மணல் குவாரி கொலைகள்; யார் பொறுப்பு?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

மணல் குவாரி கொலைகள்; யார் பொறுப்பு?

Added : மே 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மணல் குவாரி கொலைகள்; யார் பொறுப்பு?

கடந்த, 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில், தி.மு.க., எந்த திட்டம் கொண்டு வந்தாலும், அதை, அ.தி.மு.க., எதிர்ப்பதும்; தாங்கள் ஆட்சிக்கு வந்தபின் அதை கைவிடுவதும்; அதேபோன்று, அ.தி.மு.க., கொண்டு வரும் எந்த திட்டத்தையும், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் மாற்றுவதும், அல்லது வேறு எதையாவது மாற்றி, வேறுபெயரில் அதே திட்டத்தை அறிமுகப்படுத் துவதும், தமிழகத்தில் எழுதப்படாத நடைமுறை. ஆனால், இவ்விரு கழகங்கள் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் போல், சில கொள்கைகளில் ஒற்றுமையாக செயல்படுகின்றன.
1. கட்சிக்காரர்களுக்கு மட்டுமே அரசு ஒப்பந்தங்களை வழங்குவது; கட்சியில் சேர்ந்தால் உழைக்காமல் தொழில் அதிபர் ஆகலாம், கோடீஸ்வரர் ஆகலாம் என்ற தவறான கோட்பாட்டை கற்றுத்தருவது.2. அரசு நிர்வாகத்தில் வட்டச் செயலர் முதல், அமைச்சர்கள் வரை தலையிடச் செய்வது.3. மணல் குவாரி கொள்கைகள் மற்றும் மது விற்பனை கொள்கைகள்.4. தேவையின்றி அரசுத்துறைகளின் எண்ணிக்கையைப் பெருக்கி நஷ்டம் அடையச் செய்வது.5. அரசின் கொள்கை என்பது, நிர்வாகம் செய்வது மட்டுமல்ல, தொழில் செய்வதும்தான் என்ற ரீதியில் செயல்படுவது.6. மாநிலத்தின் அடிப்படை கட்டமைப்பையும், தொழில்வளத்தையும் பெருக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்காமல், இலவசத் திட்டங்களை மட்டுமே அறிமுகம் செய்து, மக்களை எப்போதும் கையேந்த வைப்பது.7. கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டாலும், மாற்று சிந்தனைக்கு இடம் கொடுக்காமல், அந்த தொழிலை மேலும் பெருக்கி நஷ்டத்தை வளர்ப்பது. உதாரணமாக, அரசு, பஸ் தொழில் நடத்துவது.தற்போதுள்ள பிரச்னைக்கு வருவோம். மணல் குவாரிகள் என்பது, ஆட்சியாளர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கோடிக்கணக்கான ரூபாயை குவிக்கும், செல்வ வளமிக்க தொழிலாகவே மாறிவிட்டது. மற்ற தொழில்களைக் காட்டிலும், இந்த மணல் குவாரி தொழிலில் தணிக்கை செய்வது மிக மிக கடினம். 'டாஸ்மாக்'கைவிட, 'டாமின்' கையாளும் கிரானைட்டைவிட, மணல் தொழிலில், எவ்வளவு மணல் அள்ளப்பட்டது என்பதை, தணிக்கை செய்து கணக்கு கூறுவது மிகவும் கடினம். அதனால் தான், எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும், அந்த ஆட்சியில் உயர் பதவியில் இருப்பவர்களின் குடும்பத்தினர் மட்டுமே, மணல் தொழிலை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர்.
