பாடலாசிரியர் ஆன பேராசிரியர்| Dinamalar

பாடலாசிரியர் ஆன பேராசிரியர்

Added : ஆக 12, 2018
Advertisement
பாடலாசிரியர் ஆன பேராசிரியர்

தமிழ் சினிமாவில் பாடல்கள் இல்லாத சினிமா விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கே இருக்கும். காதல், அரசியல், குடும்ப உறவுகள், இறப்பு, பிறப்பு, சோகம், மகிழ்ச்சி உள்ளிட்ட அனைத்தை பற்றியும் பாடல்கள் உண்டு.

இந்த பாடல் வரிகளை முணுமுணுக்காமல் எவரும் ஒரு நாளை கூட கடக்க முடியாது. கண்ணதாசன், வாலி, வைரமுத்து, நா.முத்துகுமார் என்ற பாடலாசிரியர்களின் வரிசையில் தனக்கான இடத்தை பிடிக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ளார் நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கடைகுட்டிசிங்கம் படத்தின் பாடலாசிரியர் ரவி.

அவர் கூறியதாவது:சேலம் மாவட்டம் மஞ்சினி என்ற கிராமத்தில் பிறந்தேன். சிறுவயதில் இருந்தே தனிமை விரும்பியான எனக்கு சினிமாக்கள் மட்டுமே துணை. தியேட்டரில் ஒரு நாளில் 3 படங்கள் கூட பார்ப்பேன். பள்ளி காலங்களில் சினிமாவில் தான் மூழ்கி கிடந்தேன். டி.ராஜேந்தர் படங்களில் கதை, திரைக்கதை, இயக்கம், வசனம், பாடல் என்றிருப்பதை பார்த்து வியந்தேன். அவர் எம்.ஏ., படித்தவர் என்பதால் சிறந்த திறமைகளை பெற்றுள்ளார் என நினைத்து நானும் எம்.ஏ., தமிழ் படித்தேன்.

அதனை தொடர்ந்து நவீன கவிதை குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றேன். சில ஆண்டுகள் தமிழ் ஆசிரியராக பணியாற்றினேன். தற்போது சென்னை தனியார் பல்கலையில் தமிழ்த்துறை தலைவராக உள்ளேன். அகச்சிவப்பு கதிர்கள், கனவுநிலை உரைத்தல் உள்ளிட்ட கவிதை தொகுப்புகள் வெளியிட்டுள்ளேன். இதற்கிடையே என்னுடைய சினிமா ஆர்வம் குறையவில்லை. அந்தாதி, சவாரி, ஆகம், நுாறு நாள் காதல், மித்ரா, சதுரங்க வேட்டை -2 உள்ளிட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளேன். காதல் கவிதைகள் நிறைந்த, அகச்சிவப்பு கதிர்கள் தொகுப்பை இயக்குனர் பாண்டிராஜ் படித்துவிட்டு என்னை அழைத்தார்.

அந்த நட்பினால் கடைகுட்டிசிங்கம் படத்திற்கு பாடல்கள் எழுத வாய்ப்பு கிடைத்தது. இதில் நாட்டுப்புற வகையில் கிராமிய மணம் மாறாத 'உலக்க உடஞ்சது போல் உலகம் உடஞ்சிடுச்சே' என்ற பாடல் பலரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டு பெற்றுள்ளது. 'புறா குனுகும் கிணறு,', 'கெட்ட வார்த்தை சொல்லிக் கொள்வோமா 'என்ற இரு கவிதை தொகுப்புகளை வெளியிட உள்ளேன்.

எழுத்தாளர் சுஜாதா என்னுடைய கவிதைகளை படித்துவிட்டு தனக்கு பிடித்த கவிஞர் என்று இதழ் ஒன்றில் எழுதினார். அதை மிகப்பெரிய வாழ்த்தாக கருதி சினிமாவில் நல்ல பாடலாசிரியர் என்ற இடத்தை பிடிக்க போராடி வருகிறேன், என்றார். இவரை பாராட்ட 94434- 09848

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X