வளர்ச்சியின் வாசல் திறக்கும் போது...| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

வளர்ச்சியின் வாசல் திறக்கும் போது...

Added : ஜூன் 20, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
வளர்ச்சியின் வாசல் திறக்கும் போது...

மஹாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ஹரியானா, டில்லி, உத்தரபிரதேசத்தில் சாலை வசதி மேம்பாடு அடைந்த அளவில் தமிழகம், கேரளாவில் வளர்ச்சி இல்லை. தமிழகத்திற்கு கிடைத்த ஒரே ஆறுதல், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், அமைக்கப்பட்ட தங்கநாற்கர சாலை. இந்த சாலை அமைக்கப்பட்ட போது, 'தம்பிதுரை தான் மத்திய அமைச்சர்-; டி.ஆர்.பாலு தான் மத்திய அமைச்சர்' என, சட்டசபையில், கட்சிகள் சொந்தம் கொண்டாடியதை பார்த்தோம். நரசிம்ம ராவ் பிரதமரான போது கொண்டு வந்த, பொருளாதார சீர்த்திருத்தங்களால், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கார்கள் தயாரிக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், அந்த கார்கள் செல்ல வேண்டிய சாலைகளை பற்றி, அவர் சிந்திக்கவில்லை. வாஜ்பாய், சாலைகளின் அவசியத்தை உணர்ந்தார். தொழில் வளம் பெருக, சாலை மேம்பாடு அவசியம் என்று தங்க நாற்கரம் என்ற நான்குவழிச் சாலை திட்டத்தை கொண்டு வந்தார். இந்த இடத்தில், ஜெர்மனியின் சர்வாதிகாரி என அறியப்பட்ட ஹிட்லரை நினைவு கொள்ள வேண்டி உள்ளது. அவர் தான் ஒரு நாடு முன்னேற, முதலில் சாலைகள் அமைக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தை சொன்னவர். தொலைநோக்கு பார்வையில் ஜெர்மனியில் அகல சாலைகள் அமைத்து, அந்நாடு வளர காரணமானார்.நம் நாடு சுதந்திரம் பெற்று, 50 ஆண்டுகளுக்கு பிறகு, முதன்முதலாக வாஜ்பாய் இதற்கு அடித்தளமிட்டார். 'மளமள'வென நான்குவழிச் சாலைகள் உருவாகின. இந்த சாலைகள் அமைந்த போது, நம் கண் முன்னே, -சென்னையை சுற்றிலும் ஏராளமான தொழிற்சாலைகள் உருவாகின. கார்கள் உற்பத்தி அதிகரித்தது. நடுத்தர குடும்பத்தினர் கூட, கார் வாங்கும் நிலையும் ஏற்பட்டது.இப்போது கன்னியாகுமரி -- சென்னை, கன்னி யாகுமரி- - பெங்களூரு நான்குவழிச் சாலையால், போக்குவரத்து எளிதாகி விட்டது. கிருஷ்ணகிரி- - பெங்களூரு ஆறுவழிச் சாலையால், தொழில்வளர்ச்சியில் ஓசூர் நகரம் மேம்பாடு அடைந்து வருவதை, நாம் அறிவோம். இந்த சாலைகளால் பொதுமக்களின் வாகன எரிபொருள் செலவு குறைந்து விட்டது. சாலை வழி சரக்கு போக்குவரத்தும் அதிகரித்து விட்டது.
