ரூ.1,500 கோடி முறைகேடு: சி.பி.ஐ., விசாரணை கேட்கிறார் ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.1,500 கோடி முறைகேடு: சி.பி.ஐ., விசாரணை கேட்கிறார் ஸ்டாலின்

Added : ஜூலை 11, 2018
Advertisement

சென்னை: 'மின் வாரியத்தில், தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து, 1,500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்திய முறைகேடுகள் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:சட்டசபை தொடரின், இறுதி நாளில் வைக்கப்பட்ட, மத்திய தணிக்கை அறிக்கையில், தமிழக அரசின் ஒட்டுமொத்த தோல்விகளும் அணிவகுத்து நிற்கின்றன.தமிழ்நாடு மின் வாரியம், 2013 அக்., முதல், 2016 பிப்., வரை நிலக்கரி இறக்குமதி செய்ததில் மட்டும், 1,600 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.தரமில்லாத நிலக்கரியை இறக்குமதி செய்ததால், இந்த மோசமான இழப்பை சந்திக்க வேண்டியதாகி விட்டது என, மத்திய தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.தரமில்லாத நிலக்கரி இறக்குமதியில் மட்டும், 607 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுஇருக்கிறது. சென்னை, மக்களை பேரிடரில் சிக்க வைத்த வெள்ளம் பற்றிய தணிக்கை அறிக்கை, அ.தி.மு.க., அரசின் நிர்வாக தோல்விக்கு சான்று. 'பந்தோபஸ்து' பணிக்கான கட்டணங்களை உரிய காலத்தில், டி.ஜி.பி., மாற்றி அமைக்காததால், அரசுக்கு, 98 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.அரசின் மெத்தனத்தால், 1,120 கோடி ரூபாய் வணிக வரி இழப்பு; 25 பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால், 2016- - 17ல், 9,366 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய தணிக்கை அறிக்கை, அ.தி.மு.க., அரசின் நிர்வாக அலங்கோலத்தால் ஏற்பட்ட இழப்புகளின் தொகுப்பாக இருக்கிறது. இந்த நஷ்டங்களை மட்டும் கூட்டிப் பார்த்தால், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், அரசு கஜானாவை, அ.தி.மு.க., அரசு காலி செய்திருப்பது தெரிகிறது.மின் வாரியத்தில், தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து, 1,500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதில் உள்ள முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லையெனில், தி.மு.க., சார்பில், வழக்கு தொடரப்படும்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில், 'தமிழக அரசு தாக்கல் செய்துள்ள லோக்ஆயுக்தா சட்ட மசோதாவை தி.மு.க., எதிர்க்கவில்லை; ஆனால், அது, பல் இல்லாத பொக்கை வாயாக, வெட்ட பயன்படாத அட்டைக்கத்தியாக இருக்கிறது.'உண்மையாக, ஊழலை ஒழிக்கும் வலிமையுள்ள லோக் ஆயுக்தா வேண்டும். வலிமையான பற்களை உடைய, லோக் ஆயுக்தா உருவாக்கப்பட்டு, அடி முதல் நுனி வரை விரும்பி சுவைக்கும் கரும்பாக, சட்டத்தை மக்கள் வரவேற்கும் காலம், ஜனநாயக ரீதியாக விரைவில் அமையும்' எனக் கூறிஉள்ளார்.

Advertisement