ப.வேலூர்: பரமத்தி அருகே, பைக் மீது கார் மோதியதில், படுகாயமடைந்த மூன்று மாணவர்களில் ஒருவர், உயிரிழந்தார். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா, தண்டு ஹராஹள்ளியைச் சேர்ந்த டாக்டர் சதீஷ், 33; சேலம் அருகே, தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார். இவர், நேற்று முன்தினம், மதுரைக்கு சென்றுவிட்டு, ஹோண்டா அமேஸ் காரில் சேலம் திரும்பினார். இரவு, 7:30 மணியளவில் கரூர் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், பரமத்தி, தனியார் கல்லூரி மாணவர்களான ராயவேலூர் ராஜபாளையத்தை சேர்ந்த பிரேம்குமார், 19, தர்மபுரி மாவட்டம், மல்லசமுத்திரத்தை சேர்ந்த சக்தி, 21, தூத்துக்குடி மாவட்டம், ஆண்டிப்பட்டியை சேர்ந்த ஜெய்குமார், 21, ஆகியோர் டி.வி.எஸ்., அப்பாச்சி பைக்கில் சாலையை கடந்தனர். அப்போது, சதீஷின் கார் பைக் மீது மோதியது. படுகாயமடைந்த மாணவர்கள், நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சக்தி உயிரிழந்தார். பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.