தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் மீது நில மோசடி புகார்: தீக்குளிக்க முயன்ற 6 பேரால் கலெக்டர் ஆபீஸில் பரபரப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் மீது நில மோசடி புகார்: தீக்குளிக்க முயன்ற 6 பேரால் கலெக்டர் ஆபீஸில் பரபரப்பு

Added : ஏப் 17, 2018
Advertisement

ஈரோடு: பரம்பரை நிலங்களை, ஈரோடு மாவட்ட, தி.மு.க., துணை செயலாளர் செந்தில்குமார் அபகரித்து விட்டதாக கூறி, அவரது உறவினர்கள் ஆறு பேர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குளிக்க முயன்றனர்.


நாமக்கல் மாவட்டம், வெப்படையை சேர்ந்த மஞ்சுளா, 70, அவரது மகன்கள் பிரகாஷ், 38, கார்த்தி, 36, மருமகள்கள் செல்வி, 30, ருக்குமணி, 28, பேரன் விக்னேஷ், 2, ஆகியோர் நேற்று காலை, 11:45 மணிக்கு, ஈரோடு, கலெக்டர் அலுவலகம் வந்தனர். திடீரென, பிரகாஷ் என்பவர், ஐந்து லிட்டர் மண்ணெண்ணெய் கேனை எடுத்து, ஆறு பேர் மீதும் ஊற்றிக் கொண்டு, கூச்சலிட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்து ஆயுதப்படை போலீசார், கேனை பறித்து, அனைவர் மீதும் தண்ணீர் ஊற்றினர். அப்போது, இருதய அறுவை சிகிச்சை பெற்ற மஞ்சுளா மூர்ச்சையாகி, கீழே விழுந்தார். அவரை தண்ணீர் தெளித்து எழுப்பி, அனைவரையும் போலீஸ் வேனில் ஏற்றி, சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்; தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

இது குறித்து, பிரகாஷ் கூறியதாவது: எங்களது மூதாதையர் காலத்தில், ஈரோடு பிரப் ரோடு - கோட்டை இடையே உள்ள, பிருந்தா வீதியில், 80 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து வாங்கப்பட்டது. தந்தை குருசாமியின் தாத்தா காலத்தில், சொத்துக்கள் வாங்கப்பட்டன. வாரிசு அடிப்படையில், பங்காளி முறை கொண்ட, ஈரோடு மாவட்ட, தி.மு.க., துணை செயலாளர் செந்தில்குமார், அதை அனுபவிக்கிறார். எங்களது பங்கை தர மறுக்கிறார். அதிகாரிகளிடம் மனு வழங்கினாலும், போலீசில் புகார் செய்தாலும், தடுத்து விடுகிறார். எங்களுக்குரிய பங்கை, பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக தீக்குளிக்க வந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது: கடந்த, 125 ஆண்டுகளுக்கு முன், நெசவுக்கு தேவையான பாவடி அமைக்க, 19 பேர் சேர்ந்து, பணம் போட்டு, இந்நிலத்தை வாங்கினர். தற்போது அவர்களது வாரிசுகள் என, 300 பேருக்கு மேல் உரிமை கொண்டாட உள்ளனர். இவ்விடத்துக்காக டிரஸ்ட் ஏற்படுத்தி, முதலியார் சமூக மேம்பாட்டுக்காக செயல்படுத்துகிறோம். அதற்கு நான், செயலாளராக உள்ளேன். முதலியார் சமூக பயன்பாட்டுக்காக, திருமண மண்டபம், வருவாய்க்கான கட்டடம் கட்ட திட்டமிட்டுள்ளோம். இந்நிலத்தை, யாரும் தனி நபர் உரிமை கொண்டாட முடியாது. தற்போது, தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டவர்கள், என் பெரியப்பாவின் பேரன் முறையினர். என்னிடம் பல முறை வந்து, பணம் வேண்டும் என கேட்டனர். இந்த இடத்துக்காக, நான் பணம் தர இயலாது, என்றேன். இதன் மூலம், நான் எந்த வருவாயும் பெறவில்லை. கட்சி, சமூகத்தில் உயர்வாக உள்ளதால், குற்றம் சாட்டுகின்றனர். இவ்விடத்துக்கு, முறையான அனைத்து ஆவணங்களும் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை