அதிகாரிகள் கவனத்திற்கு - சேலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - சேலம்

Added : ஆக 13, 2018
Advertisement

மின்மோட்டார் பழுது; பெண்கள் சிரமம்: இடைப்பாடி அருகே, ஆவணிப்பேரூர் கீழ்முகம் ஊராட்சி, பக்கிரிகாட்டுவளவு பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். விவசாய கூலிவேலை செய்யும் அவர்கள் பயன்பாட்டுக்கு, ஆழ்துளை குழாய் கிணற்றுடன் இணைந்து, தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால், மின்மோட்டார் பழுதாகி, ஓராண்டுக்கு மேலாகியும் சரிசெய்யவில்லை. இதனால், போதிய தண்ணீரின்றி, மற்ற பகுதிகளுக்கு சென்று, பெண்கள் பிடித்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சென்டர் மீடியனில் கிடக்கும் தடுப்பு: தலைவாசல், சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன. மும்முடி பிரிவில், விபத்துகள் அதிகளவில் நடப்பதால், சாலை குறுக்கே, இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டன. சிலர், அதை அகற்றி, சென்டர் மீடியனில் போட்டுவிட்டனர். ஒரு மாதத்துக்கு மேலாக, அங்கேயே கிடக்கிறது. இதனால், விபத்துகள் மீண்டும் தொடர, வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொட்டியில் விரிசல்; அச்சத்தில் மக்கள்: கருப்பூர், குள்ளக்கவுண்டனூரில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு, பேரூராட்சி சார்பில், 60 லிட்டர் கொள்ளளவுடன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அதில், ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, குடிநீர் கசிந்து வருகிறது. மேலும், சிமென்ட் பெயர்ந்து, கீழே கொட்டி வருகிறது. இதனால், தொட்டி அருகே செல்லவே, மக்கள் அச்சப்படுகின்றனர். அதன் கீழ் குடியிருப்புகள் உள்ளதால், அச்சத்துடன் வசிக்கும் நிலை தொடர்கிறது.

பிணம் புதைப்பதில் கழிவுநீரால் இடையூறு: மகுடஞ்சாவடி, கனககிரி ஏரி அருகே, சுடுகாடு உள்ளது. அங்கு, சாக்கடை கழிவுநீர், நீண்ட நாட்களாக தேங்கி நிற்கிறது. மழைக்காலங்களில், சுடுகாட்டின் உட்பகுதியிலும், கழிவுநீர் தேங்கும். அப்போது, பிணங்களை புதைக்க குழி தோண்டுவதில், சிரமம் ஏற்படுகிறது. சுற்றுச்சுவர் இல்லாததால், நாய்கள் நுழைந்து, பிணக்குழிகளை தோண்டுவதால், துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் செல்ல குழாய் அமைத்து, சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்.

பாலத்தில் பெரிய குழி; சிறுவர்களுக்கு ஆபத்து: ஓமலூர் டி.எஸ்.பி., அலுவலகம் அருகே, ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியில், ஆர்.கே.நகர் ஐந்தாவது தெரு நுழைவாயிலில், சாக்கடை கால்வாய் பாலம் உள்ளது. சிமென்ட் பாலத்தில், ஒரு ஆள் உள்ளே செல்லும் வகையில், ஓட்டை விழுந்துள்ளது. பாதுகாப்புக்கு, அதன் அருகே, கற்களை வைத்துள்ளனர். ஆனால், அந்த வழியே பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர் எதிர்பாராத விதமாக தவறி விழ வாய்ப்புள்ளது. பேரூராட்சியில் தெரிவித்தும், மூன்று மாதங்களுக்கு மேலாக நடவடிக்கையில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X