கடலூர் நகராட்சி அலுவலகத்தில் சப் கான்ட்ராக்டர் தற்கொலை முயற்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலூர் நகராட்சி அலுவலகத்தில் சப் கான்ட்ராக்டர் தற்கொலை முயற்சி

Added : ஜூலை 12, 2018
Advertisement

கடலுார்:கடலுார் நகராட்சியில் நிலுவை தொகை வழங்காததை கண்டித்து, விஷம் குடித்து, கமிஷனர் ஜீப் முன் படுத்து மறியல் செய்த சப் கான்ட்ராக்டரை போலீசார் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.கடலுார் நகராட்சியில் வருவாயை விட கூடுதல் செலவினங்களால் ஊழியர்களுக்கே சம்பளம் போட முடியாத நிலை உள்ளது. இதனால், நகர பகுதியில் குப்பைகள் அள்ள 3 தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.இதில், திருப்பாதிரிப்புலியூர் மற்றும் புதுப்பாளையம் ஆகிய 2 நிறுவன டெண்டர்களை சி.எம்.ஏ., விடம் அனுமதி பெறவில்லை எனக் கூறி, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கமிஷனர் ரத்து செய்து உத்தரவிட்டார்.அதில் திருப்பாதிரிப்புலியூரில் 22வது வார்டு முதல் 29வது வார்டு வரையுள்ள பகுதிகள் காஞ்சிபுரம் மாவட்டம் 'வாலாஜாபாத்' என்கிற நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திடம் கடலுாரைச் சேர்ந்த துரை (எ) ரட்சகன், 42, சப் கான்ட்ராக்ரடாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பல லட்சம் ரூபாய் நிலுவை தொகை நகராட்சி வழங்கவேண்டி உள்ளது.இது குறித்து நகராட்சி கமிஷனரிடம் பல முறை கேட்டும் நிலுவைத் தொகை கிடைக்காததால், ரட்சகன் விரக்தி அடைந்தார்.நேற்று முன்தினம் மாலை ரட்சகன் கமிஷனரை சந்தித்து நிலுவைத் தொகை தரவில்லை எனில், விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார். இதனால், கமிஷனர் அப்செட்டாகி அறையை விட்டு வெளியேறினார்.இந்நிலையில், நேற்று மதியம் 12:00 மணிக்கு ரட்சகன், மனைவி ராதிகா, மகன் முகேஷ் ஆகியோர் கையில் விஷ பாட்டிலுடன் கமிஷனர் அறைக்கு வந்தனர். அங்கு பாட்டிலை திறந்து விஷத்தை குடித்த ரட்சகன், கமிஷனரின் ஜீப் முன்பு படுத்து மறியல் செய்தார்.தகவலறிந்த கடலுார் புதுநகர் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரட்சகனை மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது போலீசாருக்கும் ராதிகாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இது குறித்து கமிஷனர் சரவணன் கூறுகையில், 'நகராட்சியில் பணி செய்த நிறைய ஒப்பந்ததாரர்களுக்கு பில்தொகை வழங்க வேண்டியுள்ளது. அந்த அளவிற்கு நகராட்சியில் வருவாய் வரவில்லை. அதற்காக மேலிடத்தில் இருந்து நிதி கேட்டுள்ளேன். ரட்சகன் ஒப்பந்ததாரரால் நியமிக்கப்பட்ட சப் கான்ட்ராக்டர். அவரது கான்ட்ராக்ட்டில் தணிக்கை தடை உள்ளது.நகராட்சியில் வசூலாகும் தொகையை ஊழியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து சம்பளம் போட வேண்டும். அதன் பிறகு தான் கான்ட்ராக்டருக்கு பில் கொடுக்க முடியும். ரட்சகன் நேற்று முன்தினமே விஷம் குடிப்பதாக மிரட்டினார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்து, பாதுகாப்பு கேட்டுள்ளேன்' என்றார்.

Advertisement