அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் சப்பாத்தி, தயிர் சாதம், இனிப்பு முதல்வர் நாராயணசாமி தகவல்| Dinamalar

அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் சப்பாத்தி, தயிர் சாதம், இனிப்பு முதல்வர் நாராயணசாமி தகவல்

Added : ஜூன் 14, 2018
Advertisement

புதுச்சேரி: ''அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதியம் உணவில், வழக்கமான சாதத்திற்கு பதிலாக, சப்பாத்தி மற்றும் தயிர் சாதம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்'' என, முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி, திருபுவனை அடுத்த சன்னியாசிக்குப்பத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு, வேர்ல்புல் நிறுவனம் சார்பில், ரூ. 32 லட்சம் செலவில் வகுப்பறைகள் புதுப்பித்தல், விளையாட்டு மைதானம், கழிப்பறை, பாதுகாப்பு வேலி உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட பள்ளி கட்டட திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் குமார் வரவேற்றார். முதல்வர் நாராயணசாமி, புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தை திறந்து வைத்து பேசியதாவது:
புதுச்சேரி அரசு கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, அதிக நிதி ஒதுக்கி, செயல்பட்டு வருகிறது. புதுச்சேரியை கல்விக்கேந்திரமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒரே விண்ணப்பத்தில் அனைத்து கல்லூரி பாடப் பிரிவிற்கும் விண்ணப்பிக்கும் முறையை இந்த ஆண்டு கொண்டு வந்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப்பள்ளியில் தரமான மாணவர்களை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம்.
இதற்காக, மாணவர்கள் மீது ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். படிப்பில் கவனம் குறைந்த மாணவர்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு கூட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சுவையான உணவு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக, பெங்களூருவில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில், வழக்கமான சாதத்திற்கு மாறாக, சப்பாத்தி, தயிர் சாதம் மற்றும் சுவையான உணவு, இனிப்பு வழங்கப்படும். விரைவில் இந்த திட்டம் தொடங்கப்படும்.
அரசுப் பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குளோபல் என்ற தனியார் நிறுவனம், பள்ளிக்கு ரூ. 1.25 லட்சம் செலவில் இவ்வசதியை செய்து கொடுக்க முன்வந்துள்ளது. முதற்கட்டமாக, 60 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு தொடங்கப்பட உள்ளது. இதில் 20 காரைக்காலிலும், 40 புதுச்சேரியிலும் தொடங்கப்பட உள்ளது. இதற்கான முதற் கட்ட வேலை நடந்து கொண்டுள்ளது.
அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை பயன்படுத்தி, மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

கோபிகா எம்.எல்.ஏ., கோபம்
விழாவில் பங்கேற்க தொகுதி எம்.எல்.ஏ.,வான கோபிகா கால தாமதமாக அழைக்கப்பட்டதால், விழாவை புறக்கணித்தார். இதையறிந்த அவரது ஆதரவாளர்கள், விழா நடந்த பள்ளிக்கு வந்து, கல்வித்துறை இயக்குனர் குமாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுட்டனர்.
விழாவை புறக்கணித்தது குறித்து கோபிகா எம்.எல்.ஏ., கூறுகையில், இந்த பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நான் தான் கவர்னர் கிரண்பேடியை அழைத்து வந்து காட்டினேன். வேர்ல்புல் நிறுவனத்தை கவர்னர் தொடர்பு கொண்டு, பள்ளியை மேம்படுத்த உதவுமாறு கோரினார். எனது முயற்சியால் இப்பள்ளியை மேம்படுத்தும் பணி நடந்தது. ஆனால், என்னை முறைப்படி அழைக்காமல், விழா துவங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அழைத்தனர் என, கோபத்துடன் தெரிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை