குருதிக்கொடை... கொட்டி கொடுக்கும் இளைஞர் படை! 14 ஆண்டுகளில் ஒரு லட்சம் யூனிட் ரத்ததானம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குருதிக்கொடை... கொட்டி கொடுக்கும் இளைஞர் படை! 14 ஆண்டுகளில் ஒரு லட்சம் யூனிட் ரத்ததானம்

Updated : ஜூன் 14, 2018 | Added : ஜூன் 14, 2018
Advertisement
குருதிக்கொடை... கொட்டி கொடுக்கும் இளைஞர் படை! 14 ஆண்டுகளில் ஒரு லட்சம் யூனிட் ரத்ததானம்

சண்டை என்று வந்து விட்டால், 'ஆயிரம் இருந்தாலும் அவன் எங்க ரத்தம்டா' என்று மார்தட்டிக் கொள்வோர் கூட, 'ஒரு யூனிட் ரத்தம் கொடுங்க' என்றால் சத்தமின்றி நகர்ந்து விடுவர். இன்றைய நிலையில், ரத்தம் தேவைப்படுவோர்க்கும், ரத்ததானம் செய்வோர்க்குமான இடைவெளி அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே, இன்று (ஜூன் 14) சர்வதேச ரத்த கொடையாளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தலைவர்களின் பிறந்த நாட்களில் மட்டுமே, ரத்தம் கொடுத்து போட்டோவுக்கு 'போஸ்' கொடுக்கும் அரசியல்வாதிகள், 'பப்ளிசிட்டி பார்ட்டி'கள் மத்தியில், 14 ஆண்டுகளாக ஒரு லட்சம் யூனிட் ரத்ததானம் செய்து விட்டு, அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கிறது ஓர் அமைப்பு...அது தான் 'ஏடிபி' எனப்படும் 'எனிடைம் பிளட்'. தனது 18 வயதில், இந்த சேவை அமைப்பைத் துவக்கிய கவுசிக், 32, இன்றைக்கும் அதே உற்சாகத்தோடு பணியாற்றுவது, ஆனந்த ஆச்சரியம்.

இடைவிடாத இந்த சேவைக்கான காரணத்தை, நம்மிடம் பகிர்ந்தார் கவுசிக்...சொந்த ஊர் நாகர்கோவில்; கடந்த 2004ல் கோவை ராமகிருஷ்ணா கல்லுாரில் நர்சிங் படித்துக்கொண்டிருந்த போது முதல் முறையாக ரத்ததானம் கொடுத்தேன். தொடர்ந்து ரத்தம் தேவைப்படும்போது, எனக்கு மொபைல் அழைப்பு வரும். அப்போது தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என, தொடர்பு கொண்டு தேவைப்படுவோருக்கும் ஏற்பாடு செய்வேன். அந்த நேரத்தில், எனக்கு ஸ்ரீராம் அறிமுகமானார். இருவருக்கும் ஒரே விதமான சேவை மனப்பான்மை இருந்தது.
இருவரும் இணைந்து, 'எனிடைம் பிளட்' (ஏ.டி.பி.,) தன்னார்வ அமைப்பை உருவாக்கினோம். கொஞ்சம் கொஞ்சமாக தமிழகம் முழுவதும் பரவிய இந்த அமைப்பில், கொடையாளர்களின் எண்ணிக்கை, கடந்த, 2008ல் ஒரு லட்சத்தை எட்டியது. எங்கு, எப்போது, யாருக்கு ரத்தம் தேவைப்படுகிறது என்ற தகவலை அளித்து விட்டால் போதும். உடனே உறுப்பினர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு ஆஜராகிவிடுவர். இதுவரை, ஒரு லட்சத்துக்கும் அதிகமான யூனிட் ரத்தத்தை 'ஏடிபி' தானமாக வழங்கியுள்ளது.
எங்கள் அமைப்பில், 20 முதல் 45 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே அதிகம். ஆரம்ப காலத்தில், மொபைல் போன் மட்டும்தான். ஆயிரக்கணக்கில் தொடர்பு எண் சேகரித்து வைத்திருப்போம். இப்போது, பேஸ்புக், வாட்ஸ்ஆப் என சமூக வலைதளங்கள் வந்து விட்டதால், தொடர்பு கொள்வது சுலபமாகியுள்ளது.ஆனால், பத்தாண்டுகளுக்கு முன்பு வைத்திருந்த மொபைல் எண்ணை பலரும் மாற்றிவிட்டதால், பல ஆயிரம் பேர், தொடர்பில் இல்லை.
அதனால், முன்பு இருந்த அளவுக்கு தற்போது ரத்ததானம் செய்யமுடிவதில்லை. ஆனால், ரத்தத்துக்கான தேவை, அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. பல உயிர்களைக் காப்பதற்கு, ரத்தம் தர இளைஞர்கள் முன் வர வேண்டும். ரத்ததானம் செய்யச் செய்ய, நம் ஆரோக்கியம் அதிகரிக்கும்; ஓர் உயிரைக் காக்கும் உன்னத திருப்தி, நமக்குக் கிடைக்கும். அமைப்பில் சேர விரும்புவோர், 98943 95495 எண்ணில் தொடர்பு கொண்டு எங்களுடன் இணையலாம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை