கேரளாவை புரட்டி எடுக்கும் மழை: அமைச்சர் ராஜ்நாத் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கேரளாவை புரட்டி எடுக்கும் மழை: அமைச்சர் ராஜ்நாத் ஆய்வு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கேரளாவை புரட்டி எடுக்கும் மழை: அமைச்சர் ராஜ்நாத் ஆய்வு

கொச்சி: கேரளாவில், சிறிய இடைவெளிக்கு பின், நேற்று காலை முதல் மீண்டும் பலத்த மழை பெய்யத் துவங்கியது. இதனால், மீட்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட இரு மாவட்டங்களை, மத்திய உள்துறை அமைச்சர் பா.ஜ.க.,வைச் சேர்ந்த ராஜ்நாத் சிங், ஹெலிகாப்டரில் சென்று, நேற்று பார்வையிட்டார்.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருவதால், பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
நிலச்சரிவு : இதனால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டும், வீடுகள் இடிந்து விழுந்தும், 37 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் சூழ்ந்ததால், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மீட்புப் பணிகளில், தேசிய பேரிடர் மீட்புப்படை, கடற்படை, விமானப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.இவர்கள், 40 குழுக்களாக பிரிந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, சிறிது இடைவெளி விட்டிருந்த மழை, நேற்று காலை முதல், மீண்டும் வெளுத்து வாங்க துவங்கியது. இதனால், ஏற்கனவே தண்ணீரில் தத்தளித்து வரும், லட்சக்கணக்கான மக்கள், மேலும் பீதியடைந்தனர். மழை மீண்டும் பெய்யத் துவங்கியால், மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
அச்சம் : இருப்பினும், இடுக்கி, இடமலையார் அணை களின் நீர் மட்டம், முன்பை விட சற்று குறைந்து உள்ளதாகவும், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்த ர்.இந்நிலையில், நேற்று கேரளா வந்த, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இடுக்கி, எர்ணாகுளம் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை, ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். அவருடன், முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் அல்போன்ஸ், கூடுதல் தலைமை செயலர், பி.எச்.குரியன் ஆகியோரும் சென்றனர்.
எர்ணாகுளம் மாவட்டத்தில், பரவூர் தாலுகாவில் வெள்ளம் பாதித்த மக்கள் மத்தியில், ராஜ்நாத் சிங் பேசியதாவது:கேரளாவில், மழை, வெள்ளத்தால், பல பகுதிகள் மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டு உள்ளன. வரலாறு காணாத வகையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு, தேவையான அனைத்து உதவிகளையும், மத்திய அரசு செய்யும்.வெள்ளம் பாதித்த பகுதிகளை, முதல்வர் பினராயி விஜயனுடன் சென்று பார்வையிட்டேன். அப்போது, நிலைமை மிக அபாயகரமானதாக இருப்பதை உணர்ந்தேன்.இவ்வாறு அவர் பேசினார்.இதற்கிடையே, கேரளாவுக்கு உடனடி நிவாரண பணிகளுக்காக, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குழந்தையை காப்பாற்றிய வீரர் : இடுக்கி மாவட்டத்தில், செருதோணி பாலத்தின் மறுபுறம் நேற்று, உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தையை கையில் பிடித்தபடி ஒருவர், வெள்ளத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தார். அதைப் பார்த்த, தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர், கண்ணையா குமார் என்பவர், நீரில் குதித்து, பாலத்தின் மறுபுறம் சென்றார்.அங்கிருந்த நபரின் கையில் இருந்து குழந்தையை துாக்கி, கையில் அணைத்தபடி, பாலத்தின் மீது வேகமாக ஓடி, பாதுகாப்பான இடத்துக்கு வந்தடைந்தார். இவர், பாலத்தின் மறு பக்கத்தை வந்தடைந்த அடுத்த சில நிமிடங்களில், பாலத்தை மூழ்கடித்தபடி, வெள்ளம் கரை புரண்டோடியது. இந்த காட்சியை படம் பிடித்த ஒருவர், சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை ஏராளமானோர் பகிர்ந்ததுடன், கண்ணையா குமாருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
எல்லாம் போச்சு! : கேரள மாநிலம், வயநாட்டில், பேபி என்ற, 50 வயது பெண்ணின் வீடு, வெள்ளத்தில் நொறுங்கி விழுந்தது. அவர் வைத்திருந்த பணம் மற்றும் பொருட்களும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், தன் எதிர்காலத்தை நினைத்து, ஆழ்ந்த துயரத்தில் அப்பெண் உள்ளார்.தற்போது, நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பேபி, தன் குழந்தைகளின் கல்விச் சான்றிதழ்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X