மோடி அரசின் திட்டம் : மோடி அரசு சாலை மேம்பாட்டிற்காக, 'பாரத்மாலா பரியோஜனா' என்ற திட்டத்தை அறிவித்து, 2022ம் ஆண்டுக்குள் முதல் கட்டமாக, இந்தியா முழுவதும் நான்குவழிச்சாலைகள், ஆறு வழிச்சாலைகள் அமைக்க முடிவு செய்துள்ளது. மஹாராஷ்டிராவில் அமைச்சராக இருந்த போது, அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி சாதித்த, நிதின் கட்கரியிடம் அந்த பொறுப்புகளை மோடி ஒப்படைத்துள்ளார். அவர் தான் இப்போது, மத்திய சாலை மேம்பாட்டு அமைச்சர். பாரத்மாலா திட்டத்தின் கீழ், 24 ஆயிரத்து, 800 கி.மீ., மற்றும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டம் மூலம், 10 ஆயிரம் கி.மீ., என, 34 ஆயிரத்து, 800 கி.மீ.,யில், 5 லட்சத்து, 35 ஆயிரம் கோடியில் பணிகள் நடக்க உள்ளன. இந்த திட்டத்தில், தமிழகத்திற்கும் புதிய சாலைகள் கிடைக்க போகிறது என்பது மகிழ்ச்சியான செய்தி. குறிப்பாக, மதுரை - மேலுார் - -பிள்ளையார்பட்டி - -காரைக்குடி நான்கு வழிச்சாலை, மதுரை - திருமங்கலம் - -செங்கோட்டை நெடுஞ்சாலை விரிவாக்கம், மதுரை- - போடி, திருப்பத்துார் - -தஞ்சாவூர் நான்குவழிச்சாலைகள் அமைய உள்ளன. ஏற்கனவே, சேலம் - -சென்னை எட்டு வழி பசுமை விரைவுச் சாலை திட்டத்திற்கு, மத்திய- - மாநில அரசுகள் ஒப்புதல் வழங்கி விட்டன. சென்னை- - பெங்களூரு விரைவுச் சாலை திட்டம், 10 ஆயிரம் கோடியில் அமைகிறது. இதற்கு, கர்நாடக பகுதியில் நில ஆர்ஜிதம் முடிந்து விட்டது. தமிழக தரப்பில் தான் தாமதம்.என்ன நடக்கிறது . தமிழகத்தில் நில ஆர்ஜிதம் செய்வது சவாலான பணி. விளைநிலங்கள், வீடுகளை கையகப்படுத்த வேண்டி உள்ளது. அதிலும் விவசாய நிலங்கள் சாலை ஆகும் போது, விவசாயியின் வாழ்வாதாரம் பாழாகிறது. அதற்கு எவ்வளவு ஈடு தந்தாலும் இணை ஆகாது.காடுகள், மரங்களை அழிக்க வேண்டி உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு வேறு.என்றாலும் நாட்டின் வளர்ச்சி, தொழில் மேம்பாடு, வேலைவாய்ப்பு என்று கணக்கில் கொள்ளும் போது இந்த சவால்களை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் தயாராக வேண்டும். திட்டப் பணிகளுக்கு, மத்திய அரசு நிதியை தந்தாலும், அதை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு, மாநில அரசிடம் உள்ளது. தமிழகத்தில், 2011 - -16 ஜெயலலிதா ஆட்சியின் போது, நில ஆர்ஜித பணிகளில் அரசு அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. இதனால் சாலை மேம்பாட்டு பணிகள் தொய்வடைந்தன. ஆனால் தற்போது, பழனிசாமி அரசு, இதில் ஆர்வம் காட்டுவது வரவேற்கத்தக்கது.சேலம்- - சென்னை பசுமை வழிச்சாலை விரைவுத் திட்டத்திற்காக நிலம், வீடு இழப்பவர்களுக்காக, அவர் அளித்துள்ள இழப்பீடு தொகை, நம்பிக்கை தருவதாக உள்ளது. சட்டசபையில் முதல்வர் பழனிசாமி பேசுகையில், ''நில உரிமையாளர்களுக்கு நகர்ப்புறத்தில், சந்தை மதிப்பில் இரண்டு மடங்கு, கிராமப்புறங்களில் நான்கு மடங்கு வரை இழப்பீடு வழங்கப்படும்,'' என்று கூறியுள்ளார். ''பத்தாண்டுகளுக்கு முன்பு நான்குவழிச் சாலைக்கு, இதே பகுதியில் நிலம் எடுத்த போது, 2.47 ஏக்கருக்கு, எட்டு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது; தற்போது 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும்,'' என்றும் கூறியுள்ளார். தென்னை மரத்திற்கு, 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது, தற்போது, 40 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. விரைவுச் சாலையின் இருபுறமும், 10 மீ., அகலத்திற்கு, மூன்று லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என, முதல்வர் தெரிவித்து உள்ளார். இது வரவேற்கத்தக்கது என்றாலும், ஏற்கனவே நான்குவழிச் சாலைக்காக மரங்கள் வெட்டப்பட்ட போது, புதியதாக மரங்கள் நடவேண்டும் என்று, உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட்ட பின்பும், எந்த அரசும் கண்டு கொள்ளவில்லை என்பது, இங்கே கவனிக்கத்தக்கது. அதே நிலை தொடராமல், 'பசுமைவழிச்சாலை' என்று பெயரில் மட்டும் பசுமை காட்டாமல், எட்டு வழிச்சாலையில் புதிதாக மரங்கள் நட்டு வளர்ப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.எப்படி எதிர்கொள்வதுதென் மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சாலை திட்ட நில ஆர்ஜிதத்திற்கும், எதிர்ப்புகள் கிளம்பி விட்டன. கலெக்டர் அலுவலகங்களுக்கு மனுக்களுடன் விவசாயிகள் வரத்துவங்கி விட்டனர். இவர்களை புறக்கணிக்காமல், அரசு பேச்சு நடத்த வேண்டும். மொத்தமாக கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்துவது வீண்; இதனால் சட்டம்- - ஒழுங்கு பிரச்னை ஏற்படும். மாறாக, ஒவ்வொரு நில இழப்பீடுதாரர்களின் கோரிக்கைகளையும் அதிகாரிகள் தனித்தனியாக கேட்க வேண்டும். இழப்பீடு தொகையை கிராமம், நகரம் என்று வேறுபடுத்தாமல், 5 மடங்கு வரை உயர்த்தி தரலாம். நாட்டிற்காக நிலத்தை தியாகம் செய்பவர்கள் குடும்பத்தினருக்கு, அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரலாம். விவசாயிகளுக்கு, மாற்று நிலம் தரலாம். அரசின் வீட்டு வசதி திட்டங்களில், இவர்களுக்கு வீடுகள் தரலாம். இலவசத்திற்காக, பலகோடி ரூபாய் செலவு செய்யும் அரசு, நாட்டின் வளர்ச்சிக்காக வீடு, நிலம் இழப்பவர்களுக்கு சில கோடிகள் செலவு செய்வதில் தவறு இல்லை. இப்படி அரசு ஆர்வம் காட்டினால் பொதுமக்களும் ஒத்துழைப்பர்.
அந்த நிலை வேண்டாம் : தொழிற்சாலை, வளர்ச்சி திட்டம் என்று எது வந்தாலும், முன்பு ஆட்சியில் இருந்த கேரள, மேற்கு வங்க மாநில கம்யூனிஸ்ட் அரசுகள் எதிர்ப்பது வழக்கம். விளைவு, இன்று நம்மூருக்கு கூலித்தொழிலாளிகளாக, வேலை தேடி வங்காளிகள் வந்து விட்டனர். கேரள இளைஞர்கள் அரபு நாட்டிற்கு சென்றுவிட்டனர். தங்கநாற்கர சாலை அமைக்கும் போது, நில ஆர்ஜித பிரச்னைகளால், கேரளாவில் கம்யூனிஸ்ட்கள் தொடர்ந்து எதிர்த்ததால், இன்று வரை அந்த மாநிலத்தில் நான்கு வழிச்சாலை முழுமை பெறவில்லை. இதனால் பெரிய அளவில் தொழிற்சாலைகள் அங்கு இல்லை; சுற்றுலாவும் பெரிய வளர்ச்சி அடையவில்லை. கேரளாவில் அதே மார்க்சிஸ்ட் ஆட்சி தான் இப்போதும் நடக்கிறது. முதல்வர் பினராயி விஜயனின் கோஷமே, 'வளர்ச்சியை நோக்கி' என்பது தான்! 'கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமாய்' தற்போது நான்கு வழிச்சாலை பணிகளுக்கு இவர் முக்கியத்துவம் தருகிறார். தயவு தாட்சண்யமில்லாமல் நில ஆர்ஜிதம் செய்ய உத்தரவிடுகிறார்.அந்த நிலை தமிழகத்திற்கு ஏற்பட்டு விடக்கூடாது. இன்றைய சூழலில், தமிழகத்தில் எந்த வளர்ச்சி திட்டம் என்றாலும் எதிர்கொள்ளும் எதிர்ப்புகள் அந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. வளர்ச்சிக்கான வாசல் திறக்கும் போது, காலத்திற்கேற்ப அதனை வரவேற்க, நாம் தயாராக வேண்டும். 'விவசாயம் அழியும்' என்று, உணர்வுகள் துாண்டப்படக்கூடாது. 'சுற்றுச்சூழல் அழியும்' என்ற கோட்பாட்டிற்கு தீர்வு என்ன என்று ஆராய வேண்டும். இவற்றை எல்லாம் காரணம் காட்டி பொதுமக்களை துாண்டும் போராட்டங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.இந்த வகை போராட்டங்கள் எல்லாம் மத்திய, மாநில அரசிற்கு எதிரான போராட்டங்கள் என ஊடகங்கள் சித்தரிக்கின்றன. இதனை நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான போராட்டமாகவே பார்க்க வேண்டும்.
-ஜி.வி.ரமேஷ் குமார்பத்திரிகையாளர்rameshgv1265@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ
14-ஜூலை-201812:32:29 IST Report Abuse
Dr Kannan The 8 lane road project makes no economic sense and must be rejected as explained below. Without the full cost-benefit analysis report , its deliberate lie or attempt to confuse citizens with ive information. It's nothing more than a lie if the information is incomplete. Rs800 crore saving in fuel is one benefit.. being an infrastructure public investment the full costs and benefits must be told to the public. Telling one benefits is like hiding the full truth a. Is the Rs 10000 crores cost is technically correct engineering estimate? b. Is this a cost effective option than expanding the exiting nate roads? Certainly this option will not be cost effective and that means the lavish spending is a loss to the taxpayers and public funding. C. What is the estimated value of agricultural production lost due to land acquisition? May be agricultural production loss on 5000ha must be more than Rs.200cr per year. D. what is the loss in terms of value of wells, buildings that will be demolished? E. What is the traffic density in the nate three roads and the proposed 8 lane rd? Fuel saving must be for the incremental traffic density under with and without scenario. The saving of Rs750 Crs looks dubious F. What are the imputed value of environmental damages? Must be more than Rs750cres. G. There are several other economic losses that must be accounted. H. Assuming Rs750cr future income per year is correct the return on investment must be around 5% under discounted cashflow analysis.. had this 10000crs invested elsewhere including banks we may get interest more than Rs 750 crores So it's not a value for money investment and waste of public funds. The greatest joke is the District Collector promised compensation that runs into Rs 25000 crores
Rate this:
Share this comment
Cancel
Prakash Elumalai - Edison, NJ,யூ.எஸ்.ஏ
12-ஜூலை-201814:15:44 IST Report Abuse
Prakash Elumalai நீங்க என்ன எடுத்து சொன்னாலும் நங்கள் உணர்ச்சிவசப்பட்டு தான் வீணாப்போவோம் ... எங்களுக்கு தொலைநோக்கு திட்டங்கள் தேவை இல்லை .. ஏன்னா எங்களுக்கு இலவசம் கிடைக்கும் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X