திருப்பதி பெருமாள் கோவிலில் நகை திருட்டு? அர்ச்சகர் பொய் சொல்வதாக குற்றச்சாட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பதி பெருமாள் கோவிலில் நகை திருட்டு? அர்ச்சகர் பொய் சொல்வதாக குற்றச்சாட்டு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

வேலூர்: ''வெங்கடேச பெருமாள் கோவிலில், நகை திருட்டு போனதாக, தலைமை அர்ச்சகர் சொல்வது சுத்தப்பொய்,'' என, திருமலை, திருப்பதி தேவஸ்தான தலைவர் புட்டா சுதாகர் யாதவ் கூறினார்.
இது குறித்து, வேலூரில் நேற்று மாலை அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில், தலைமை அர்ச்சகராக பணியாற்றிய ரமண தீட்சதர் கோவில் நகைகள் திருட்டு போனதாகவும், காணாமல் போய் விட்டதாகவும் சொல்வது சுத்தப் பொய். இந்த குற்றச்சாட்டை, அவர் பணியாற்றிய போதே ஏன் சொல்லவில்லை? ஓய்வு பெறும் போது பொய் சொல்லி, குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார். கடந்த, 1952ம் ஆண்டு கோவில் பதிவேடுகளின்படி, நகை, பணம் மற்றும் கோவில் சொத்துக்கள் அனைத்தும் சரியாக உள்ளது. பாதுகாப்பாகவும் உள்ளது. கோவில் கணக்கு விபரங்களை சரி பார்க்கவும், கண்காணிக்கவும் கமிட்டிகள் உள்ளன. இதனால் யாரும் ஏமாற்ற முடியாது. தப்பு செய்யவும் முடியாது. இது குறித்து ரமண தீட்சதர் நேருக்கு நேர் என்னோடு விவாதிக்க தயாரா? இப்படி அபாண்டமான பொய் குற்றச்சாட்டை சொன்ன, ரமண தீட்சதரை வெங்கடேசபெருமாள் தண்டிப்பார். திருமலைக்கு வரும், வி.வி.ஐ.பி.,க்களுக்கு மட்டும் தான், அனைத்து வசதிகள் செய்து கொடுக்கப்படுவதாக வரும் குற்றச்சாட்டு தவறாகும். அனைத்து பக்தர்களுக்கும் வசதிகள் செய்து தரப்படுகின்றன. சாதாரணமாக பெருமாளை தரிசிக்க, 20 மணி நேரம் ஆகிறது. ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன் கொண்டு வரப்பட்ட, ஸ்லாட் திட்டத்தின்படி, குறிப்பிடப்படும் நேரத்தில் தரிசனம் செய்யலாம். இத்திட்டத்தில் தினமும், 70 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை இரண்டு மணி நேரத்தில் தரிசித்து வருகின்றனர். திருமலைக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, 79 கோடி ரூபாய் செலவில், 12 ஆயிரத்து, 500 பேர் தங்கக்கூடிய யாத்ரி நிவாஸ் கட்டப்படும். முடி காணிக்கை செலுத்துமிடமான வைகுண்டம் கட்டடம், 89 லட்சம் ரூபாயில் புதுப்பிக்கப்படும். மேலும் வயதானவர்கள், பெஞ்சில் உட்கார்ந்தபடி, முடி காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவஸ்தான கமிட்டியில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உறுப்பினராக நியமிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார். வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன், துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை