திருப்பூர் - பி.என்., ரோட்டில் அமைகிறது...பறக்கும் பாலம்! உத்தேச மதிப்பீடு, ரூ. 700 கோடி| Dinamalar

தமிழ்நாடு

திருப்பூர் - பி.என்., ரோட்டில் அமைகிறது...பறக்கும் பாலம்! உத்தேச மதிப்பீடு, ரூ. 700 கோடி

Updated : ஜூன் 13, 2018 | Added : ஜூன் 13, 2018
Advertisement
 திருப்பூர் - பி.என்., ரோட்டில் அமைகிறது...பறக்கும் பாலம்!  உத்தேச மதிப்பீடு, ரூ. 700 கோடி

திருப்பூர்:திருப்பூர் பி.என்.,ரோட்டில், ஆறு கி.மீ., நீளம் பறக்கும் பாலம்அமைக்க ஆய்வு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கநிதி ஒதுக்கப்பட்டுள்ளது.திருப்பூரிலிருந்து, கோபி, குன்னத்துார் செல்லும் பிரதான ரோடாகவும், கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையிலும், பெருமாநல்லுார் ரோடு உள்ளது. இந்த ரோட்டில், ஆயிரக்கணக்கான பனியன் நிறுவனங்கள், வீடுகள் உள்ளன.
மேலும், 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் முக்கிய ரோடாகவும் உள்ளது. இதனால், இந்த ரோட்டில், எப்போதும், வாகன நெரிசல் இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் நெரிசலால், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், தொழிலாளர் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.அதிலும், சிறுபூலுவப்பட்டி ரிங் ரோடு, புதிய பஸ் ஸ்டாண்ட், போயம்பாளையம், நெசவாளர் காலனி, 60 அடி ரோடு சந்திப்பு, கணக்கம்பாளையம், பாண்டியன் நகர் சந்திப்புகளில், கட்டுக்கடங்காத வாகன நெரிசல் காணப்படும்.
இதன் காரணமாக, பெருமாநல்லுார் ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பறக்கும் பாலம் அமைக்க, விரிவான ஆய்வு மற்றும் திட்ட வடிவமைப்பு, மதிப்பீடு தயாரிக்க, இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:திருப்பூர், பெருமாநல்லுார் ரோட்டில், புஷ்பா சந்திப்பு முதல் பாண்டியன் நகர் வரை, ஆறு கி.மீ., நீளத்துக்கு, இரு வழி ஓடுதளத்துடன் கூடிய, பறக்கும் பாலம் அமைத்தால், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும். இந்த பாலத்தின் இரண்டு புறமும், சர்வீஸ் ரோடு அமையும். ரிங் ரோடு நான்கு ரோடு சந்திப்பு, புஷ்பா சந்திப்பு, பாண்டியன் நகர், சாந்தி தியேட்டர், புதிய பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதியில், பாலத்தின் மேல் வரும் வாகனங்கள் கீழிறங்கும் வகையில், ரவுண்டானா மற்றும் கீழிறங்கும் பாலம் அமைக்கப்படலாம்.
இந்த பாலத்துக்கு, தற்போதுள்ள ரோட்டின் மத்தியில், ஒரேயொரு பில்லர் அமைத்து, பாலம் கட்டப்படும். இதற்கு, நெடுஞ்சாலைத்துறை மற்றும் அரசு நிலமே போதுமானது. இந்த பாலத்துக்கான உத்தேச திட்ட மதிப்பீடு, 700 கோடியாக உள்ளது. இதற்காக விரிவான ஆய்வு மற்றும் திட்ட வடிவமைப்பு மற்றும் மதிப்பீடு தயாரிக்க, இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திட்ட மதிப்பீடு தயாரிக்கும் நிறுவனம், பி.என்.,ரோட்டை பயன்படுத்தும், கனரக வாகனங்கள், கார் உள்ள இலகு ரக வாகனங்கள், டூ வீலர் என அனைத்து போக்குவரத்து வாகனங்களும் சர்வே எடுக்கப்படும். பிரிவு ரோடுகளிலிருந்து வரும் வாகனங்களும் ஆய்வு செய்து, அதற்கு ஏற்ப வடிவமைப்பு தயாரிக்கப்படும்.
பிரதான ரோடுகளை இணைக்க, தேவைப்படும், ரவுண்டானா, கீழிறங்கும் வழி, மண் மாதிரி, கட்டுமானம் என அனைத்து அம்சங்களும் ஆய்வு செய்து, பறக்கும் பாலம் திட்டம் வடிவமைப்பு மற்றும் மதிப்பீடு தயாரிக்கப்படும். அதன் பின், பாலம் கட்டுமான நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement