யானை வழித்தடம் ஆக்ரமித்த 27 விடுதிகளுக்கு 'சீல்!' : சுப்ரீம் கோர்ட் உத்தரவால் நீலகிரியில் பணிகள் தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

யானை வழித்தடம் ஆக்ரமித்த 27 விடுதிகளுக்கு 'சீல்!' : சுப்ரீம் கோர்ட் உத்தரவால் நீலகிரியில் பணிகள் தீவிரம்

Added : ஆக 13, 2018
Advertisement

ஊட்டி: நீலகிரி மாவட்டம், மசினகுடி, பொக்காபுரம் பகுதிகளில், யானை வழித்தடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட, 27 சுற்றுலா விடுதிகளுக்கு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று, 'சீல்'வைக்கப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில், கல்லாறு, குரும்பாடி, கோத்தகிரி, சோலுார், பொக்காபுரம், மசினகுடி, கூடலுார், பந்தலுார், ஓவேலி பகுதிகளில், யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து, ஆயிரக்கணக்கான குடியிருப்புகள், சுற்றுலா விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.கோடை காலங்களில், தண்ணீர், உணவுக்காக இடம் பெயரும் யானைகள், குடியிருப்புகள் மற்றும் வேளாண் தோட்டங்களுக்கு சென்று, சேதம் விளைவிக்கின்றன. வனப்பகுதியைஒட்டிய கிராமங்களில், மனித- - யானை மோதல் அடிக்கடி நடந்து வருவதால், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நீலகிரி மாவட்ட நிர்வாகம், யானை வழித்தடங்களில், உள்ள கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்தது. யானை வலசைப்பாதைகளை மறித்து, குடியிருப்பு, விடுதிகள் என, 840 கட்டுமானங்கள் இருந்தது, ஆய்வில்தெரியவந்தது.மூன்று நாட்களுக்கு முன் நடந்த விசாரணையின் போது, 'நீலகிரியில், முதற்கட்டமாக, 39 சுற்றுலா விடுதிகளை உள்ளடக்கிய, 309 கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
'தள்ளு முள்ளு' : பொக்காபுரம் பகுதியில் உள்ள விடுதிகளுக்கு, நேற்று காலை, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், சீல் வைக்கும் பணிநடந்தது.'பேர் மவுண்ட் ரிசார்ட்' என்ற விடுதிக்கு, போலீஸ் பாதுகாப்புடன், சீல் வைக்க அதிகாரிகள் சென்றனர். அங்கு வந்த உரிமையாளர்கள் சிலர், சீல் வைக்கும் பணியை செய்ய விடாமல், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின், போலீசார் தடுத்து, உரிமையாளர்களை வெளியேற்றிய பின், கட்டடத்தை சீல் வைத்து, அறிவிப்பை ஒட்டினர். நேற்று மாலை வரை தொடர்ந்த இப்பணியில், 27 சுற்றுலா விடுதிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள், சீல் வைத்தனர்.
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, யானை வழித்தடத்தில் உள்ள, 39 சுற்றுலா விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 27 சுற்றுலா விடுதிகளின் உரிமையாளர்களுக்கு, ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், தற்போது, சீல் வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜரான, 12 விடுதி உரிமையாளர்களின் ஆவணங்களை சமர்பிக்க உத்தரவிடப்பட்டது. அதில், 11 பேர் ஆவணங்களை சமர்பித்துள்ளனர்; ஒருவர் மட்டும் சமர்பிக்கவில்லை. ஆவணங்கள் சமர்பித்த விடுதிகளில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வர். சீல் வைக்கப்பட்ட விடுதிகள் குறித்த அறிக்கை, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதன்பின், இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அடுத்த கட்ட நடவடிக்கை என்ன : வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:யானை வழித்தடங்களில், சீல் வைத்தவை தவிர, மீதமுள்ள கட்டடங்கள் மற்றும் வருவாய், தனியார் நிலங்கள் குறித்த அறிக்கையை, அக்டோபர் மாதம், மாவட்ட நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின், நீதிமன்ற உத்தரவின்படி, இறுதி முடிவு எடுக்கப்படும். அப்படிப்பட்ட நிலையில், இந்த பகுதிகள் அனைத்தும், முதுமலை புலிகள் காப்பக வெளிவட்ட பகுதியாக அறிவிக்க வாய்ப்புள்ளது/இவ்வாறு அவர்கள் கூறினர்.
உலக யானைகள் தினத்தில் நடவடிக்கை : உலக யானைகள் தினம், நேற்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இந்த நேரத்தில், யானை வழித்தடத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சீல் வைத்து எடுத்த நடவடிக்கை, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.கூடலுார் வன உயிரின மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க தலைவர், சிவசுப்ரமணி கூறியதாவது: யானைகளின் வழித்தடங்கள் மறிக்கப்படுவதால் தான், கிராமங்களில் புகுந்து மனிதர்களை தாக்கி வருகின்றன. விவசாய பயிர்களும் சேதமடைகின்றன. யானைகள் வழித்தட கட்டடங்கள் அகற்றப்படுவது வரவேற்கத்தக்கது. அதுவும், உலக யானைகள் தினத்தில் கட்டடங்களுக்கு, சீல் வைக்கப்பட்டது, ஏதேச்சையாக நடந்தாலும், மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல, மாநிலம் முழுவதும் உள்ள யானை வழித்தட ஆக்கிர மிப்புகளை அகற்றினால், மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X