சுந்தராபுரம் சந்திப்பில் ரூ.60 கோடி மதிப்பில்... புதிய பாலம்: பொறக்குது நல்ல காலம்! ஒரு கி.மீ., நீளத்தில் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல்!| Dinamalar

தமிழ்நாடு

சுந்தராபுரம் சந்திப்பில் ரூ.60 கோடி மதிப்பில்... புதிய பாலம்: பொறக்குது நல்ல காலம்! ஒரு கி.மீ., நீளத்தில் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல்!

Updated : ஜூன் 13, 2018 | Added : ஜூன் 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 சுந்தராபுரம் சந்திப்பில் ரூ.60 கோடி மதிப்பில்... புதிய பாலம்: பொறக்குது நல்ல காலம்! ஒரு கி.மீ., நீளத்தில் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல்!

கோவை, பொள்ளாச்சி ரோட்டில் சுந்தராபுரம் சந்திப்பு பகுதியில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில்,60 கோடி ரூபாய் மதிப்பில், ஒரு கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் கட்டுவதற்கு,மத்திய அரசு முதற்கட்டமாக ஒப்புதல் அளித்துள்ளது.
திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் (என்.எச்.948) ஒரு பகுதியாகவுள்ள கோவை - பொள்ளாச்சி ரோடு, வாகன போக்கு வரத்து அதிகரிப்பால், கடும் நெரிசலையும், விபத்துக்களையும்சந்தித்து வருகிறது.இதற்கு தீர்வு காணும் பொருட்டு, ஈச்சனாரியிலிருந்து பொள்ளாச்சி வரையிலான ரோடு, 500 கோடி ரூபாய் மதிப்பில், சர்வதேச தரத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதே ரோட்டில், உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே மேம்பாலமும் கட்டப்படவுள்ளது.
குறிச்சி பிரிவிலிருந்து, ஈச்சனாரி வரையிலான ரோடும், சமீபத்தில் அகலப்படுத்தப்பட்டது; ஈச்சனாரி பகுதியில், மேலும் ஒரு மேம்பாலம்கட்டுவதற்கு, நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனால், இன்னும் சில மாதங்களில், கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் பயணம், எளிதாகவும், விரைவாகவும், பாதுகாப்பாகவும் மாறுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த ரோட்டில் அமைந்துள்ள சுந்தராபுரம் சந்திப்பு, இந்த வேகத்தை தடுக்கும் வகையில் அமைந்துள்ளது.போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன், மதுக்கரை ரோடு, பொள்ளாச்சிமற்றும் கோவை ஆகிய நான்கு ரோடுகளையும் இணைக்கும் இந்தசந்திப்பு, அடிக்கடி போக்குவரத்து நெரிசலுக்குஉள்ளாகிறது; விபத்துக்களும் தொடர்ச்சியாக நடக்கின்றன.இதனைத் தவிர்க்கும் வகையில், இந்த சந்திப்பில் மேம்பாலம் கட்ட வேண்டுமென்று, பொள்ளாச்சி எம்.பி., மகேந்திரன்,மத்திய தரைவழிப்போக்குவரத்து அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்து, கடிதம் எழுதியுள்ளார்.அதில், தொழிற்பேட்டையான 'சிட்கோ'வுக்கு அருகில் இந்த சந்திப்பு அமைந்துள்ளதைக் குறிப்பிட்டு, அங்கு ஒரு கி.மீ., துாரத்துக்கு பாலம் கட்ட வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.
நிலம் கையகப்படுத்துவது, மின் கம்பங்கள், குழாய்கள் இடம் மாற்றுவதுஉட்பட பாலம் கட்ட 60 கோடி ரூபாய் செலவாகுமென்ற தோராய மதிப்பீட்டையும், உத்தேச வரைபடத்தையும் இணைத்து, விரைவில் ஒப்புதலும், நிதியும் வழங்க வேண்டுமென்று, மத்தியஅமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொள்ளாச்சி எம்.பி., மகேந்திரன் கூறுகையில், ''சுந்தராபுரம் சந்திப்பில் பாலம் கட்ட வேண்டியதன் அவசியத்தை, அமைச்சரிடம் விளக்கினோம். அதனை ஏற்று, பரிந்துரை செய்தார்; முதற்கட்ட ஒப்புதல் கிடைத்துள்ளது; இன்னும் சில மாதங்களில் நிர்வாக ஒப்புதலுடன் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் துவங்கும் வாய்ப்புள்ளது; இன்னும் ஓராண்டுக்குள், அதாவது எனது பதவிக்காலத்துக்குள் இந்த பணியைத் துவங்கி விட முடியுமென்று நம்புகிறேன்,'' என்றார்.எம்.பி., பரிந்துரைத்துள்ள திட்டத்தின்படி, இந்த பாலம், சுந்தராபுரம் ரேஷ்மிகா மருத்துவமனை அருகில் துவங்கி, காந்தி நகர் அருகில் முடியும் வகையில், ஒரு கி.மீ., துாரத்துக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி, இந்த பாலம் கட்டப்பட்டால், கோவை - பொள்ளாச்சி இடையிலான பயணத்தில், நகருக்குள் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்படும்; ஈச்சனாரி, கிணத்துக்கடவு பாலங்களும் கட்டப்பட்டு விட்டால், புயல் வேகத்தில் பொள்ளாச்சிக்கு வாகனங்கள் பறக்குமென்பது நிச்சயம்
கோவை எம்.பி.,க்கு ஒரு கோரிக்கை!
கோவையைக் கடக்கும் மூன்று தேசிய நெடுஞ்சாலைகளில், என்.எச்.67ல் (புதிய எண்:544), ராமநாதபுரம், சுங்கம், சிங்காநல்லுார் ஆகிய மூன்று சந்திப்புகளில் பாலம் கட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.ஆனால், அதை விட முக்கியமான சிந்தாமணி புதுார் அருகேயுள்ள சுங்கம் சந்திப்பில், பாலம் கட்ட மத்திய அரசோ, மாநில அரசோ நடவடிக்கை எடுக்கவில்லை; அதனால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது; அடிக்கடி விபத்தும் நடக்கிறது.அங்கு பாலம் கட்டுவதற்காவது, கோவை எம்.பி., நாகராஜன் முயற்சி எடுக்க வேண்டுமென்பதே, கோவை மக்களின் கோரிக்கை..- நமது நிருபர் -

Advertisement