ஊழலில் ஆண், பெண் வித்தியாசம் இல்லை...| Dinamalar

ஊழலில் ஆண், பெண் வித்தியாசம் இல்லை...

Added : ஜூன் 21, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisementபொதுத்துறை வங்கிகள் வாராக்கடன் சுமை, அதிகமாக விமர்சிக்கப்படும் மிகப்பெரிய விஷயமாகி உள்ளது.வங்கிகள் குறித்த பல விஷயங்களை ஆராய முற்பட்டதற்கு காரணம், செல்லாத கரன்சி அறிவிப்பு, மக்களை முடக்கியது என்பதை விட, வங்கிகளில் சேமிப்பு உட்பட பல விஷயங்களை மக்கள் புரிந்து கொள்ள துவங்கியது காரணமாகும்.அதிலும், பல்வேறு வங்கிகளில் எத்தனை கணக்குகள் ஒரே நபருக்கு இருக்கின்றன, வரி கட்டாமல் எவரிடம் பணம் சேர்ந்து இருக்கிறது என்றும் அறிய விரும்புகின்றனர். ஆண்டு தோறும் இரட்டை முறையிலான, 'பாலன்ஸ்ஷீட்' என்ற, வங்கிகள் கணக்கு தணிக்கை விபரம், பொதுமக்களுக்கு அதிகம் தெரியாத விஷயமாகும். வங்கிகள் தங்கள் வாராக்கடன் விஷயத்தை தெரிவிக்காமல், அன்றைய நடப்பை விளக்கும் ஆண்டுக் கணக்கில், லாபம் காட்டும் காலம் மாறிவிட்டது.வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து பணத்தை பறித்த செயலுக்கு, அதன் மூத்த அதிகாரிகள் நடந்த விதம் சரியல்ல; அவர்களில் பலர் பிடிபட்டிருக்கின்றனர் என்பதும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.பொதுத்துறை வங்கிகள் பலவற்றில், 1,000 கோடி ரூபாய் வரை கடன் வாங்கி, அதை ஏமாற்றிய மோசடிக்காரர்கள், அவர்கள் நடத்திய புரட்டு கம்பெனிகள் - ஷெல் கம்பெனிகள் குறித்த தகவல்களும் தனித்தனியே வருகின்றன. அதில் இம்மாதிரி கம்பெனிகளில், பெயருக்கு, நான்கு முதல் ஐந்து பேரை நியமித்து, அவை செயல்படும் கம்பெனிகளாக மோசடி நடந்திருக்கின்றன. இதில் ஏதோ ஒரு கோடி பேர் வேலை பார்ப்பது போல காட்டப்பட்ட மோசடி, புதுமையானது.தமிழகத்தில் இம்மாதிரி மோசடி கம்பெனிகள், 30 ஆயிரம் வரை இருந்ததாக கூறப்படுகிறது. அதைக் கணக்கிட்டால், குறைந்தது ஒரு லட்சம் பேர் வேலை பறி போனதாக ஒரு பொய்க்கணக்கு வரும். அப்படிப் பார்த்தால், வேலைவாய்ப்பு குறித்த புள்ளி விபரங்களின் நடைமுறை தவறாகிறது.வாராக்கடன் விஷயத்தில், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், 'தடம் மாறிய அல்லது கண்காணிப்பு இல்லாத வங்கிகள்' என்று, இவற்றை குறிப்பிட்டிருக்கிறார்.கண்காணிக்க வேண்டிய நடைமுறைகள் பின்பற்றப்படாமல், ஊழலை ஆதரிக்கும் நிர்வாக நடைமுறைகள், பொதுத்துறை வங்கிகளிடம் இருந்ததை, ரிசர்வ் வங்கி மற்றும் நிதித்துறை விசாரணைகள் காட்டுகின்றன. இனி, அந்த வாராக்கடனை வசூலிக்க மத்திய நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் எடுத்து வரும் அதிரடிகள், வரும் காலத்தில், வங்கிகள் சேவை சீர்திருத்தத்திற்கு வழிவகுக்கும்.
தொழில் ஊக்குவிப்பிற்கு கடன் தரவும், வங்கிகளில் உள்ள பொதுமக்கள் டிபாசிட் பாதுகாப்பாக இருக்கவும், புதிய நடைமுறைகள் நிரந்தரமாக உதவும். அதிலும், குறு சிறு தொழில்கள் தொய்வின்றி கடனுதவி பெற, புதிய திட்டங்கள் பயன் தரும் என்று, தற்போது நிதித்துறையை கையாளும் அமைச்சர் பியுஷ் கோயல், திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.அதே சமயம், பொதுத்துறை வங்கிகள் தலைமை நிர்வாகிகள் பெறும் சம்பளம் மற்றும் சில வசதிகள், மிகவும் அதிகம் அல்ல. தனியார் வங்கிகள் தலைமைப் பொறுப்பாளர் பெறும் சம்பளத்தில், ஆறில் ஒரு பங்கு கூட, இவர்கள் பெறுவதில்லை. இது எதற்காக என்றால், ஊழல் நடப்பதற்கு, கட்டுப்பாடு விதிகள் இன்னமும் தேவைப்படுகிறதா என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது.அதனால், 'ஷெல் கம்பெனி' என்ற மோசடி மூலம் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்ட பலர், ஏமாற்றிய உத்திகள் வங்கிகளுக்கு பாடமாகும். மல்லையா, நிரவ் மோடி போன்றவர்கள், வெளிநாடுகளில் தங்க முன்னேற்பாடுகளுடன் சென்றிருப்பதும் வெளிச்சமாகி உள்ளது.இது ஒருபுறம் இருக்க, தனியார் வங்கிகள் மிகவும் பெரிய அளவில் லாபம் ஈட்டுவதும், வாராக்கடனை விளிம்பில் வைத்திருப்பதும் தெரிகிறது.ஆனால், எச்.பி.டி.சி., வங்கி தலைமை அதிகாரி ஆதித்யபூரி, ஆக்சிஸ் வங்கி தலைமை அதிகாரி ஷிகா சர்மா, சர்ச்சையில் சிக்கிய, ஐ.சி.ஐ.சி.ஐ., தலைவர் சந்தா கோச்சார் ஆகியோர், ஆண்டு ஒன்றுக்கு, ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுபவர்கள்.இந்த அளவு சம்பளம் பெற்றதுடன், பல விருதுகளையும், மதிப்புகளையும் பெற்ற பெண் உயர் அதிகாரி சந்தா கோச்சார், இப்போது, 'ஊழலை ஊக்குவித்தவர்' என்ற பெயருக்கு உரிமையாளர். 'வீடியோகான்' என்ற தனியார் கம்பெனி உரிமையாளர் வேணுகோபால் துாத் நிறுவனத்துடன், தன் கணவர் தீபக் நடத்திய நிறுவனத்திற்கு, இவர் அள்ளித்தந்த கடன் உதவி, இன்று விசாரணை வளையத்தில் அவரை மாட்டியிருக்கிறது.இப்போது நீண்ட விடுப்பில் கோச்சார் இருப்பதும், அவருக்கு பதிலாக பொறுப்பேற்றிருக்கும் சந்தீப் பக் ஷி, நடந்த ஊழல் பின்னணிகளை வெளிச்சமாக்குவார் என்கிற போது, ஊழலில் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லை என்பது புதிய விதியாகிறது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X