கடந்த, 15 ஆண்டுகளாக, காஞ்சிபுரம் மாவட்டத்திலும், வட ஆற்காடு மற்றும் தென்னாற்காடு மாவட்டத்திலும் மணல் குவாரிகளில் நடந்த கடத்தல் முறைகேடுகளை தடுக்கச் சென்ற, 25க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள், காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.கொலைச் சம்பவம் நடந்ததும், குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றனர்; கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்படுகிறது. அத்துடன், அப்பிரச்னை முடிக்கப்படுகிறது.அதேவேளையில், இப்பிரச்னையின் அடிப்படையை புரிந்து கொண்டு நிரந்தர தீர்வு காண வேண்டுமென்ற சிந்தனை, இரு கழகங்களுக்கும் இதுவரை உதித்ததே இல்லை.ஆற்று மணல் என்பது, கட்டட கட்டுமானத்துக்கு அடிப்படையான ஒன்று. இதற்கு மாற்றாக, பாறைகளை உடைத்து, 'எம்.சாண்ட்' தயாரிக்கப்படுகிறது. இருந்தும் இது, மணலின் தேவையை பூர்த்தி செய்வதாக இல்லை (எம்.சாண்ட் தொழிலுக்கும் சரியான ஊக்குவிப்போ, அரசு உதவியோ கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இதனால், இத்தொழிலில் பெரும்பாலான தொழிலதிபர்கள் ஈடுபடுவதில்லை. அதேவேளையில், அரசியல் அதிகார பலமிக்க குடும்பத்தினரே ஈடுபடுகின்றனர்).ஆறுகளில் தேவையான மணல் அள்ள அரசு நினைத்தாலும், இயற்கை வளம் பாதிக்கப்படும் என்பதாலும், சுற்றுவட்டார கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதாலும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் மணல் அள்ள, தேசிய பசுமைத் தீர்ப்பாயமும், உச்ச நீதிமன்றமும் சில வழக்குகளில் கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன.மணல் தட்டுப்பாட்டிற்கு ஒரே தீர்வு, வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது வெளிநாடுகளில் இருந்தோ மணலை இறக்குமதி செய்து, கட்டுமானப் பணிகளுக்கான தேவையை முழுமையாக பூர்த்தி செய்வது. இவ்வாறு வெளியிடங்களில் இருந்து மணலை தருவிப்பதன் மூலமாக, தமிழகத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்கவும் முடியும். ஆனால், சில குறுகிய மனமுள்ள அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் சிந்தனைகளால், இதற்கும் பல கட்டுப்பாடுகளை விதித்து, இறக்குமதி மணலை அரசு மூலமாகவே விற்க வேண்டுமென்ற சட்டத்தை சமீபத்தில் இயற்றியிருக்கின்றனர். இது, ஏதோ அரிதிலும் அரிதான பொருள் என்பது போன்று, இச்சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. இதை கட்டட கட்டுமான பயன்பாட்டிற்குரிய பொருளாக, சாதாரண மணலாக பாவித்து, எந்த நாட்டிலிருந்து, மணலை இறக்குமதி செய்தாலும் அதற்குரிய வரியை அரசு வசூலித்துக் கொண்டு விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.அரசின் பொதுப்பணித்துறை என்பது, வினியோக நிறுவனமா, அதன் வேலை ஆற்றுமணல் விற்பதுதானா? இன்று மணல் விற்க ஆரம்பிப்பர்... நாளை, இறக்குமதி சிமென்ட்டையும், இறக்குமதி டைல்சையும், இறக்குமதி பெயின்ட்டையும் விற்கப்போகின்றனரா? மணலை இறக்குமதி செய்வதால் ஏற்படும் நன்மைகளை கருத்தில் கொண்டு, இறக்குமதியை அரசு ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான், நம் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும். மணலை பல பேர், பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் போது, 'மணல் அரிதான அல்லது அதிகம் விலை கொடுத்து வாங்க வேண்டிய பொருள்' என்ற நிலை அடியோடு மாறிவிடும். போட்டியின் காரணமாக, அன்றைய மார்க்கெட் சூழ்நிலைக்கு ஏற்ப மணல் விலைக்கு கிடைக்கும்.ஓரிருவர் அல்லாமல், அதிகம் பேர் மணல் இறக்குமதி செய்யும் போது, அதன் விலையை, 'சிண்டிகேட்' முறையில் இறக்குமதியாளர்கள் உயர்த்திவிட முடியாது.அரசு, இறக்குமதி மணலுக்கு சுங்க வரி வசூலிக்கலாம். அதன் தரத்தை உறுதி செய்ய, வெளிநாடுகளில் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்களிடம் சான்று பெற்றுவரக்கூறலாம்.அதைவிட்டுவிட்டு இறக்குமதி மணலை பொதுப்பணித் துறை மூலமாகத்தான் விற்பனை செய்வோம் என்றால்... ஆறு, குளம், குட்டை, அணை உள்ளிட்ட நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள், இனி முழு நேரமும் மணல் வியாபாரத்துக்காக தங்களது பணி நேரத்தை செலவிடப்போகின்றனரா?ஏற்கனவே, காவிரி நீர் பங்கீடு தொடர்பான இறுதித் தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீரில், 14.75 டி.எம்.சி.,யை குறைத்ததுடன், இவ்வளவு காலமாக தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து இருந்தது.மற்ற நான்கு தென்மாநிலங்களைக் காட்டிலும் அதிக மழைப்பொழிவைப் பெற்றிருக்கும் தமிழகத்தில், இதுவரை இருந்த தமிழக ஆட்சியாளர்கள் எவ்வளவு நீர் நிலைகளை மேம்படுத்தினர், தடுப்பணைகளை கட்டினர் என்றெல்லாம் கேள்வி எழுப்பிஇருந்தது. தமிழகத்துக்கான தண்ணீர் குறைக்கப்பட்டது தொடர்பான விவாதங்கள் எழுந்தனவே தவிர, குறைத்து உத்தரவிட்டதற்காக உச்சநீதிமன்றம் கூறிய காரணங்களைப் பற்றி, இவ்விரு, 'கழகங்கள்' வாய்திறக்கவில்லை. நீர் குறைப்புக்கான காரணத்துக்காக, இவ்விரு கழகங்களும் வெட்கி தலைகுனிந்திருக்க வேண்டும்.இப்படிப்பட்ட தீர்ப்பிற்கு பிறகாவது தமிழக அரசு, நீர் நிர்வாகத்தை திறம்பட மேற்கொள்ள வேண்டும். 'ஆறாக இருந்தாலும், குளம் குட்டையை துார்வாருவதாக இருந்தாலும், அனைத்தையும் அறிவியல் பூர்வமாக அணுகி, லஞ்ச லாவண்யமற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளைக் கொண்டு தனி திட்டங்களாக செயல்படுத்தினால், மழையை வைத்தே தமிழகத்தின் விவசாயத்துக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். மேலும், வல்லுனர்கள் தெரிவித்தது போல, தேவையான இடங்களில் சிறுசிறு தடுப்பணைகள் கட்டுவதன் வாயிலாக, பாசனத்துக்கான நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். மழையின் போது நீரை சேமித்து வைத்தாலே பெரும்பாலான இடங்களில் விவசாய, குடிநீர் தேவையை பூர்த்தி செய்துவிட முடியும். அடுத்த இரு ஆண்டுகளில் தமிழக அரசு இதில் முழு கவனம் செலுத்த வேண்டும்.அதேபோன்று, இறக்குமதி மணலை, முழுமையாக அரசு மட்டுமே விற்பனை செய்யும் என்பதை ரத்து செய்துவிட்டு, அரசுடன் சேர்ந்து தனியாரும் விற்கலாம் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். மணல் என்பது ரவுடிகளின் தொழில் என்பதற்கு முடிவு கட்டினால் மட்டுமே, அரசு அலுவலர்களும், போலீசாரும் அநியாயமாக கொலை செய்யப்படுவதை தவிர்க்க முடியும்; இதை செய்யுமா தமிழக அரசு?
ல.ஆதிமூலம்சமூகநல விரும்பி
adimoolam@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X