50 லட்சம் துணிப்பை வழங்க திட்டம் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் முனைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

50 லட்சம் துணிப்பை வழங்க திட்டம் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் முனைப்பு

Added : ஜூலை 12, 2018
Advertisement

திருப்பூர்:பிளாஸ்டிக் கவர் ஒழிக்கும் நோக்கத்துடன், 50 லட்சம் துணிப்பையை, பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகிக்க, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.தமிழக அரசு, 2019 ஜன., 1 முதல், பிளாஸ்டிக் தடை செய்யப்படுமென அறிவித்துள்ளது. பிளாஸ்டிக், பாலித்தீன் பயன்பாட்டை, முன்கூட்டியே தடுக்கவும் அரசு துறையினர் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது. டீக்கடை, பேக்கரி, ஓட்டல்கள் நடத்துவோர், வியாபாரிகள், தொழில்துறையினரை அழைத்து, உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக, ஆலோசனை வழங்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில், பிளாஸ்டிக் தடையை அமல் செய்வதற்கு, மாவட்ட தொழில் மையம், தொழில் முனைவோர், பின்னலாடை தொழில்துறையினர் மற்றும் தன்னார்வ அமைப்பினர் பங்களிப்புடன், முயற்சி எடுக்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் கூறியதாவது:மாவட்டத்தில், எட்டு லட்சம் குடும்பங்களும், 25 லட்சம் மக்களும் உள்ளனர். பிளாஸ்டிக் தடையை அமல் செய்வதற்காக, அரசுத்துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, மாற்று பொருட்களை வழங்குவதற்கான பணிகள் துவங்கியுள்ளன.தொழில்துறையினர், தன்னார்வ அமைப்புகளின் பங்களிப்புடன், 50 லட்சம் துணிப்பை தயாரித்து இலவசமாக வழங்குமாறு, கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.துணிப்பை பயன்பாட்டை, மக்கள் மத்தியில் ஊக்கவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில் முனைவோருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். பள்ளி, கல்லுாரிகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, மக்களிடம் நல்ல மாற்றத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement