பட்டுக்கூடு கொள்முதல் மையங்களில் பணம் தருவது...உடனடியாக வழங்க உடுமலை விவசாயிகள் கோரிக்கை| Dinamalar

தமிழ்நாடு

பட்டுக்கூடு கொள்முதல் மையங்களில் பணம் தருவது...உடனடியாக வழங்க உடுமலை விவசாயிகள் கோரிக்கை

Added : ஜூன் 13, 2018
Advertisement

உடுமலை;அரசு வெண்பட்டுக்கூடு கொள்முதல் மையங்களில் பணம் வழங்குவது, ஒருமாதம் வரை தாமதமாவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், மல்பெரி சாகுபடியின் மூலம் வெண்பட்டுக்கூடு உற்பத்தி நடந்து வருகிறது. அதில், பல ஆயிரம் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
சீரான விலை, மாதம் ஒரு அறுவடை, கையை பிடிக்காத பயிர் என்பதால், வெண்பட்டுக்கூடு உற்பத்தியை விவசாயிகள் ஆர்வத்துடன் மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி, உடுமலை சுற்றுவட்டாரத்திலும், நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு, வெண் பட்டுக்கூடு உற்பத்தியாகிறது.
இதனை நம்பி ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் உள்ளனர். உற்பத்தியாகும் வெண்பட்டுக்கூடுகள், அரசு கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.தமிழகத்தில், கோவை, தர்மபுரி உள்ளிட்ட இடங்களிலும், கர்நாடக மாநிலம், ராம்நகரில் மத்திய அரசின் கொள்முதல் மையமும் செயல்பட்டு வருகிறது. உடுமலையில் மொபைல் மார்க்கெட் அமைத்து வெண்பட்டுக்கூடுகள் கொள்முதல் செய்யப்படுகிறது.கொள்முதல் மையங்களில் நடைபெறும் ஏலத்தில், வியாபாரிகள் பங்கேற்று கூடுகளை எடுத்துச்செல்கின்றனர்.கூடுகள் விற்பனை செய்யப்பட்டதற்கான பணபட்டுவாடா, கொள்முதல் மையங்கள் சார்பில், நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆனால், பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்துவதில், 25 நாட்கள் முதல் ஒருமாதம் வரை கால தாமதமாவதாக செய்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.அறுவடையே ஒருமாதத்தில் முடிவடைந்து விடும் நிலையில், பணத்தை பெறவும் மாதக்கணக்கில் காத்திருப்பதால், அடுத்த தொகுப்புகள் வைக்க பணமில்லாமல், திண்டாட வேண்டியுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
தர்மபுரி, கோவை, ராம்நகர் மற்றும் உடுமலை மொபைல் மார்க்கெட் என, அனைத்து கொள்முதல் மையங்களிலும் இதே நிலை தொடர்வதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வியாபாரிகள் பணத்தைக்கட்டியே கூடுகளை எடுத்துச்செல்லும் நிலையில், கொள்முதல் மையங்களின் அலட்சியப்போக்கால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பணப்பட்டுவாடாவை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க பட்டுவளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement