இருகரை தொட்டு கரை புரண்டு ஓடும் காவிரி: ஜில்லென வீசும் காற்றால் பொதுமக்கள் மகிழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இருகரை தொட்டு கரை புரண்டு ஓடும் காவிரி: ஜில்லென வீசும் காற்றால் பொதுமக்கள் மகிழ்ச்சி

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கரூர்: இருகரைகளையும் தொட்டு, காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதை கண்டுகளிக்க, மாயனூர் கதவணையில், ஏராளமான பொதுமக்கள் குவிகின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால், மேட்டூர் அணையிலிருந்து, பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில், கர்நாடகா, கேரளா பகுதிகளில், தென்மேற்குப் பருவமழை கொட்டித் தீர்ப்பதால், அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பின. கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளிலிருந்து வெள்ள நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பி, 1.25 லட்சம் கன அடி நீர், ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அவ்வாறு திறந்துவிடப்படும் தண்ணீர், கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு, ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் செல்கிறது. இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, காவிரி ஆறு ஆர்ப்பரித்துச் செல்வதைக் காண, மாயனூர் கதவணைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர். அதேசமயம் அவர்கள், பாதுகாப்பாக காவிரியின் முழு அழகைக் கண்டு ரசித்துச் செல்ல, எந்த பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதுகுறித்து, கதவணையை சுற்றிப்பார்க்க வந்த பொதுமக்கள் சிலர் கூறியதாவது: மாயனூர் கதவணை திறக்கப்பட்ட பின், முதல் முறையாக, 70 மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப் பாய்ந்து செல்கிறது. இதுபோன்ற அற்புதமான நிகழ்வு எப்போதாவதுதான் ஏற்படும். இதைக் காண, கரூர் மாவட்டத்தில் மட்டுமல்லாது மறுகரையில் உள்ள, திருச்சி மாவட்டம் சீலைப்பிள்ளையார் புத்தூர் (சீப்ளாபுத்தூர்), மோகனூர், காட்டுப்புத்தூர் பகுதிகளிலும், கதவணை பாலம் மீது, திருவிழா போல் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இங்கு ஜில்லென வீசும் காற்று, குற்றால அருவிக்கு அருகில் நிற்போது போன்ற உணர்வைத் தருகிறது. ஆனால், மக்களுக்கு ஆபத்து நேரிடாத வகையில், அணையின் அழகைக் கண்டு ரசிக்க, அரசு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. சிலர் குழந்தைகளோடு பாலத்திலிருந்து ஆற்றை எட்டிப் பார்ப்பதும், இளைஞர்கள் பாலத்தின் ஓரத்தில் நின்று செல்பி எடுப்பதும் ஆபத்தின் அச்சாரமாக இருக்கிறது. கரையோரங்களில் சிலர் குடும்பத்துடன் குளிக்கின்றனர். இனியாவது, பொதுமக்கள் காவிரி ஆற்றைப் பாதுகாப்பாகப் பார்த்துவிட்டுச் செல்ல, அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X