தூத்துக்குடி கலவரம்; காவல்துறை கற்றுணர்ந்த பாடம்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

தூத்துக்குடி கலவரம்; காவல்துறை கற்றுணர்ந்த பாடம்!

Updated : ஜூன் 10, 2018 | Added : ஜூன் 10, 2018 | கருத்துகள் (1)
Advertisement
தூத்துக்குடி கலவரம், காவல்துறை ,கற்றுணர்ந்த பாடம்!

துாத்துக்குடியில், 'ஸ்டெர்லைட்' ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த வன்முறைகளும், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் பலியான துயரமும், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தை மீறியது கலகக்காரர்களா, காவல்துறையினரா என்ற விவாதம், இன்னும் ஓய்ந்தபாடில்லை.
'விசாரணை கமிஷன்' அமைத்து, பிரச்னையின் வீரியத்தை குறைத்திருக்கிறது, தமிழக அரசு. 'ஸ்டெர்லைட் ஆலையின் கதவு, தமிழக அரசால் தற்காலிகமாக மூடப்பட்டாலும், நீதிமன்ற உத்தரவு வாயிலாக மீண்டும் திறக்கப்படலாம்' என, அணைக்கப்பட்ட ஆர்ப்பாட்ட நெருப்பில் சிலர், அனலை அள்ளிப்போடுகின்றனர். இதனால், ஸ்டெர்லைட் விவகாரம், 13 பேரின் உயிர் பலியுடன் முடிந்து விடவில்லை; இன்னமும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என, நம்பத் தோன்றுகிறது.ஒருவேளை, நீதிமன்ற உத்தரவுடன், ஆலை மீண்டும் திறக்கப்பட்டால், துாத்துக்குடி தெருக்களில், கலவரக்காரர்களை எதிர்கொள்ள, காவல்துறையினர் இப்போதாவது தயாராக இருக்கின்றனரா, கடந்து வந்த, கலவர களத்தில் இருந்து கற்ற படிப்பினை வாயிலாக, தங்களின் தவறுகளை உணர்ந்தனரா என்ற கேள்விகளுக்கு, பின்னாளில் நடக்கவிருக்கும், போராட்டங்களின் போதே விடை தெரியும்.


என்ன ஆச்சு?

துாத்துக்குடி போராட்டத்தின் போது, பொதுமக்களை ஒருங்கிணைத்து, 100 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த சில குழுக்கள் மற்றும், 'புரட்சிகர இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம்' போன்ற தீவிர அமைப்புகளின் திரைமறைவு திட்டங்கள் மற்றும் உள்நோக்கங்களை சரிவர கணித்து, முன் கூட்டியே உஷார்படுத்த, தமிழகம் முழுவதும், விரிவான கட்டமைப்பு உடைய, மாநில உளவுத்துறை தவறிவிட்டது. பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், கிராமம் தோறும் கூட்டம் நடத்தி, 100வது நாள், 'நிகழ்வு'க்கு திட்டமிட்டு, துாத்துக்குடி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக திரண்டு வர, பல நாட்களாக வேலை செய்துஉள்ளனர்.இதை, மாவட்ட காவல்துறையும், உளவுத்துறையும் முன் கூட்டியே கணித்து, தடுக்கத்தவறியது அதிர்ச்சி கலந்த ஆச்சரியமே.

