின்றனர். இவ்வாறு சேகரிக்கப்படும் மணல் நாராயணபுரம் - ஊத்துக்குளி பகுதியில் குவித்து வைக்கப்பட்டு கேரளாவிற்கு பெருமளவு கடத்தப்படுகிறது. இதற்காக கூலி தொழிலாளர்கள் நுாற்றுக்கணக்கானோரை, மணல் மாபியா கும்பல் மிரட்டி மணல் கொள்ளையில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தி வருகிறது.

தமிழகத்தில் மணல் விற்பனையை அரசு நடத்தி வருகிறது. திருச்சி காவிரி ஆற்றில் மணல் அள்ளப்பட்டு, மதுரை வாடிப்பட்டி மணல் குவாரியில் குவிக்கப்பட்டு பொதுப் பணித்துறை மூலம் விற்பனை செய்யப்பட்டது. மணல் தட்டுப்பாடு காரணமாக வாடிப்பட்டி குவாரி கடந்தாண்டு மூடப்பட்டது. திருச்சி மணலுக்கு இணையான தரம் கொண்ட வைகை ஆற்று மணலை கொள்ளையடிக்க மணல் மாபியா கும்பல்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தங்களுக்குள் பிரச்னை வராமல் இருக்க ஒற்றுமையுடன் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக வைகை ஆற்றை கூறு போட்டும், எல்லைக்கோடு அமைத்தும் மணல் கொள்ளையில் மாபியா கும்பல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.


நாள் ஒன்றுக்கு 100 யூனிட்:

மதுரை கச்சிராயிருப்பு - திருவேடகம் இடையே வைகை ஆற்றில் கடந்த மாதம் மணல் அள்ளும் இயந்திரத்தை வைத்து மணல் திருட்டு பட்டப்பகலில் நடந்தது. தடுக்கச் சென்ற சோழவந்தான் போலீசாரை கும்பல் மிரட்டி தப்பியது. மணல் கொள்ளையில் ஈடுபடும் கும்பல் கோச்சடை முதல் பேரணை வரை 30 கி.மீ., தொலைவு வரை ஆற்றுக்குள் சென்று நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 100 யூனிட் வரை மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது.

இதற்காக பகலில் மாட்டு வண்டிகள், டிராக்டர்களையும், இரவில் நுாற்றுக் கணக்கான கூலி ஆட்களை வைத்தும் உரச்சாக்கு மூடைகளில் மணலை சேகரித்து தென்னந் தோப்புகளில் குவித்து வைக்கின்றனர். மணல் மூடை ஒன்றுக்கு கூலியாக 10 ரூபாய் வழங்குகின்றனர். இரவு 9:00 முதல் அதிகாலை 5:00 மணி வரை மணல் திருட்டில் கூலியாட்கள் ஈடுபடுகின்றனர். மணல் திருட்டில் ஈடுபட மறுக்கும் தொழிலாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வலுக்கட்டாயமாக திருட்டில் ஈடுபட வைக்கின்றனர்.


உனக்கு கேசு; எனக்கு காசு:

சோழவந்தான், சமயநல்லுார், காடுபட்டி, விக்கிரமங்கலம் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் மாதம் தோறும் மணல் திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்கின்றனர். இதற்காக மணல் மாபியா கும்பல் மாதம் தோறும் வழக்குக்கான மணலுடன் மாட்டு வண்டிகள், மணல் கடத்தியதாக சில நபர்களை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து, 'உனக்கு கேசு; எனக்கு காசு' என எழுதப்படாத ஒப்பந்தம்போல் வழக்கமான நடைமுறை உள்ளது.

மணல் கடத்தலை கண்டு கொள்ளாமல் இருக்க வாரம், மாதம் தோறும் போலீசார், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உள்ளூர் அரசியல் வாதிகள், என அனைத்து தரப்புக்கும் 'கப்பம்' கட்டப் படுவதால் மணல் திருட்டில் 'கப்-சிப்' ஆகி விடுகின்றனர். மணல் திருடுவதற்காக ஆற்றுக்குள் ஏராளமான வழித்தடங்களை அமைத்துள்ளனர். மணல் திருட்டு நடக்கும்போது வெளியாட்கள் வருவதை கண்காணிக்க குண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெளியாட்கள் வருவது தெரிந்தால் 'சைகை' செய்து சுதாரித்து விடுகின்றனர்.


மாபியா கும்பல் தாதா யார்

மணல் மாபியா கும்பல் தாதாவாக வலம் வருபவர் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. சபரிமலை சுவாமி பெயரை கொண்டவர். அரசியல் கட்சியை சேர்ந்தவர். அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவர். மணல் திருட்டு வழக்கில் அடிக்கடி குண்டர் சட்டத்தில் கம்பி எண்ணுபவர். பின் மீண்டும் வெளியே வந்து கடத்தலில் ஈடுபடுவது வழக்கம்.

மண் அள்ளும் இயந்திரம் வைத்து ஆற்று மணலை கொள்ளையடிக்கும் அளவுக்கு தொழிலில் முன்னேற்றம் கண்டவர். நான்கு மண் அள்ளும் இயந்திரம், 10 லாரிகளை சொந்தமாக வைத்துள்ளார். இவர், அரசியல் செல்வாக்கு மிக்கவராக இருப்பதால் மணல் திருட்டு வழக்குகள் சமீப காலமாக இவர் மீது பாய்வதில்லை. ஒவ்வொரு ஸ்டேஷன் வாரியாக இவரே வழக்குக்கான நபர்களை ஒப்படைத்து விடுவதால் போலீசாருக்கு வேலை சுலபமாகி விடுகிறது.


கொள்ளை போகும் வளம்

ஆளும் கட்சி ஆதரவுடன் மணல் திருட்டு நடக்கிறது. கோச்சடையில் மணல் திருட்டு நடப்பது குறித்து சமீபத்தில் கலெக்டர் வீரராகவராவிடம் மனு அளிக்கப்பட்டது. இரவில் பெண்களை வைத்து மணலை சாக்கு மூடையில் கட்டி கடத்துகின்றனர். போலீசார், வருவாய் துறையினர் இணைந்து மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதிக்கும்பட்சத்தில் இயற்கை வளம் முழுமையாக சுரண்டப்பட்டு குடிநீருக்கு பஞ்சம் ஏற்படும். விவசாயம் அழியும். மணல் திருடர்களை மக்கள் தங்கள் பகுதியில் உள்ள ஆற்றுக்குள் நுழைய விடாமல் தடுக்க வேண்டும்
பழனிச்சாமி, -தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர்




கிராம மக்கள் ஒற்றுமை


தேனுார் பகுதியில் மணல் திருட்டு நடப்பதில்லை. இங்குள்ள மக்கள் ஒற்றுமையாக இருப்பதால் யாரும் மணல் திருடுவது இல்லை. ஆற்றுக்குள் கைப்பிடி மணல் அள்ளினாலும் யாராவது ஒருவர் போலீசார், வருவாய் துறையினருக்கு தகவல் கொடுத்து விடுவர். மற்ற பகுதியில் கிராம மக்களிடையே ஒற்றுமை இல்லாததால் இயற்கை வளம் கொள்ளை போவதை தடுக்க இயலவில்லை. இதே நிலை நீடித்தால் ஆற்றை காக்க இயலாது. இதனால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுவது உறுதி.-ஈஸ்வரி, தேனுார்



-கா.சுப்பிரமணியன்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஏப்-201809:28:57 IST Report Abuse
Srinivasan Kannaiya மணலை அள்ளினால் சுடவேண்டும்... விசாரணை கூடாது. அப்பொழுதுதான் உங்கள் சந்ததி நீரை பார்க்கும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X