ஓமலூர்: '' மத்திய, மாநில அரசுகள், மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வந்து திணிப்பதால், மாநிலம் முழுவதும் போராட்ட களமாக உருவாகியுள்ளது,'' என, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, சேலம் மாவட்டம், மேட்டூரில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக, ஓமலூர் வழியாக சென்ற, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன், நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி தண்ணீர் பெறுவது, தமிழகத்தின் கடமை; அதை வழங்குவது மத்திய அரசின் கடமை. தண்ணீருக்காக, விவசாயிகள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். த,மா.கா., சார்பில் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், மே, 3 வரை, தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். மத்திய அரசும், கர்நாடகா அரசும் தேர்தல் அரசியல் நடத்துகின்றன. விவசாயிகளை, பகடைகாய்களாக பயன்படுத்தி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள், மக்கள் விரும்பாத திட்டங்களை திணிப்பதால், பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. காஷ்மீரில், சிறுமி ஆசிபா படுகொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து, 24 மணி நேரத்தில், தூக்கு தண்டனை வழங்கினால், த.மா.கா.,வரவேற்கும். இவ்வாறு அவர் கூறினார்.