மாவட்ட, எஸ்.பி.,யின் நேரடி கண்காணிப்பில், போலீஸ் ஸ்டேஷன் வாரியாக செயல்படும், 'ஸ்பெஷல் பிராஞ்ச்' என்ற உளவுப்பிரிவு, 100 நாள் போராட்ட நாட்களில் நடந்த தகவல்களை சேகரித்து, அரசுக்கு அறிக்கை அளித்ததாகத் தெரியவில்லை. அவ்வாறு அளித்திருந்தால், துப்பாக்கிச்சூடு அளவிற்கு துயரம் வளர்ந்திருக்காது. நுாறாவது நாள் போராட்ட நிகழ்வு குறித்து, மாவட்ட நிர்வாகமும், சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் மாவட்ட காவல் நிர்வாகமும், சரியான முறையில் யூகித்து, போராட்டக்காரர்களை எதிர்கொள்ளத் தேவையான முன்னேற்பாடுகளை செய்யாமல், 'கோட்டை' விட்டு விட்டன.
போராட்டக்காரர்களை தடுக்க, 144 தடை உத்தரவு பிறப்பித்த மாவட்ட நிர்வாகம், அதை, காவல்துறையினர் எவ்வாறு செயல்படுத்த வேண்டும், தடையை மீறும் போராட்டக்காரர்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பான, தெளிவான வன்முறை தடுப்பு உத்திகளை, மாவட்ட, எஸ்.பி.,யுடன் சேர்த்து வகுத்திருக்க வேண்டும். முன் கூட்டியே திட்டமிட்டு நடவடிக்கையில் இறங்கியிருந்தால், கலவரக்காரர்களுக்கு பயந்து, காவல்துறை யினர் புறமுதுகிட்டு ஓடிய, அவல நிலை ஏற்பட்டிருக்காதே! கலவரக்காரர்களை, களத்தில் நேருக்கு நேர் எதிர்கொண்டு, சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதை, காவலர்கள் மற்றும் தலைமை காவலர்களால் மட்டும் செய்துவிட முடியாது.
எந்தெந்த சூழலில், எவ்விதமான முறையில், கலவரக்காரர்களை எதிர்கொண்டு கட்டுப்படுத்த வேண்டும் என, காவலர்களால் முடிவெடுக்க முடியாது. உடனிருந்து, களத்தில் வழிநடத்த வேண்டியது, களப்பணி அதிகாரிகளான, இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.,க்கள், ஏ.டி.எஸ்.பி.,க்களின் பணி. ஆனால், இந்த இடைநிலை அதிகாரிகள் பலரும், கலவரக் காட்சி, 'வீடியோ' பதிவுகளில், களத்தில் காணப்படவில்லையே ஏன் ?

வன்முறை தடுப்பு நடவடிக்கையில், இடைநிலை அதிகாரிகளின் பங்களிப்பு, மிக முக்கியம். இவர்களின் நேரடி கண்காணிப்பும், காவலர்களை வழிநடத்திச் செல்லும் ஒழுங்குமுறையும் தான், காவல்துறையின் செயல்பாடுகளுக்கே அச்சாணி; கலவர தடுப்பு நடவடிக்கையின் போது, இந்த அச்சாணி கழன்றுவிட்டதை, சில உயரதிகாரிகளே ஒப்புக்கொள்கின்றனர்.


கற்ற பாடம்

இந்நிலையில், கலவர தடுப்பு நடவடிக்கையில் அனுபவம் பெற்ற, போலீஸ் உயரதிகாரிகள் சிலர், வருங்காலத்தில் காவல்துறையை சீர்படுத்துவதற்கான ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர்.
அதன் விபரம்:*தமிழக காவல்துறையில், அதிகாரிகள் பலரின் போக்கு, சமீபகாலமாக ஆரோக்கியமானதாக இல்லை. நிர்வாகத்திறன் உள்ளவர்களை தவிர்த்து, அரசியல் சிபாரிசிலும், ஜாதி அடிப்படையிலும், முக்கிய பதவிகள், பணியிட மாற்றங்கள் பரிமாறப்படுகின்றன

*விலை கொடுத்து வாங்கும் பொருளை, அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கும் வியாபாரி போல, 'விலை கொடுத்து' வாங்கும் பதவியை, பல அதிகாரிகள், தவறான வழிகளில் பணம் சேர்க்கவே பயன்படுத்துகின்றனர்

*லஞ்ச - லாவண்யம் அதிகரித்து, காவல்துறை மீதான அதிருப்தி மக்களிடம் வலுப்பெற்று, போராட்டக்களங்களில் எதிரொலிக்கிறது. சில மேலதிகாரிகள் மீது, தவறான எண்ணம் ஏற்பட்டு, பிரச்னைக்குரிய நேரங்களில், மறைமுகமாக ஒத்துழையாமை நிலைபாட்டை, காவலர்கள் எடுக்கின்றனர். இதை சரி செய்ய காவல்துறை, தன்னைத்தானே, துாய்மைப்படுத்திக்கொள்ள வேண்டிய நிலைக்கு, தற்போது தள்ளப்பட்டிருக்கிறது

*மாவட்ட, எஸ்.பி.,க்கள் மற்றும் சரக, டி.ஐ.ஜி.,க்கள், சமுயாயத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும், கடந்த கால நடைமுறைகள், சமீபகாலமாக புறக்கணிக்கப்படுகின்றன. போலீஸ் உயர் அதிகாரிகளும், அரசியல், பணபலம் உள்ள நபர்களிடம் மட்டுமே, தொடர்பு வைப்பதில் அக்கறை காட்டுகின்றனர். சாதாரண மக்கள் விஷயத்தில் அக்கறை காட்டுவதில்லை. இதனால், அதிகாரிகள், மக்களிடம் அந்நியப்பட்டு வருகின்றனர். அதனால் தான், போராட்டங்களின் போது, அதிகாரிகளின் பேச்சு மற்றும் உத்தரவாதத்தின் மீது, மக்களுக்கு நம்பிக்கைஏற்படுவதில்லை
*கல்வியில் பின்தங்கியோர் மட்டுமின்றி, படித்த இளைஞர்களும், அதிகளவில் போராட்டக்களங்களில் திரள்வதை, ஜல்லிக்கட்டு முதல் ஸ்டெர்லைட் வரை பார்க்க முடிந்தது. எனவே, மக்கள் கூடும் பெருந்திரள் போராட்டங்களை எதிர்கொள்ள, காவல்துறையினருக்கு கலவரத்தடுப்பு பயிற்சிகள் அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்
*சமீபகாலமாக, எந்த போராட்டம் பெரிய அளவில் நடந்தாலும், 'நமக்கு ஏன் வம்பு' என, சில அதிகாரிகள் ஒதுங்கி கொள்வதும், களத்தில் இருந்து கழன்றுவிடுவதும் தொடர் கதையாகி விட்டது. இது, காவலர்கள் மத்தியில் ஒருவித கலக்கத்தையும், உயரதிகாரிகள் மீது நம்பிக்கையிழப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது
*போராட்ட களங்களில் நின்று பணியாற்றும் போது, தாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை, தங்களது அமைதியான வாழ்க்கைக்கு எதிராக அமைந்து விடுமோ என்ற அச்ச உணர்வு, காவல்துறை அதிகாரிகள் மத்தியில் அதிகரித்து விட்டது. அதனால் தான், சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் காவலர்கள் - அதிகாரிகள் இடையேயான இடைவெளி, அதிகரித்து வருகிறது. இது, ஆரோக்கியமானதல்ல
*கடந்த காலங்களில், சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதில், மாவட்ட வருவாய் துறையும், மாவட்ட காவல்துறையும் இணைக்கமான கருத்துடன் செயல்பட்டன. அந்த இணக்கமான செயல்பாடு, சமீபகாலங்களில் குறைந்து விட்டதும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு முக்கிய காரணம்
*மக்களிடையே நிலவி வரும் பல்வேறு பிரச்னைகள், போராட்டங்களின் போது, மாநில அரசும், தங்களது நிலைபாட்டை, உயர் நிலை அதிகாரிகளுக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். அப்போது தான், அரசின் நோக்கத்தை உணர்ந்து, அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியும். இல்லாவிடில், சூழ்நிலைக்கு பொருத்தமான முடிவுகளை எடுக்க முடியாமல் காலம் தாழ்த்தும் போது, விவகாரம் எல்லை மீறி போய்விடும்
*நாம் இன்னும், 150 ஆண்டுகளுக்கு முந்தைய, ஆங்கிலேயர் கால, 'போலீஸ் சட்டத்தையே' பின்பற்றுகிறோம். அவ்வப்போது, சில திருத்தங்களை மட்டும் செய்துள்ளோம். தற்போது, அந்த சட்டத்தில், அடிப்படையிலேயே சில மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. காரணம், ஆங்கிலேயர் காலத்தில் நடந்த போராட்ட வடிவம், போராட்டக்களங்கள் வேறு. சுதந்திர இந்தியாவில், தற்போதைய சூழ்நிலையோ வேறு
*போராட்ட களங்கள், புதிய உத்திகளுடன் உருவாக்கப்படுகின்றன. நவீன தொலைதொடர்புச் சாதனங்கள், சட்டென ஆயிரக்கணக்கானோரை ஓரிடத்தில் அணிதிரளச் செய்கின்றன. ஆயுதங்களின் தன்மை, கலகக்காரர்களின், தாக்குதல் உத்திகள் மாறியிருக்கின்றனகலவரத்தைத் துாண்ட, பொதுக்கூட்டங்கள் தேவையில்லை; ஒரே ஒரு புரளியை, 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளத்தில் கிளப்பிவிட்டால் போதும் என்ற, நிலை நிலவுகிறது. ஆகவே, ஆங்கிலேயர் கால போலீஸ் சட்டம் மற்றும் கலவரத் தடுப்பு நடவடிக்கை விதிகளை மறு ஆய்வு செய்து திருத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
துாத்துக்குடி கலவர களத்தில் கற்றுணர்ந்த படிப்பினை வாயிலாக, ஆட்சியாளர்களும், காவல்துறை உயரதிகாரிகளும் விழிக்க வேண்டிய நேரமிது!
க.விஜயகுமார்

சமூகநல விரும்பி

இ - மெயில்:vijayakumark@dinamalar.in

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X