மதுரை காமராஜர் பல்கலை துணை வேந்தர் நியமனம் ரத்து| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மதுரை காமராஜர் பல்கலை துணை வேந்தர் நியமனம் ரத்து

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

சென்னை:மதுரை, காமராஜர் பல்கலை துணை வேந்தராக, செல்லதுரை நியமிக்கப்பட்ட உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மதுரை, காமராஜர் பல்கலை துணை வேந்தராக, செல்லதுரை நியமிக்கப்பட்டதை எதிர்த்து, லயோனல் ஆண்டனிராஜ், 'டிராபிக்' ராமசாமி ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில், தனித்தனியே பொது நல வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, சுந்தர் அடங்கிய, முதல் பெஞ்ச், நேற்று பிறப்பித்த தீர்ப்பு:லயோனல் ஆண்டனிராஜ் தாக்கல் செய்த மனுவில், துணை வேந்தர் தகுதி குறித்து கேள்வி எழுப்பி, நியமனத்தை ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளார். டிராபிக் ராமசாமி மனுவில், விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அதில், சென்னை பல்கலை துணை வேந்தராக துரைசாமியும், மதுரை பல்கலை துணை வேந்தராக செல்லதுரையும் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.செல்லத்துரையின் நியமனம் குறித்து மட்டும், வழக்கில் வாதாடப்பட்டுள்ளது. அதில், 'தேடல் குழுவின் நடவடிக்கைகளில் விதிகள் பின்பற்றப்படவில்லை' என கூறியுள்ளார்.
தேடல் குழுவில், முருக தாஸ், ராமகிருஷ்ணன் மற்றும் ஹரிஷ் மேத்தா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். அவர்களில், முருகதாஸ், குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டுள்ளார். இந்த நியமனத்தில், அவரது கை ஓங்கியிருந்ததாக கூறப்பட்டுள்ளது.கவர்னரின் செயலர், தலைமை செயலர் மற்றும் தேடல் குழு ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தரப்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'துணை வேந்தர் ஆவதற்கான கல்வி தகுதி மற்றும் அனுபவம், செல்லதுரைக்கு உள்ளது.
'அவர் மீதான கிரிமினல் வழக்கு, போலீஸ் விசாரணைக்கு பின், முடிக்கப்பட்டு விட்டது' என கூறப்பட்டுள்ளது. பல்கலை பதிவாளரும், துணை வேந்தர் நியமனத்தை ஆதரித்து, பதில் மனு அளித்துள்ளார்.தேடல் குழுவின் இரண்டு உறுப்பினர்கள் அளித்த பதில் மனுவில், 'கவர்னரை சந்திக்கும் நாளான, 2017 மே, 19ல், தேடல் குழு ஒருங்கிணைப்பாளர், முருகதாஸ், குழு கூட்டத்தை, கவர்னர் மாளிகை அருகில் உள்ள, 'லெமன் ட்ரீ' ஓட்டலில் ஏற்பாடு செய்துள்ளார்.
'இரண்டு உறுப்பினர்களையும், 4:30 மணிக்கு வர சொல்லி விட்டு, இவர் தாமதமாக வந்துள்ளார். பின், உறுப்பினர்களின் கருத்துகளை கேட்காமல், அவசர அவசரமாக, கவர்னரை பார்க்க அழைத்து சென்றார்' என, தெரிவித்து உள்ளனர்.தேடல் குழு சார்பில், மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு, அந்த பெயர்கள் அடங்கிய உறையை, கவர்னரிடம் அளித்துள்ளார். அப்போது, மற்றொரு மூடிய உறையையும், அவர் அளித்துள்ளார்.
தேடல் குழுவின் கை ஓங்கியுள்ளதாக, ஏற்கனவே அதில் உறுப்பினராக இருந்த, பேராசிரியர் ராமசாமி குற்றம் சாட்டி, குழுவில் இருந்து விலகிஇருக்கிறார். ஆனாலும், அடுத்த தேடல் குழுவிலும், ஒருங்கிணைப்பாளராக இருந்த, முருகதாசின் கை ஓங்கியிருந்தது. அவர், அரசு தரப்பு பிரதிநிதியாக செல்லத்துரை இருப்பதாக கூறி, அவரை முன்னிறுத்தியுள்ளார்.
தேடல் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அளித்த பட்டியலுக்கு, மற்ற இரண்டு உறுப்பினர்களும், எந்த பதிலும் இல்லாமல், வெறுமனே கையெழுத்து போட்டுள்ளனர். 'இந்த பிரச்னை, பின்னாளில் நீதிமன்றத்துக்கு வரும்; நீதிமன்றத்தில் ஆதாரம் கேட்பர்' என, அவர்கள் நினைக்கவில்லை போலும்.
துணை வேந்தர் என்பவர், பல்கலையின் வெறும் தலைமை அதிகாரி மட்டும் அல்ல. ஒட்டுமொத்த பல்கலையின், தலைமை செயல் அதிகாரியும் ஆவார். எனவே, கண்டிப்பாக, புதிய தேடல் குழு அமைத்து, புதிதாக துணை வேந்தரை நியமிக்கலாம் என, இந்த நீதிமன்றம் கருதுகிறது.கற்பித்தலுக்கான இடமாக பல்கலை திகழ்வதால், அதன் தலைமை இடம் என்பது, புனிதமானதாக இருக்க வேண்டும். இதற்கான தேர்வு என்பது, மிக சாதாரணமாக இருக்கக் கூடாது. மிகவும் கண்டிப்பான தேர்வு நடவடிக்கையாக இருக்க வேண்டும்.
பல்கலை என்பது, வெறும் அறிவை கற்று கொடுக்கும் இடம் மட்டும் அல்ல; கல்வியின் வழியாக, நாட்டை நல்ல முறையில் கட்டமைக்கும் இடமாக இருக்கிறது. எனவே, பல்கலையின் தலைமை பதவிக்கான, தேர்வு நடவடிக்கையில் விதிமீறல் என்பதை, ஏற்க முடியாது.எனவே, தேடல் குழுவின் தேர்வு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள, குளறுபடிகளின் அடிப்படையில், மதுரை காமராஜர் பல்கலை துணை வேந்தராக, செல்லத்துரையை நியமித்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. அதேநேரம், அவரது தகுதி குறித்து எதுவும் சொல்லவில்லை.
புதிய துணை வேந்தரை நியமிப்பது குறித்து, புதிய தேடல் குழு ஏற்படுத்த வேண்டும். அதில், பழைய தேடல் குழுவில் இடம்பெற்ற, முருகதாஸ், ராமகிருஷ்ணன் மற்றும் ஹரிஷ் மேத்தா ஆகியோர் இடம் பெறக் கூடாது. இந்த புதிய குழு, உரிய விதிகளின் படி, மூன்று மாதங்களுக்குள், புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய வேண்டும். இந்த தேர்வு நடவடிக்கையின்போது, செல்லத்துரை விண்ணப்பிப்பதை தடுக்கக் கூடாது.
அவரது விண்ணப்பத்தையும், எந்த சிபாரிசும், அதிகார துஷ்பிரயோகமும் இன்றி, உரிய விதிகளின்படி பரிசீலிக்கலாம்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை