பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க சபதம் ஏற்போம்: பூமிப்பந்தை பாதுகாத்து பசுமையை வளர்ப்போம்| Dinamalar

தமிழ்நாடு

பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க சபதம் ஏற்போம்: பூமிப்பந்தை பாதுகாத்து பசுமையை வளர்ப்போம்

Updated : ஜூலை 14, 2018 | Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement
பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க சபதம் ஏற்போம்: பூமிப்பந்தை பாதுகாத்து பசுமையை வளர்ப்போம்

காற்று இல்லாத இடமில்லை' என்ற அறிவியல் கூற்றை, 'பிளாஸ்டிக் கவர்' இல்லாத இடமில்லை' என்றே மாற்றி சொல்லும் காலத்தில் வாழ்கிறோம். 'முடிந்தால் முடியாதது எதுவுமில்லை' என்பதற்கு ஏற்ப, பிளாஸ்டிக் அரக்கனை வதம் செய்ய யுத்தம் துவங்கி விட்டது. இதில், ஒவ்வொருவரும் தங்களை இணைத்து கொண்டு, பாலிதீன் பைகளுக்கு விடை கொடுப்போம்; பசுமையை பரப்புவோம்.


தமிழக அரசு, 2019 ஜன., 1 முதல் பிளாஸ்டிக் ஒழிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஆரம்பத்தில், இரைச்சலாக இருந்தாலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அரசின் முயற்சிக்கு, அனைத்து தரப்பினரும், தாங்களாக முன்வந்து, ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
இதில், முந்திக்கொண்ட சுகாதாரத்துறை, முன்கூட்டியே, பிளாஸ்டிக் ஒழிப்பை கையில் எடுத்துள்ளது. வரும், 16ம் தேதி முதல், பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தவிர்க்க வேண்டும்; மாற்று பொருட்களை பயன்படுத்த வேண்டுமென, பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
அரசின் ஆக்கப்பூர்வமான இந்த நடவடிக்கைக்கு, ஒட்டுமொத்த மக்களும், முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தமிழகத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க, அரசுடன் தோள்கொடுத்து, செயல்பட வேண்டுமென, உயர் அதிகாரிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு அரசுத்துறையும், பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளை பட்டியலிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன
மண்ணுக்கு எமன்
மக்காத பிளாஸ்டிக் பொருட்கள், நிலங்களில் தேங்கும் போது, காலப்போக்கில், அபாயகரமான வேதி பொருட்களை மண்ணுக்குள் கசிய செய்கிறது. மண் வளம் பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீரிலும் கலந்து, உடலுக்குள் புகுந்து ஆபத்தை விளைவிக்கிறது.ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எரியும் பிளாஸ்டிக் பொருட்களால், கால்நடைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் உண்கின்றன. இறைச்சி வடிவில், மனிதர்களின் உடலுக்குள் சென்றுவிடுகிறது. பல ஆண்டுகளானாலும் மக்காத தன்மை பெற்றுள்ளதால், அவற்றை அழிப்பதோ, ஒழிப்பதோ இயலாத காரியமாக மாறிவிடுகிறது.
காலத்தின் கட்டாயம்
நீர், நிலம், காற்று மற்றும் உணவு போன்ற பல்வேறு வழிகளில் மாசு ஏற்பட்டு, மனித உயிருக்கும், சுகாதாரத்துக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பெரும் தீங்கு விளைவிக்கின்றன. பேராபத்தை விளைவிக்கும் இத்தகைய பொருட்களை தவிர்க்க வேண்டியது, இன்றைய சூழலில் கட்டாயமாக மாறியுள்ளது.
விலங்குகள் பரிதாபம்
காடுகளில் பாலிதீன் பொருட்களை வீசுவதால், மான் போன்ற வன விலங்குகள் உணவாக கருதி உண்கின்றன; பரிதாபமாக உயிரிழக்கின்றன.மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் சேர்வதால், விஷத்தன்மை உள்ள வேதிப்பொருட்கள் கடலில் கலந்து, உயிரினங்கள் மடிகின்றன. பிளாஸ்டிக் பொருட்களில் சிக்கி, மீன்கள், கடல் பறவைகள், ஆமைகள் சிக்கி உயிரிழக்கின்றன.
சமுதாய சாபக்கேடு
பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், ஒட்டுமொத்த உயிரினங்கள் மற்றும் சமுதாயத்துக்கு, சாபக்கேடாக மாறியுள்ளது. இந்தியாவை ஆட்டிப்படைக்கும் பிளாஸ்டிக் அரக்கனை ஒழித்துக்கட்ட அரசாங்கம் தயாராகியுள்ளது. காலம் கடந்த முயற்சியாக இருந்தாலும், அன்றாட கடமைகளில் ஒன்றாக, பிளாஸ்டிக் ஒழிப்பை இணைத்துக்கொள்ள வேண்டும். அரசாங்கம் மட்டுமே, பிளாஸ்டிக் பிரச்னைகளுக்கு காரணம் அல்ல; ஓயாமல் பயன்படுத்தும் மனிதர்கள் தான் முக்கிய காரணம். எதிர்கால சந்ததியினருக்கு, சுகாதாரமான தமிழகத்தை விட்டுச்செல்ல, பிளாஸ்டிக் ஒழிப்பை உறுதிமொழியாக ஏற்கவேண்டும்.
காத்திருக்க வேண்டாமே!
வழக்கம் போல், கால அவகாசம் நெருங்கும்வரை காத்திருக்கலாம் என, யாரும் நினைக்கவே வேண்டாம். வணிக நிறுவனங்கள், ஓட்டல், பேக்கரிகள், மளிகை கடைகள், தொழிற்சாலைகள் என, தாங்களாகவே முன்வந்து, பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு 'குட் பை' சொல்ல வேண்டும். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், வீடுகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கைவிட உறுதியுடன் வலியுறுத்த வேண்டும்.தன்னார்வ அமைப்புகள், பசுமை அமைப்புகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள், விழிப்புணர்வு பேரணி, ஊர்வலம், தெருமுனை பிரசாரம் மேற்கொண்டு, பிளாஸ்டிக் பொருட்களுக்கு முடிவு கட்டவும், சரியான மாற்று பொருட்களை பயன்படுத்தவும் வழிகாட்ட வேண்டும்.


பாலிதீன் கவரில் டீபாழாகும் வாழ்க்கை
பாலிதீன் பைகள், 'ஒன்யூஸ்' டம்ளர் போன்ற பொருட்களில், 'பாலி எத்திலீன் டெரெப்தாலேட்', 'தாலேட்', 'பிஸ்பெனால்', ஈயம், பாதரசம், 'காட்மியம்', 'ஆன்டிமனி' போன்ற பொருட்கள் உள்ளன. சூடான டீ, காபி போன்றவற்றை, பாலிதீன் கவரில் வாங்கி அருந்துவதால், உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கும் போது, 'நைட்ரஜன் ஆக்சைடு' பென்சின், 'வினைல் ைஹடிரோகுளோரைடு' போன்ற நச்சு வாயுக்கள் வெளியாகி, காற்று மாசடைகிறது; மனிதர்களும், உயிரினங்களும் காற்றை சுவாசிக்கும் போது, நுரையீரல்களுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தொற்று நோயாகும் புற்றுநோய்
பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியால், அதிக அளவு புற்றுநோய் வருகிறது. பிளாஸ்டிக்கில் உள்ள பொருட்களை, எளிதாக ஜீரணிக்க முடியாத காரணத்தால், உடலில் நீண்ட நாட்கள்தங்கி, புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. ஆஸ்மா, நுரையீரல் தொற்று நோயும், சுவாச கோளாறும் ஏற்படுகிறது.பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கும் பகுதியில், மழைநீர் தேங்கி, டெங்கு, சிக்-குன்-குனியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்கள் உருவாகின்றன. சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு, மேலும் பல பாதிப்புகள் ஏற்படுகிறது.- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X