சக்தி நிறைய செலவழிகிறது என்ன செய்வது?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

சக்தி நிறைய செலவழிகிறது என்ன செய்வது?

Added : ஏப் 23, 2018 | கருத்துகள் (3)
Advertisement
சக்தி நிறைய செலவழிகிறது என்ன செய்வது?

பாலுணர்வைப் பற்றி நினைப்பதிலேயே எங்களின் சக்தி நிறைய செலவழிகிறது, என்ன செய்வது?

காமம், எதிர்பாலின ஈர்ப்பு போன்ற உணர்வுகள் ஒருவருக்கு இருப்பது இயல்பானதுதான் என்றாலும், அந்த ஒரு உணர்வுக்கே தங்கள் முழு வாழ்க்கையையும் பலிகொடுக்கும் மனிதர்களும் இங்கே ஏராளம்! உடலியல் தன்மைகளில் பாலுணர்வின் பங்கையும் அதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய யதார்த்த உண்மைகளையும் எடுத்துக்கூறி வழிகாட்டுகிறார் சத்குரு!
கேள்வி: நான்தான் வினோதமாக இருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால் பெரும்பாலானவர்கள் இப்படி இருப்பதாகத்தான் நினைக்கிறேன். பாலுணர்வைப் பற்றியும், எதிர்பாலினத்தவரைப் பற்றியும் நினைப்பதிலேயே எங்களின் சக்தி நிறைய செலவழிகிறது. இது குறித்து எங்களுக்கு ஏதேனும் கூற வேண்டுகிறேன்.
சத்குரு: இதில் வினோதம் என்பதற்கு எதுவுமில்லை. உங்களுடைய புத்திசாலித்தனம், சுரப்பிகளால் கடத்தப்பட்டுள்ளது என்பதைத் தவிர இதில் வேறெதுவும் இல்லை. அப்படிச் செய்வது நீங்கள் அல்ல. உங்களையும் மீறி ஒரு கட்டாயத்தின் பேரில் அப்படி நடந்து கொள்கிறீர்கள்.
நீங்கள் குழந்தையாக இருந்தபோது, ஆண்-பெண் இனப்பெருக்க உறுப்புகளைப் பற்றி எந்தக் கவனமும் இல்லாமல் இருந்தீர்கள். ஆனால் சுரப்பிகள் தனது வேலையைச் செய்யத்துவங்கிய கணத்திலிருந்து, உங்களால் அதைக் கடந்த ஒரு உலகத்தை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு, சுரப்பிகளின் விளையாட்டு குறையத் தொடங்கும்போது, மறுபடியும் அது ஒரு பொருட்டாக இல்லாமல் போவதை நீங்கள் பார்ப்பீர்கள். அப்போது உங்கள் இளமைக் காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, நாம்தான் அதையெல்லாம் செய்தோமா என்று உங்களாலேயே நம்பமுடியாது.
தற்போது நீங்கள் எந்த நேரமும் எதிர்பாலினத்தவரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உலகத்தின் அத்தனை பெண்களும் உங்களுக்குப் பின்னால் வருவார்கள் என்று நான் ஒரு வரம் உங்களுக்குத் தருவதாக வைத்துக்கொள்வோம். அப்போதும்கூட நீங்கள் நிறைவடையாத ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்வீர்கள். அந்த வரம் உங்களை எந்த ஒரு மேம்பட்ட நிலைக்கும் அழைத்துச் செல்லாது. அதை நான் அசிங்கம் என்று சொல்லவில்லை. அந்த உணர்வு அழகானதுதான். ஆனால், நீங்கள் உடலின் எல்லைக்குள்ளேயே வாழ்வீர்கள். அதில் சிறிதளவு இன்பம் உங்களுக்குக் கிடைக்கக்கூடும். ஆனால், அதுவே உச்சம் அல்ல. நீங்கள் என்ன அனுபவித்தாலும், எவ்வளவு அனுபவித்தாலும், அப்போதும் ஒரு நிறைவற்ற வாழ்க்கையைத்தான் வாழ்வீர்கள். எப்படியாவது வாழ்க்கையை நிறைவு செய்வதற்கு, ஓரளவுக்கு உணர்ச்சிகள், சிறிதளவு மனம் மற்றும் சமூகத்தின் மதிப்பீடுகள் இவற்றின் மூலம் நீங்கள் ஏதோ முயற்சி செய்யலாம். ஆனால் நீங்கள் என்னதான் முயற்சி செய்தாலும், பலன் இருக்காது. உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் நேர்மையானவராக இருந்தால், இன்னமும் நீங்கள் ஒரு நிறைவற்ற வாழ்க்கையைத்தான் வாழ்கிறீர்கள் என்பதை உங்களால் பார்க்க முடியும்.
நீங்கள் உடல் என்ற வளையத்திற்குள் மட்டும் வாழ்ந்தால், பிழைத்திருத்தல் மற்றும் இனப்பெருக்கம் தவிர வேறு எதையும் உடல் அறியாது. அதில் தவறேதுமில்லை, ஆனால் அது ஒரு எல்லைக்குட்பட்டது, அவ்வளவுதான். உண்மை என்னவென்றால், உங்கள் வாழ்க்கையில் பௌதீக உடலுக்கு அந்த அளவுக்கு மட்டும்தான் பங்கிருக்கிறது. ஆனால் நீங்கள் உங்கள் பௌதீக உடலை உங்கள் வாழ்க்கை முழுவதும் நீட்டிக்கப் பார்க்கிறீர்கள். இதனால் உங்களுக்கே நீங்கள் நிச்சயமாகத் துன்பம் ஏற்படுத்திக் கொள்வீர்கள். ஏனெனில், நீங்கள் தவறான பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறீர்கள்.
தாங்கள் மிகவும் சரியானவர்கள், தங்களுக்கு எந்த அசம்பாவிதமும் நிகழாது என்று நினைப்பவர்களுக்கு, சிறிது காலத்திற்குப் பின் என்ன நேர்கிறது என்று பாருங்கள். வாழ்க்கை தனக்கென்று பலவழிகளை வைத்திருக்கிறது, உங்களை வளைக்கவும், உடைத்தெறியவும், உருத்தெரியாமல் குழைக்கவும், என கோடிக்கணக்கான வழிகளை, எதிர்பார்க்கவே முடியாத வழிகளை வைத்திருக்கிறது. உங்களைச் சுற்றியுள்ள எத்தனையோ மனிதர்களுக்கு இது நிகழ்வதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? வாழ்க்கைச் சூழல்கள் உங்களை உடைக்கவில்லையென்றால், மரணம் அதைச் செய்துவிடும். தினமும் நீங்கள் உங்கள் அலுவலகத்திற்கும், உங்கள் வீட்டிற்கும் அல்லது வேறு எங்கோ போவதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தாலும் உடலுக்கு இவைகள் எதுவும் தெரியாது. அது நேராக, ஒவ்வொரு கணமும், கல்லறை நோக்கியே நடந்து செல்கிறது. ஒவ்வொரு கணத்திலும், உடலின் பயணம் கல்லறை நோக்கித்தான் இருக்கிறது. தற்போது நீங்கள் இளமையாக இருப்பதால், சுரப்பிகளின் விளையாட்டினால் இதை மறந்து விட்டிருக்கிறீர்கள். ஆனால் மெதுவாக, காலம் செல்லச் செல்ல, இந்த உடலானது கல்லறையை நோக்கிச் செல்வது தெளிவாகப் புரியும்.
உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் இந்த உடல் மட்டும்தான் என்றால், அதையும் மிச்சம் மீதியின்றி நீங்கள் இழக்கப்போகிறீர்கள் என்று அறியும்போது, அது வாழ்க்கையில் பயத்தையே உருவாக்குகிறது. இந்த உடலின் வழிகள் மிகவும் எல்லைக்குட்பட்டவை. இந்த உடல்தான் ஒவ்வொன்றும் என்று நீங்கள் செயல்பட முயற்சித்தால், எல்லைக்குட்பட்டதை, எல்லையற்றதாக்க முயற்சிக்கிறீர்கள் என அர்த்தம். அப்படி செய்யும்போது நீங்கள் துன்பப்பட நேரிடும். ஏனென்றால் அதுதான் உடலின் வழி. வேறு ஒரு வழியும் இல்லை. உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் இந்த உடல் மட்டும்தான் என்றால், அதையும் மிச்சம் மீதியின்றி நீங்கள் இழக்கப்போகிறீர்கள் என்று அறியும்போது, அது வாழ்க்கையில் பயத்தையே உருவாக்குகிறது.
உங்கள் சுரப்பிகளில் எந்தத் தவறும் இல்லை. அவைகள் நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டவை, அவ்வளவுதான். நிர்ப்பந்தமான ஒரு வாழ்க்கையை நீங்கள் வாழ்கிறீர்கள் என்றால், ஒரு அடிமையாகத்தான் நீங்கள் இருப்பீர்கள். ஒரு அடிமையாக நீங்கள் வாழ விரும்புகிறீர்களா? அடிமையாக இருக்கமுடியாத ஒரு அம்சம் உங்களுக்குள் உள்ளது. நீங்கள் ஏதோ ஒன்றிற்கு அல்லது யாரோ ஒருவருக்கு அடிமையாகிவிட்டால், பிறகு மெதுவாக உங்களுக்கே தெரியாமல், நீங்கள் மிகவும் கவலைக்கு உள்ளாகிவிடுவீர்கள். நீங்கள் குழந்தையாக இருந்தபோது, உங்கள் முகம் முழுக்கச் சிரிப்பாக இருந்தீர்கள். ஏனெனில் அப்போது நீங்கள் யாருக்கும் அடிமையாக இல்லாமல் இருந்தீர்கள், உங்களிடம் அடிமைத்தனம் இல்லாமலிருந்தது. பிறகு, மெல்ல மெல்ல பலவித கட்டாயங்களுக்கு உட்பட்டதால், உங்கள் வியாபாரம், குடும்பம், உறவுகள் எல்லாம் சிறப்பாக இருந்தபோதிலும், காரணமே தெரியாமல் உங்கள் முகத்தில் கவலை அதிகமாகியே போகிறது. சந்தோஷமாக இருப்பதற்கான எல்லா வழிகளையும் முயன்று பார்க்கிறீர்கள். மனிதர்களுக்கு செல்வமும், வயதும் அதிகரிக்க அதிகரிக்க, மகிழ்ச்சிக்காக ஏங்கித்தவித்து, எதையும் செய்யத் துவங்குவதை நீங்கள் பார்க்க முடியும்.
உங்கள் வாழ்க்கையின் ஒரு சிறிய அம்சத்தை, அதுவே எல்லாமுமாக மாற்ற நீங்கள் முயற்சிக்கிறீர்கள். அதனால், அங்கே தவிப்பு மற்றும் நம்பிக்கையற்ற நிலை ஏற்படுகிறது. அது பலன் தரப்போவதில்லை. இன்றைக்கு, குறிப்பாக மேற்கத்திய கலாச்சாரத்தில், உடலே முக்கியம், எல்லாமே உடல்தான் என்றிருப்பதால், அவர்கள் சொல்லமுடியாத அளவு துன்பப்படுகிறார்கள். உணவு, ஆரோக்கியம், இன்ஸ்யூரன்ஸ், கார், வீடு போன்ற வெளிச்சூழலின் எல்லா விஷயங்களும் கச்சிதமாகத் திட்டமிட்டு அமைக்கப்படுகிறது. ஆனால் மக்கள் அளவிட முடியாத துயரத்தில் இருக்கின்றனர். ஏறக்குறைய ஐந்து நபரில் ஒருவர், மனதை சமநிலையில் வைத்திருப்பதற்காக மருந்தை உட்கொள்கிறார். மனம் சமநிலையில் இருப்பதற்காக, தினமும் நீங்கள் ஒரு மாத்திரை எடுக்கவேண்டுமென்றால், அது ஆனந்தமான நிலை அல்ல, இல்லையா? வாழ்வின் ஒரு சிறிய பகுதியை, அதுவே வாழ்க்கை என்று ஆக்கிவிட்டதால், தினமும் மன முறிவின் விளிம்பிற்குச் செல்கிறீர்கள். வாழ்க்கை பலி வாங்குகிறது என்பதைத் தவிர வேறில்லை. ஆகவே அந்தப் பாதையில் செல்ல வேண்டாம். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் எந்த அளவுக்குப் பங்கேற்க வேண்டுமோ, அந்த அளவுக்கு மட்டுமே இருக்கவேண்டும். அதையே முழுமையாக்க முயற்சித்தால், அப்படி அது நிச்சயம் செயல்படாது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X