அதிக குப்பை வெளியிடும் நிறுவனங்கள்...உரம் தயாரிக்கணும்!நோட்டீஸ் வினியோகித்து, 'அட்வைஸ்'| Dinamalar

தமிழ்நாடு

அதிக குப்பை வெளியிடும் நிறுவனங்கள்...உரம் தயாரிக்கணும்!நோட்டீஸ் வினியோகித்து, 'அட்வைஸ்'

Added : ஜூன் 13, 2018
Advertisement

பொள்ளாச்சி:'பொள்ளாச்சி நகராட்சி பகுதியில், 100 கிலோவுக்கு மேல் குப்பை கொட்டும் வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள் மக்கும் குப்பையை உரமாக தயாரிக்க வேண்டும்,' என நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.பொள்ளாச்சி நகராட்சி பகுதியில், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் தரும் வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
பூங்காக்களில், 'ஆன்சைட்' திட்டமும்; குடியிருப்பு பகுதிகளில், 'சிறு உரமாக்கல் மையம்' (மைக்ரோ கம்போசிங் சென்டர்) திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.குடியிருப்பு பகுதிகளில், உள் பகுதி, நடுப்பகுதி, வெளிப்பகுதி என பிரிக்கப்பட்டு குப்பை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது. மக்களிடம், மக்கும், மக்காத குப்பை என பிரித்து வழங்கவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், நகரப்பகு தியில் அதிகளவு குப்பை கொட்டும் நிறுவனங்களுக்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் தொடர்ச்சியாக, 100 கிலோவுக்கு அதிகமாக குப்பை வெளிப்படுத்தும் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.பொள்ளாச்சி பகுதியில் உள்ள, ஐந்து ஓட்டல்கள், எட்டு திருமண மண்டபங்கள், மூன்று டிபார்ட்மெண்டல் ஸ்டோர் என மொத்தம், 16 நிறுவனங்கள் இந்த பட்டியலில் உள்ளன.அங்கிருந்து தினமும், 6.5 டன் குப்பை உற்பத்தியாகிறது. எனவே, அதிகளவு குப்பை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மக்கும் குப்பையை கொண்டு உரம் தயாரிக்க வேண்டும்.தனித்தனியாக அல்லது கூட்டாக சேர்ந்து உரம் தயாரிக்கலாம். மக்காத குப்பையை தனியாக பிரித்து வழங்க வேண்டும். ஐந்தாயிரம் சதுர மீட்டருக்கு மேல் கட்டுமான பரப்புள்ள நிறுவனங்களும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும்.அரசு மருத்துவமனை உட்பட, 24 மருத்துவமனைகளுக்கும் இத்திட்டத்தில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குப்பை எடுத்துச் செல்ல நகராட்சி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடுகளிலிருந்து குப்பை எடுத்துச் செல்ல ஒரு மாதத்துக்கு, 10 ரூபாய் முதல், 60 ரூபாய் வரையும்; வணிக நிறுவனங்களுக்கு, 50 ரூபாய் முதல் குப்பையின் அளவுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது.திருமண மண்டபங்களுக்கு, ஒரு நிகழ்ச்சிக்கு, 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்கு, மாதத்துக்கு, 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நகராட்சியை துாய்மையாக மாற்ற இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

இதையும் கவனியுங்க!
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'தோட்டம் மற்றும் மரக்கழிவுகள் குப்பையோடு, குப்பையாக கொட்டப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளின் படி, இக்கழிவுகளை அகற்ற, நகராட்சிக்கு கட்டணமாக, 500 ரூபாய் செலுத்த வேண்டும்.மரக்கிளைகளை வெட்டி அப்படியே திறந்தவெளியில் குப்பையோடு போடக்கூடாது. சிறு துண்டுகளாக வெட்டி வைத்து, அதனை அப்புறப்படுத்த நகராட்சிக்கு தகவல் கொடுக்க வேண்டும். நகராட்சிக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே துாய்மையான நகரமாக்க முடியும், என்றனர்.

Advertisement