ம.ஜ.த., செயல்பாடு: காங்., தலைவர்கள் குமுறல் : எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் ஆக்ரோஷம்| Dinamalar

ம.ஜ.த., செயல்பாடு: காங்., தலைவர்கள் குமுறல் : எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் ஆக்ரோஷம்

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (2)
Advertisement

பெங்களூரு: 'கர்நாடக மேலவை தலைவர் பதவியை, ம.ஜ.த., விட்டுக்கொடுத்தே ஆக வேண்டும். இல்லையென்றால், கூட்டணி ஆட்சியே தேவையே இல்லை' என, ஆலோசனை கூட்டத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஆவேசமாக வெடித்தனர்.சட்டசபை காங்கிரஸ் குழு தலைவரான, சித்தராமையா தலைமையில், கட்சி எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் கூட்டம், பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று நடைபெற்றது. துணைமுதல்வர் பரமேஸ்வர் உட்பட, காங்கிரஸ் அமைச்சர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், எம்.எல்.சி., அப்துல் ஜப்பார் பேசியதாவது:மேலவையில், காங்கிரஸ் உறுப்பினர்கள் எண்ணிக்கை, அதிகம் உள்ளது. எனவே, இந்த சபை தலைவர் பதவியை, காங்கிரஸ் பெற வேண்டும்.குறைந்த எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும், ம.ஜ.த.,வுக்கு முதல்வர் பதவியை, விட்டு கொடுத்தோம். எனவே, மேலவை தலைவர் பதவியையும், அக்கட்சிக்கு விட்டு கொடுப்பது நல்லதல்ல. ஒரு வேளை, ம.ஜ.த., தலைவர்கள், சம்மதிக்காவிட்டால், கூட்டணியிலிருந்து வெளியே வாருங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.அவர், 'பற்ற'வைத்தது, கொளுந்துவிட்டு எரிந்தது; பலரும், பிடிவாதம் பிடித்தனர்.கூட்டணி அரசில், மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் நியமனம், அதிகாரிகள் இடமாற்றம், கடலோர மாவட்டங்கள், ஹைதராபாத் - கர்நாடகா பகுதிகள் அலட்சியப்படுத்தியுள்ளது பற்றியும், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.அரசு அமைந்து, ஒரு மாதம் கடந்தும், மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், ஒவ்வொரு விஷயத்துக்கும், துறை வாரியான அமைச்சர்களை நாட வேண்டியுள்ளது.அபிவிருத்தி பணிகள் விஷயத்தில், அதிகாரிகளுக்கு உத்தரவிடுபவர்களே இல்லாத நிலை உள்ளது. காங்கிரஸ், ம.ஜ.த., என இரண்டு கட்சிகளின் அமைச்சர்கள் உள்ள மாவட்டங்களில், குழப்பம் அதிகரித்துள்ளது. யாருடைய பேச்சை கேட்பது என, அதிகாரிகளுக்கு தெரியாததால், அபிவிருத்தி பணிகள் நடக்கவில்லை.அதிகாரிகள் பொறுப்பிலிருந்து கழன்று கொள்கின்றனர். எனவே, உடனடியாக, மாவட்ட பொறுப்பு அமைச்சரை நியமியுங்கள்' என, பலரும் வலிறுத்தினர்.'அன்ன பாக்யா திட்ட அரிசியில், இரண்டு கிலோ குறைத்தது சரியல்ல. இந்திரா உணவகம் மூடும் நிலைக்கு வந்துள்ளது. உணவகங்களை மூடினால், மக்கள் சபிப்பர். ஏழைகளுக்கான திட்டங்கள், தடம் புரளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்' என, பல எம்.எல்.ஏ.,க்கள் அறிவுறுத்தினர்.பட்ஜெட்டில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டுமென, வேறு சிலர் ஆலோசனை கூறினர்.அமைச்சர் பதவி கிடைக்காமல், அதிருப்தியில் உள்ள மூத்த எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கரெட்டி, சதீஷ் ஜார்கிஹோளி, நேற்றைய கூட்டத்துக்கு, வரவில்லை.கூட்டம் முடிந்த பின், மூத்த எம்.எல்.ஏ., எச்.கே.பாட்டீல் அளித்த பேட்டி:பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும்படி, கூட்டத்தில் வலியுறுத்தினோம். பட்ஜெட்டில், சிறுபான்மையினருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, வட கர்நாடகா பகுதிக்கு, நிதி ஒதுக்கியதில் பாரபட்சம், விவசாயிகள் கடன் ரத்தால் ஏற்படும் தொந்தரவு பற்றி, விவாதிக்கப்பட்டது.கடன் ரத்து திட்டத்தின் பயன், கடலோரம், வட கர்நாடக பகுதிகளின் விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும். விவசாயிகள், வெவ்வேறு விதமாக கடன் பெற்றுள்ளனர்.அதை மனதில் கொண்டு, அனைவருக்கும் பலன் கிடைக்கும் வகையில், திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என ஆலோசனை கூறப்பட்டது.இது தொடர்பாக, துணை முதல்வர் பரமேஸ்வர், முதல்வருடன் விவாதிப்பதாக நம்பிக்கை அளித்துள்ளார். கட்சி எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவரான சித்தராமையாவும், எங்கள் கோரிக்கையை கேட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement