நீலகிரி மாவட்டத்தில் தொடர்கிறது கனமழை : பாறை, மரம் விழுந்து 3 மாநில போக்குவரத்து பாதிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீலகிரி மாவட்டத்தில் தொடர்கிறது கனமழை : பாறை, மரம் விழுந்து 3 மாநில போக்குவரத்து பாதிப்பு

Added : ஜூலை 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
நீலகிரி மாவட்டத்தில் தொடர்கிறது கனமழை : பாறை, மரம் விழுந்து 3 மாநில போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக, மரங்கள் விழுந்தும், மண் சரிவு ஏற்பட்டும், மூன்று மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில், பரவலாக கனமழை பெய்து வருகிறது. கூடலுார் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை மரப்பாலம் அருகே, நேற்று காலை, சாலையோரம் இருந்த மரம் சாய்ந்து, மின் கம்பி மற்றும் அருகேயுள்ள கடைகள் மீது விழுந்தது. இதனால், மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூடலுார் தீயணைப்பு வீரர்கள், மரத்தை அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர். கூடலுார் - ஓவேலி சாலை, பார்வுட் போலீஸ் ஸ்டேஷன் அருகே, நேற்று அதிகாலை, இரண்டு பாறைகள் சாலையில் விழுந்து, வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில இடங்களில், லேசான மண் சரிவு ஏற்பட்டது. நெடுஞ்சாலை துறை ஊழியர்கள், 'பொக்லைன்' பயன்படுத்தி, பாறைகளை அகற்றி, 11:00 மணிக்கு போக்குவரத்தை சீரமைத்தனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை : அதிகாரிகள் கூறுகையில், 'தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை, பாதுகாப்பாக தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 'பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள, மீட்பு குழுவினர் தயாராக உள்ளனர்' என்றனர். மழை காரணமாக, கூடலுார், பந்தலுார் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு, நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் மழையால், மாவட்டத்தில் பெரிய அணையாக கருதப்படும், அப்பர்பவானி, பைக்காரா, குந்தா, கெத்தை, மாயார் அணைகளுக்கு வினாடிக்கு, 250 முதல், 300 கன அடி வரை தண்ணீர் வருகிறது. அதில், பைக்காரா அணையில், 100க்கு, 86 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
வால்பாறையில் கனமழை : கோவை மாவட்டம், வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த மாதம் முழுவதும் கனமழை பெய்ததால், 1ம் தேதி, 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை நிரம்பியது. இதையடுத்து, பரம்பிக்குளம் அணைக்கு, சேடல்அணை வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. கடந்த, மூன்று நாட்களாக, இடைவிடாது மழை கொட்டுவதால், சோலையாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளன. அணையின் பாதுகாப்பு கருதி, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, மூன்று மதகுகள் திறக்கப்பட்டு, வினாடிக்கு, 679 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர், கேரளா சோலையாறு அணைக்கு சென்றது. நேற்று காலை, 8:00 மணி வரை வால்பாறையில், 13 செ.மீ., சோலையாறில், 16 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. வால்பாறையில், வரலாறு காணாத மழை காரணமாக, பி.ஏ.பி., பாசன திட்ட அணைகள் ஒவ்வொன்றாக நிரம்பி வருகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு பின், அணைகள் நிரம்புவதால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளம் : கனமழை காரணமாக, திருப்பூர் மாவட்டம், உடுமலை, திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவிக்கு மேல், பாறைக் குகைக்குள் உள்ள, பஞ்சலிங்கங்கள் நீரில் மூழ்கியுள்ளன. சுற்றுலாப் பயணியர், அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. அருவிக்கு செல்லும் பாதையும் மூடப்பட்டது.மலை அடிவாரத்தில் உள்ள, அமணலிங்கேஸ்வரர் கோவிலை சுற்றி வரும் பாதையும், வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. பல மாதங்களுக்கு பின், பாலாற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
10 ஆயிரம் வாழைகள் பாதிப்பு : நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் கனமழையால், ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மதியம், 12:00 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம், 81.60 அடி, நீர் இருப்பு, 16.5 டி.எம்.சி., யாக இருந்தது.பவானிசாகர் அணையின் நீர்ப்பரப்பு பகுதிகளில், மானாவாரி பயிர் செய்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், சிலர் வாழை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்வது தொடர்கிறது. நீர்த்தேக்க பகுதியை ஒட்டியுள்ள தனியார் தோட்டங்களிலும், வாழை பயிரிடப்பட்டுள்ளது.அணை நீர்மட்டம், 75 அடியை தாண்டினால், நீர்த்தேக்க பகுதியை ஒட்டியுள்ள, விவசாய நிலங்கள் நீரில் மூழ்கும். கடந்த வாரமே, அவரை, தட்டைப்பயிர் உள்ளிட்ட பயிர்கள், நீரில் மூழ்கின. தற்போது, அணையில், 81 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியதால், நீர்பிடிப்பு பகுதியில் பயிரிடப்பட்டிருந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கதலி, நேந்திரன் ரக வாழைகள், நீரில் மூழ்கின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை