கொடி வகை காய்கறி விவசாயம் அபாரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொடி வகை காய்கறி விவசாயம் அபாரம்

Added : ஜூன் 14, 2018
Advertisement

பொள்ளாச்சி: கொடி வகை காய்கறி பயிர்களை பருவமழை காலத்தில் தாக்கும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாத்து பராமரிக்கும் முறைகள் குறித்து தோட்டக்கலைத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.பொள்ளாச்சி தாலுகாவில் தென்னை விவசாயத்துக்கு அடுத்தப்படியாக காய்கறி சாகுபடி அதிகளவில் உள்ளது. பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் ஆனைமலை வட்டாரங்களில், 500 ஏக்கருக்கும் மேல் காய்கறி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.அவற்றில் பெரும்பாலானவை பந்தல் மற்றும் பாரம்பரிய முறை கொடி வகை காய்கறிகள் தான். புடலை, பாகற்காய், பீர்க்கன், சுரைக்காய், வெள்ளரி, பூசணி, அரசாணி ஆகியவை அடக்கம்.கடந்த சில ஆண்டுகளாக மழையின்மை மற்றும் வறட்சியால் காய்கறி சாகுபடி பரப்பு கணிசமாக குறைந்தது. இந்தாண்டு கோடை மழையும், தென்மேற்கு பருவமழையும் கைகொடுத்திருப்பதால், விவசாயிகள் உற்சாகத்துடன் திரும்பவும் காய்கறி சாகுபடியில் இறங்கியுள்ளனர். பருவ மழைக் காலத்தில் கொடி வகை காய்கறி பயிர்களை சற்று கூடுதல் கவனத்துடன் பராமரிக்க வேண்டும். இது குறித்து தோட்டக்கலைத் துறை அறிவுரை வருமாறு:கொடி வகை காய்கறி பயிர்களுக்கு பயிரிட்ட, 30வது நாளில் செடிக்கு, 20 கிராம் உரம் கொடுக்க வேண்டும். இவ்வகை பயிர்களை மழைக்காலங்களில் பழ ஈ அதிகமாக தாக்கும். பழ ஈ தாக்கினால் காய்கள் அறுவடைக்கும் முன்பே வீணாவதுடன், செடிகளையும் பாதித்து, அடுத்து வரும் பூக்கள், பிஞ்சுகள் உதிர்ந்து விடும். இதனால் பெரியளவில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும்.இதை தவிர்க்க, பழ ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்ட காய்களை கண்டறிந்து, உடனடியாக செடியில் இருந்து பறித்து, விளைநிலத்துக்கு வெளியில் கொண்டு சென்று அழிக்க வேண்டும்.தண்ணீரில் மூன்று சதவீதம் வேப்ப எண்ணெய் கலந்து செடிகள் மீது தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு ஒன்று வீதம் விளக்கு பொறிகள் வைத்து, ஈக்களை கவர்ந்து அழிக்க வேண்டும்.ஐந்து கிராம் கருவாடு, ஒரு மில்லி டைகுளோர்வாஸ் மருந்து ஆகியவற்றை பஞ்சில் நனைத்து பாலித்தீன் கவரில் வைத்து விளைநிலத்தில் வைத்தால் பழ ஈக்கள் கவரப்பட்டு, விழுந்து இறக்கும். இந்த பொறி ஏக்கருக்கு, 20 இடங்களில் அமைக்கலாம்.ஏழு நாட்களுக்கு ஒரு முறை மருந்து நனைத்த பஞ்சையும், 20 நாட்களுக்கு ஒரு முறை கருவாட்டையும் மாற்ற வேண்டும். இந்த கொடி வகை பயிர்களில் எக்காரணம் கொண்டும் சல்பர் மற்றும் காப்பர் கலந்த மருந்துகளை பயன்படுத்தக் கூடாது. அவ்வகை மருந்துகள் பயிரை பாதித்து விடும்.பயிரில் சாம்பல் நோய் காணப்பட்டால், ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 0.5 கிராம் கார்பன்டைசிம் கலந்து தெளிக்க வேண்டும். அடிச்சாம்பல் நோய் காணப்பட்டால், ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு கிராம் மாஸ்கேசெப் கலந்து தெளிக்க வேண்டும்.இந்த பராமரிப்பு முறைகளை விவசாயிகள் கையாண்டால், கொடி வகை காய்கறி பயிர்களில் நல்ல விளைச்சல் பெற முடியும் என, தோட்டக்கலைத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை