delhi ush | எதற்கு தமிழகத்தில் ரெய்டு?| Dinamalar

எதற்கு தமிழகத்தில் ரெய்டு?

Updated : ஜூலை 22, 2018 | Added : ஜூலை 21, 2018
Advertisement
delhi ush,டில்லி உஷ், தமிழகம், tamilnadu,வருமான வரித்துறை,IT, ADMK, bjp, அ.தி.மு.க.,  அதிமுக, பா.ஜ., அமித்ஷா,amitshah,  paneerselvam, ops,பன்னீர்செல்ம்,பழனிசாமி , palanisamy

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் அதிக அளவில் வருமான வரித்துறை, 'ரெய்டு' நடந்து வருகிறது. அதுவும் அரசியல்வாதிகள் சம்பந்தம் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் இந்த ரெய்ட் நடப்பது, டில்லி அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், எஸ்.பி.கே., நிறுவனத்தில் நடந்த வருமான வரித்துறை ரெய்டு, ஆளும் கட்சி மட்டுமின்றி எதிர்க்கட்சியினரையும் பாதித்துள்ளது.
இந்த ரெய்டு தா,ன் பார்லிமென்ட் சென்ட்ரல் ஹாலில், தமிழக, எம்.பி.,க்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. நம்ம வீட்டிலேயும் நடக்குமா? என கேட்கும் அளவிற்கு சில, எம்.பி.,க்கள் பயத்தில் உள்ளனர்.
இந்த ரெய்டில் கிடைத்த ஆவணங்கள், பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் உரையாடல்கள் என, வருமான வரித்துறையிடம் பெரிய பொக்கிஷம் சிக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
அரசியல் தொடர்பான ரெய்டுகள், ஆட்சியில் இருப்பவர்களின் அனுமதியில்லாமல் நடப்பதில்லை. எனவே, பா.ஜ., அரசுக்கு அனைத்தும் தெரியும் எனக் கூறப்படுகிறது.தமிழகத்தில் இப்படிப்பட்ட ரெய்டு நடப்பது ஏன்? தமிழகத்தில் தேர்தல் என்றால் பண பட்டுவாடா தான்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்குவது. தேர்தல் கமிஷன் உட்பட என்னதான் முயற்சித்தாலும் இந்த பண பட்டுவாடாவைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
வாக்காளர்களிடம், 'பணம் வாங்காதீர்கள்' என்றால் யாருமே காதில் போட்டுக் கொள்வதில்லை. 2019 பார்லிமென்ட் தேர்தலிலும் தமிழகத்தில் பணம் விளையாடப் போகிறது.
அதனால் தமிழக அரசியல் கட்சிகளிடம் உள்ள பணப் புழக்கத்தை குறைக்க வேண்டும் என முடிவெடுத்து, இப்படிப்பட்ட ரெய்டு நடத்தப்படுவதாக, டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுப்பவர்கள் கான்ட்ராக்டர்கள் தான். எனவே அவர்களிடம் ரெய்டு செய்தால் கட்சிகளுக்கு பணம் போவதை தடுக்க முடியும் என, திட்டமிட்டு வருமான வரித்துறை செயல்படுகிறதாம்.


பா.ஜ., -- அ.தி.மு.க., கூட்டணி?



மோடி அரசு மீது காங்கிரஸ், தெலுங்கு தேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக, மோடிக்கு ஆதரவாக ஓட்டளித்தது, அ.தி.மு.க., இது தொடர்பாக, அ.தி.மு.க., - எம்.பி.,க்களிடையே கருத்து வேறுபாடு இருந்தது. 'எதற்கு மோடி அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க வேண்டும்; வெளிநடப்பு செய்யலாமே' என, சில, எம்.பி.,க்கள் கருத்து தெரிவித்தனர்.
இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தும்போது, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்வார்கள் என சொல்லப்பட்டது. ஆனால் கடைசியில் ஓட்டெடுப்பில் பங்கேற்று மத்திய அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர்.
ஆதரவாக ஓட்டளிக்கும் சமயத்தில் சும்மா பேருக்காக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமே என்ற எண்ணத்தில், மத்திய அரசு தமிழகத்திற்கு எதிராக செயல்படுவதாக, அ.தி.மு.க., - எம்.பி., வேணுகோபால் லோக்சபாவில் பேசினார்.
இதன் பின்ணணியில் நடந்த சம்பவம், இதுதான்:- பா.ஜ., தலைவர் அமித் ஷா, தமிழக துணை முதல்வர், பன்னீர் செல்வத்துக்கு போன் போட்டு பேசியுள்ளார். ''எங்களுக்கு ஆதரவாக ஓட்டளியுங்கள்; வெளிநடப்பு செய்தால் சரி வராது,'' என கேட்டுக் கொண்டாராம், அமித் ஷா. இதனால் தான், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் ஓட்டளித்தனராம்.
முதல்வரிடம் பேசாமல், பன்னீருடன், அமித் ஷா பேசியது ஏன்? அமித் ஷாவுக்கும், பன்னீருக்கும் நல்ல உறவு உள்ளது; அதனால் தான், பழனிசாமியுடன் பேசாமல், பன்னீருடன், அமித் ஷா பேசியதாக கூறப்படுகிறது. ஆனால், இது, அ.தி.மு.க.,விற்குள் நிச்சயம் பிரச்னையை உண்டாக்கும், எனவும் சொல்லப்படுகிறது.
ஒரு பக்கம், தமிழகத்தில் ஊழல் அதிகமாகிவிட்டது என்று பேசிய, அமித் ஷா, இப்போது எப்படி, அ.தி.மு.க., ஆதரவைக் கேட்கலாம் என, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்படுகிறது.
தவிர, எங்கு பார்த்தாலும் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி ஆளும் கட்சியின் பெயரைக் கெடுத்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், பா.ஜ.,விற்கு ஆதரவாக போவது சரியா என்றும் கேட்கின்றனர், அ.தி.மு.க.,வினர்.
பார்லிமென்ட் தேர்தலில், பா.ஜ., - -அ.தி.மு.க., கூட்டணி வருமா? எப்படி ஊழல் கட்சியோடு, பா.ஜ., கூட்டணி அமைக்கும்? அரசியலில் எதுவும் நடக்கலாம் என்றாலும், 'மத்திய அரசிடம், அ.தி.மு.க., அரசுக்கு எதிரான அனைத்து விஷயங்களும் இருப்பதால், பயந்து போய், பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஓட்டளித்ததை வைத்து, கூட்டணி வரும் என சொல்ல முடியாது' எனவும்
சொல்லப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X