எல்லாமே உன்னிடம் தான் இருக்குது!| Dinamalar

எல்லாமே உன்னிடம் தான் இருக்குது!

Updated : ஜூன் 01, 2018 | Added : மே 19, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement
எல்லாமே உன்னிடம் தான் இருக்குது!

கல்லுாரி படிப்பை முடித்து, வேலைகளுக்கு செல்லதயாராகும் காலம் இது.இளைஞர்களின் வாழ்க்கையில் புது அத்தியாயம் துவங்க உள்ள இந்த நேரத்தில், சிலஅறிவுரைகள் அவர்களுக்கு அவசியமே!

இது போட்டிகள் நிறைந்த உலகம்; எப்படியும் வென்றே ஆக வேண்டும்... நேர்மையாக ஓடி வெற்றி காண்போர், பல காலங்களுக்கு நிலைத்திருப்பர்; எதிரிகளிடமும் பாராட்டு பெறுவர்.
தேர்வு முடிவுகள் வெளியாகும் இந்த நேரத்தில் தான், இளைஞர்களின் எதிர்காலத்தில் வர்ணம் பூசப்படுகிறது. இத்தனை ஆண்டுகள் படித்த படிப்பு முடிந்தது; அதற்கான பரிசு காத்திருக்கிறது.
மாணவர்கள் என்ற பருவத்திலிருந்து, வேலை செய்யப்போகும் ஒரு அதிகாரி என்ற புதிய பரிமாணத்தை நோக்கி செல்லும் நேரம் இது. இத்தனை நாள் தவத்திற்கு, 'வேலை' என்ற வரம் வரும் நேரம் இது.
முன்னொரு காலத்தில், கல்லுாரிகள் நமக்கு படிப்பை மட்டுமே சொல்லித் தந்தன. செய்தித்தாளில் வரும் விளம்பரங்களை பதிவு செய்து, தபாலிலோ அல்லது நேரிலோ சென்று, வேலைக்கான விண்ணப்பத்தை வழங்கி, எப்போது வேலைக்கு அழைப்பர் என, ஒவ்வொரு முறையும் தபால்காரர் வருகையை ஆவலோடு பார்த்து, ஏங்கி நின்ற காலம் அது.

'எதற்கும் இவன் லாயக்கு இல்லை... இவனுக்கெல்லாம் எவர் வேலை தரப் போகிறார்...' என, ஆளாளுக்கு கிண்டலும், வசையும் பலர் பாடியிருப்பர்; அதையெல்லாம் தாண்டி, வெற்றி கண்டோர் பலர்.ஆனால், இன்றோ, நிலைமை வேறு. கல்லுாரிகள் படிப்பையும் சொல்லித் தந்து, வேலை தரும் நிறுவனங்களையும் கல்லுாரிக்கே அழைத்து வந்து, வேலைக்கு மாணவர்களை தேர்வு செய்கின்றன.
ஆனால் சில மாணவர்கள், அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல், நிறுவனங்களையும், படித்த கல்லுாரிகளையும் குறை சொல்லி சுற்றித் திரிகின்றனர்.வாய்ப்புகள் பெருகிக் கிடக்கின்றன. மாணவர்கள் தங்களுக்கு இருக்கும் குறை, நிறைகளை புரிந்து கொள்ளாமல், வேலையே கிடைக்கவில்லை என, புலம்புகின்றனர்.

கடலில் குதித்தாகி விட்டது. இந்தப் பக்கம் திரும்பி வர இயலாது; கரை சேர்ந்தே ஆக வேண்டும் அல்லது கடலில் மூழ்க வேண்டும். நாம் நம்பிக்கையோடு கரை சேர்வோம்.கடைசி ஆண்டு படிப்பை முடித்து, கல்லுாரியில் பிரியாவிடை பெறும் காலம் இது; கண்டிப்பாக தேறி விடுவோம். படிப்பை முடித்தவுடன், புதிதாக வேலைக்குச் சேர்வோர் பலர். மேற்கொண்டு புதிய படிப்பை தொடர இருப்போர் பலர். ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டம்... ஒரு லட்சியம். எதிர்காலத்தை நோக்கிய பயணம்...

சிலருக்கு சொந்த ஊரிலேயே வேலை கிடைத்திருக்கும்; சிலருக்கு வெளி ஊர்களில்,வெளி மாநிலங்களில், வெளி நாடுகளிலும் கூட! சிலருக்கு படித்த படிப்புக்கு ஏற்ற வேலையும் கிடைத்திருக்கும்; சம்பந்தமே இல்லாமல், படித்ததற்கும், வேலைக்கும் தொடர்பேஇன்றி, சிலருக்கு வேலை அமைந்திருக்கும்.சிலர் இப்படித் தான் வர வேண்டும் என, தீர்மானித்திருப்பர். ஆனால், படிப்போ வேற மாதிரி இருந்திருக்கும். ஆனால், அதிர்ஷ்டவசமாக எதை செய்ய நினைத்தோமோ, அதே துறையில் வேலை கிடைத்திருக்கும். இப்படி ஒவ்வொரு இளைஞர்களின் வாழ்க்கையும், ஒவ்வொரு திசையில் பயணிக்க ஆரம்பிக்கும் நேரம் இது.

வண்ண கனவுகள் பலிக்கும் போது, புது நண்பர்கள், புது உலகம் வாய்க்கும். முதன் முதலாய், சலவை செய்த நோட்டுகள், ஏ.டி.எம்., இயந்திரத்திலிருந்து வெளியே வந்து விழுவதையும், அந்த நோட்டை முகர்ந்துபார்க்கும் சுகம் கிடைக்கும்.

சம்பளம் குறைவோ, நிறைவோ, அதில் வீட்டில் உள்ளோருக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்து, அவர்களை எங்கேயாவது அழைத்து போய், நண்பர்களுக்கு சின்னதாய் ஒரு, 'டிரீட்' வைத்து என, பல வண்ணங்கள் கண் முன் வந்து போகும்.கல்லுாரியிலிருந்து கம்பெனிக்குள் நுழையும் இந்த நல்ல நேரத்தில், நீங்கள் பல விஷயங்களுக்கு உங்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். அதற்காக, புது இடம், புது மனிதர்கள் என்ற பதற்றத்தை தவிருங்கள்.

வேலை செய்யும் இடத்தில், பல மாநிலத்திலிருந்தும், பல நாட்டிலிருந்தும் வேலை செய்வோர் இருக்கலாம். மொழியும், பழக்க வழக்கமும், கலாசாரமும் வேறாக இருக்கலாம்.அவர்களின் கலாசாரத்தை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவர்களின் மொழிகளை பழக்கிக் கொள்ளுங்கள். இந்த மதத்தினர், இந்த மாநிலத்தவர், இந்த ஊர்க்காரர்கள் இப்படித் தான் இருப்பர் என, தீர்மானிக்காதீர்கள்.

ஏதேனும் ஒரு இடத்தில் அல்லது ஒருவர் வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளை வைத்து, ஒட்டுமொத்த சமுதாயமே இப்படித் தான் என, நினைத்து விடாதீர்கள்.உடன் பணியாற்றுபவர்களின், பண்டிகைகள், விசேஷங்கள், அவர்களின் சமய கொண்டாட்டங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதோடு, கலந்தும் கொள்ளுங்கள். உங்கள் வீட்டு விசேஷங்கள், உங்கள் ஊர் விழாக்கள், பண்டிகைகளில் அவர்களையும் கலந்து கொள்ள செய்யுங்கள்.

கல்லுாரியில் படிக்கையில், நேரங்களை உங்கள் இஷ்டம் போல் செலவழித்திருப்பீர்கள். திடீரென அலுவலக நேரத்திற்கு ஏற்றாற் போல் உடனடியாக மாற வேண்டிய சூழல்ஏற்படலாம்.அதிகாலை நேரப் பணிகளாகவோ அல்லது இரவு நேர நீண்ட பணிகளாகவோ அமையும் உங்கள் பணி, உங்களுக்கு முதலில் கடினமாக இருக்கும்; மாற்றிக் கொள்ள பழகுங்கள்.

படிக்கும் காலத்தில், நினைத்த நேரத்தில் எழுந்திருப்பீர்கள்; நினைத்த நேரத்தில் துாங்குவீர்கள். ஒவ்வொரு வேலையையும் குறிப்பிட்ட நேரத்திற்கு முடித்திருக்க மாட்டீர்கள்; செய்வதற்கு நண்பர்கள் இருந்திருப்பர்.ஆனால், வேலை செய்யும் இடத்தில் நேரத்தை, 'மேனேஜ்' செய்வது முக்கியம். வேலையை நாளைக்குபார்த்துக் கொள்ளலாம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

கல்லுாரியில் மாணவர் என்ற நிலையில் தான் உங்கள் வாழ்க்கை இருந்திருக்கும். கலாட்டா செய்வது, விளையாட்டாக பேசுவது, மரியாதை இல்லாமல் நடந்து கொள்வது, இந்த இடத்தில் இந்த தருணத்தில் இப்படித் தான் நடந்துகொள்வது என்பதே தெரியாமல் வளர்ந்திருப்பீர்கள்.

ஆனால், அலுவலக வாழ்க்கை தொடங்கிய முதல் நாளே, நாம் வகிக்கும் பொறுப்புகளுக்கு ஏற்றாற் போல் உங்கள் நடை, உடை, பாவனை, பேச்சு அனைத்தையும் மாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கும். பெண்களிடம் எப்படி நடந்து கொள்வது; சீனியர்களிடம்எப்படி நடந்து கொள்வது என, மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.சிலர் உங்களை, 'வேலைக்கு போய் ரொம்ப தான்மாறிட்டான்' என, கலாய்ப்பர்; கவலைப்படாதீர்கள். இந்த மாற்றம் உங்களை வேறு நிலைக்கு எடுத்துச் செல்லும்.

சிலருக்கு தாம் படித்த வேலைக்கு ஏற்றாற் போல் வேலை கிடைக்காமல் இருக்கலாம் அல்லது குடும்பசூழ்நிலை காரணமாகக் கூட நீங்கள் வேலையை ஏற்றிருக்கலாம். ஆனால், நம் வாழ்க்கை இது தான்; இங்கே தான் நம் பயணம் தொடங்குகிறது என தீர்மானித்தவுடன், அந்த வேலையை பிடித்த மாதிரி மாற்றிக்கொள்ளுங்கள்.

இந்த வேலையை இப்போதைக்கு செய்வோம். வேறு வேலை கிடைக்காமலா போய்விடும் என்று நினைப்போடு, நீங்கள் வேலை செய்யும்நிறுவனத்திற்கு துரோகம் செய்யாதீர்கள். ஒரு வேலையிலோ, பரீட்சையிலோ தேறாவிட்டால், உடனே பலர் தாங்கள் படித்த கல்வி நிறுவனங்களை குறை கூறத் தொடங்கி விடுகின்றனர்.

ஆசிரியர்கள் சொல்லித் தரும் பாடங்களோ அல்லது வேலைக்கு சேர்வதற்கான பயிற்சிகளை தரும் நிறுவனங்களோ உங்களை உடனடியாக மாற்ற இயலாது.மாற்றங்களை நீங்கள் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு வினாடியிலோ, ஒரு நாளிலோ உங்களை முழுமையாக மாற்றி கொள்ள முடியாது. நீங்கள் நினைத்தால் தான் உங்களை நல்ல விதமாக மாற்றிக் கொள்ள முடியும்.

குழுவாக வேலை செய்வது, பணத்தை நிர்வாகம் செய்வது, பல தரப்பட்ட மக்களை எதிர்கொள்வது, தங்களுடைய சொந்த வாழ்க்கையும், வெளி உலக வாழ்க்கையும் எப்படி மாற்றிக் கொள்வது போன்றவற்றை உங்கள் அனுபவங்கள் மூலமே பெற முடியும். அது, அலுவலக பணியில் தான் கிடைக்கும்.

நீங்கள் புதிதாக சேர்ந்தவராயினும், உங்கள் தரம் சிறியதாக இருந்தாலும், உங்களுக்கு புதிதாகவும், வித்தியாசமாகவும் தோன்றும் சிந்தனைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். ஒரே வேலையை ஒரே மாதிரியே செய்து கொண்டிருக்காதீர்கள்.நீங்கள் சொல்லும் யோசனைகளை யாராவது ஏளனம் செய்வர் என, நினைக்காதீர்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் போது தைரியமாக, உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்.

செய்த வேலையையே செய்யாமல், புதிய சவால்களை சந்திக்கக்கூடிய வேலைகளை தைரியமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை, அந்த வேலையை முடிக்கக்கூடிய தகுதி, திறமை உங்களுக்கு இல்லையென்றால் தைரியமாக சொல்லுங்கள்.உங்கள் பேச்சும், நீங்கள் அணியும் ஆடைகளும், உங்களின் வேலைக்கு ஏற்றாற் போல் இருக்கிறதா என, பார்த்துக்கொள்ளுங்கள். சில கம்பெனிகளில், 'டிரெஸ் கோட்' வைத்திருப்பர். நீங்கள் அணிந்திருக்கும் உடையை பார்த்த மாத்திரத்திலேயே உங்கள் மேல் மரியாதை தோன்றி விடும்.

யாரையும் அண்டி இருக்காதீர்கள். ஒரு விஷயம்தெரியவில்லை என்றால் நீங்களே முயற்சித்து தெரிந்து கொள்ளுங்கள்.உங்களிடம் ஒரு வேலையை ஒப்படைத்தால் நிச்சயமாக முடித்து விடுவீர்கள் என்ற நம்பிக்கையை, உங்கள் மேலதிகாரிக்கு ஏற்படுத்துங்கள். உங்கள் அதிகாரியிடம் உங்கள் வேலைகள் பற்றிய முன்னேற்றங்களை அவ்வப்போது தெரிவியுங்கள்.

எந்த ஒரு நல்ல காரியங்களை நிறுவனம் செய்தாலும், அதை ஆதரித்து செயல்படுத்துவது நீங்களாக இருக்க வேண்டும். இது, மேலே உயர உதவும்.பெரும்பாலான இளைஞர்கள், ஒரு வேலையில் சேர்ந்தவுடன், தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டுக் கொள்ள துவங்கி விடுகின்றனர். தன் திறமைக்கான சம்பளம் வழங்கப்படவில்லை; உயரிய அந்தஸ்தும் கிடைக்கவில்லை என, பலர் அங்கலாய்க்கின்றனர்.

என்றாவது ஒரு நாள், உடன் படித்த மாணவர்களையோ, உறவினர்களையோ சந்திக்கும் போது, அவர்கள் தன்னை விட பெரிய பதவி அல்லது அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பதை அறியும் போது, தங்கள் நிலைக்காக ஏங்குகின்றனர்; வேறு வேலை தேட ஆரம்பித்து விடுகின்றனர்; ஒரு கம்பெனி விட்டு மறு கம்பெனி தாவுகின்றனர்.அங்கேயும் திருப்தி இல்லை என்றால், மாறிக் கொண்டே இருக்கின்றனர்; கடைசி வரை, எதிலும் திருப்தியடையாமல் தவிக்கின்றனர்.

சேர்ந்த நிறுவனத்தில் சம்பளம் குறைவாக இருந்தாலும், வேலையில் திருப்தி இருந்தால், உயர்வதற்கான வாய்ப்பு இருந்தால், சிறிய நிறுவனமாக இருந்தாலும், அதன் கூடவே வளருங்கள். நீங்கள் நடக்காதீர்கள்; பறப்பதற்கு முயற்சி செய்யுங்கள்!
மல்லி கிஷோர்
கல்வியாளர்
மனித வள ஆலோசகர்


இ - மெயில்: krshore@goripe.com

மொபைல்: 99625 16138.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajarajan - Thanjavur,இந்தியா
21-மே-201817:25:12 IST Report Abuse
Rajarajan மிக அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள். கீழ்கண்டவற்றை கணக்கில் கொண்டால், மாணவர் எதிர்காலம் தன்னம்பிக்கையுடன் ஒளி வீசும் என்பது கண்கூடு. தன்னுடைய ஆர்வம் அறிந்து, அந்த துறையை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வற்புறுத்தலின் பேரிலும், மற்றவர்களுக்காவும், ஈர்ப்புக்காவும் படிக்க கூடாது. மேலும், விருப்பமான படிப்பிற்கான, தகுதி மற்றும் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும். தொடர்ந்து திறனை புதுப்பிக்கவேண்டும். புதிய சவால்களை எதிர்கொள்ளவேண்டும். ஜாதி பெயரில் இடவொதிக்கீட்டை ஒழிக்கவேண்டும். campus interview வையும் அடியோடு ஒழிக்க வேண்டும். திறமைக்கு மட்டுமே முன்னுரிமை. (மாற்றுத்திறனாளிகள் / திருநங்கைகள் / அடித்தட்டு மக்கள் மட்டுமே விதிவிலக்கு). பன்மொழி திறமையை வளர்க்கவேண்டும். தொடர்ந்து கல்வி மற்றும் திறனை புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். சேரும் சேர்க்கை ஒழுங்காக இருக்கவேண்டும். நடை, உடை மற்றும் பாவனைகளை திருத்திக்கொள்ளவேண்டும். முக்கிய துறைகள் மற்றும் பதவிகள் தவிர, மற்றவற்றில் நிரந்தர வேலை மற்றும் அரசு சார்ந்த துறைகளை ஒழிக்க வேண்டும். வியர்வை சிந்தி, நிறுவனம் நிறுவனமாக ஏறி இறங்கி, பல நேர்முக தேர்வுகளில், நேரிடையான அனுபவத்தை பெறவேண்டும். கல்வியை முடித்தவுடனே campus மூலம் வேலை என்ற மாயையை முற்றிலும் ஒழிக்கவேண்டும். விதை போட்டால், முளைத்து பலன் தர சிறிது காலம் ஆகும். மேலும் அதற்க்கு தொடர்ந்து உழைக்கவேண்டும் என்ற அடிப்படை எண்ணம் வேண்டும். மற்றவருடன் ஒப்பிடாமல், தன்னுடைய பலம் மற்றும் பலவீனத்தை அறிந்துகொண்டு செயல்படவேண்டும். நேர்மை, ஒழுக்கம், சுயகட்டுப்பாடு வேண்டும். ஒரு குறிப்பிட்ட கல்வி திறனுக்கு பிறகு, பெற்றோரை சாராமல், தானே உழைத்து படித்து மேலே வரவேண்டும். குறிப்பிட்ட வயதுக்கு பிறகே திருமணம் என்ற மனஉறுதியும், குடி, மற்றும் தேவையற்ற காதல் போன்றவையும் கூடாது. முக்கியமாக, சினிமா மாயையில் சிக்காமல், அதை ஒரு பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமே கருதவேண்டும். (இவையாவும் மாணவருக்கு அறுவையாகயும், பத்தாம்பசலியாக மற்றும் கசப்பாக இருந்தாலும், இவைதான் உண்மை மற்றும் நிதர்சனம் என்று புரியாவிட்டால், வயதான காலத்தில் வருந்த நேரிடும்). வாழ்வில் மேலேவந்தவர் யாவும் மேற்சொன்னவற்றை பின்தொடர்ந்து தான் வெற்றிபெற்றனர் என்பதை உணரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X