நாட்டின் பேரிழப்பு...| Dinamalar

நாட்டின் பேரிழப்பு...

Added : ஆக 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 நாட்டின் பேரிழப்பு...


இந்திய முன்னாள் பிரதமர், அடல் பிகாரி வாஜ்பாய் காலமானார் என்பது, வளரும் இந்தியாவை நேசித்த மாபெரும் தலைவரின் பேரிழப்பாக கருதப்படும்.வாஜ்பாயின் சிறந்த ஆளுமை, கூட்டணி தர்மம் என்ற வார்த்தைக்கு கவுரவம் தந்து, மூன்று தடவை பிரதமராக இருந்த பண்பாட்டை நாடு அறியும். முந்தைய கால ஜனசங்கம் என்ற கட்சி, மாறி, பா.ஜ.,வாக உருவாக, அவர் மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம். அவசர நிலைக் காலத்தில், பெங்களூரு சிறையில் இருந்தவர். அவரும், அக்கட்சியில் முக்கியமாக உள்ள தலைவர்களில் ஒருவருமான அத்வானியும், பல ஆண்டுகள், 'இரட்டையராக' செயல்பட்டனர்; இருவரும், ஆர்.எஸ்.எஸ்., பிரசாரகர்கள்.முதலில், 'ஜனசங்கம்' என்ற தேசிய கட்சியை துவக்க, அன்றைய மிகப்பெரும் தலைவர்களில் ஒருவரான சியாமபிரசாத் முகர்ஜி முயன்றபோது, அவருக்கு, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் கோல்வால்கர் அளித்த பிரசாரகர்களில் அதிக முக்கியமானவர்கள் தீனதயாள் உபாத்தியா, வாஜ்பாய், நானாஜி, அத்வானி ஆகியோர் ஆவர். அவருடன் வாழ்ந்த அத்வானி, செயல்பாட்டுடன் வலம் வரும் இன்றையத் தலைவர் ஆவார்.அதிலும், மொரார்ஜி தலைமையிலான ஜனதா அரசு உருவான போது வாஜ்பாய், அதன் வெளியுறவு துறை அமைச்சர். இந்தியாவின் கவுரவம் காக்க, அவர் மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம். அவரை அன்று, அடிக்கடி உலக நாடுகளை வலம் வருபவர் என்று, 'வாயேஜ்பாயி' என்றழைத்தது உண்டு.அக்கூட்டணியில் குழு உணர்வின்றி, சிறப்பாக பணியாற்றி கவுரவம் காத்ததால், ஆர்.எஸ்.எஸ்., என்பதில் அதிக அக்கறை கொண்டவர் என்ற புகாரை, ஜனாதளத்தில் பெர்னாண்டஸ் போன்றவர்கள் கிளப்பினர். விளைவு, பா.ஜ., உருவானது. அதன் முதல் மாநாடு, 1980ல், மும்பையில் நடந்த போது, அவர் தலைமையை மிகவும் போற்றிய, நாடு போற்றும் வழக்கறிஞர் சக்ளா, ராம்ஜெத்மலானி உள்ளிட்டோர் அதில் இணைந்தனர்.அதற்குப்பின், அவர் தலைமையில் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள், கட்சியை வளர்த்து, லோக்சபாவில் எதிர்க்கட்சியாக நின்று, அத்துடன் கூட்டணி ஆட்சிக்கு தேவையான பலத்துடன் வளர வழிவகுத்தவர். அன்று அக்கட்சியை, 'இந்திக்கட்சி' என்று கூறியவர்கள், வாஜ்பாய் கூட்டணியில் அவரது, 'கூட்டணி தர்மம்' கண்டு அதிசயித்தது உண்டு.அதனால், அவருடன் கூட்டணியில் இருந்த மம்தா, இன்றும் அவரை மதிக்கிறார்.கோல்கட்டா சென்ற போது, மம்தா அன்னை காயத்ரி தேவியை சந்தித்து, அவரை வணங்கி, 'உங்கள் மகள் சற்று அவசரப்படுகிறவர்' என்று கூறி, நிதர்சனத்தை தெரியப்படுத்தியவர். அதனால் இன்று மம்தா, அவரை அதிகம் போற்றுகிறார். அதே போல, நம் தமிழகத்தில், ம.தி.மு.க., தலைவர் வைகோவின் அன்னையை சந்தித்து பாராட்டியவர். தமிழகத்தின், சின்னப்பிள்ளையை வணங்கியது வரலாறு.ஐ.நா.,வில் அவர் உரையாற்றிய போது, இந்தியாவின் பெருமையை நிலைநாட்டியதுடன், திருக்குறளை தன் உரையில் சேர்த்தவர்; சிறந்த கவிஞர். பத்திரிகையாளராக இருந்தவர் என்பதால், எந்தக் கேள்விக்கும் சளைக்க மாட்டார்.சமயங்களில் சில நெருக்கடியான சமயங்களில் வார்த்தைப் பிரயோகத்தை தவிர்க்க, தன் தோளை உலுக்கி, புன்முறுவலுடன் ஓரிரு வார்த்தைகளுடன் நாசுக்காக முடிப்பவர்.அவர் கொண்டு வந்த தங்க நாற்கர சாலைகள் இணைப்பு, அவர் முயற்சியில், டாக்டர் அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கியது, தன் அமைச்சரவையில் உள்ள ஜஸ்வந்த் சிங் மூலம், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்துடன் தொடர் விவாதங்கள் நடத்தி, அமெரிக்காவுக்கு, நம் ஜனநாயகத்தை உணர்த்தியது போன்ற பல செயல்கள் அடங்கும்.ராஜ்யசபா, லோக்சபா ஆகிய இரண்டிலும், அவர் பேச எழுந்தால், சபை அமைதி காக்கும். நேரு முதல் ராஜிவ் வரை, லாலு முதல் யெச்சூரி வரை, அவர் பேச்சை உன்னிப்பாக கவனிப்பர்.ஒரே ஒரு சிறுநீரகத்துடன் வாழ்ந்த அவர், நினைவுத்திறன் குறைந்ததால், கடைசி ஆண்டுகளில் வளர்ப்பு மகள் குடும்பத்துடன் வாழ்ந்தார்.பாகிஸ்தானுக்கு கார்கில் போர் மூலம் பாடம் கற்றுத் தந்தது, தன் கட்சியை ஆதரிக்கும் சங்கபரிவார் அமைப்புகளில் சில தன்னை விமர்சித்த போதும், அதை ஒதுக்கி தன் ஆளுமையை ஒரு சிறந்த அரசியல்வாதியாக காட்டிய பெருமை, அவர் தனித்தன்மையாகும்.'இந்த நாடு உலகின் முன்னணியாக வர, போர்க்குணம் தேவையில்லை' என்று அறிவித்து, அதே சமயம் அணுகுண்டு சோதனை செய்து, அமெரிக்க தடைகளை தகர்த்தவர். நிர்வாகத்தில் ஊழல் களையப்படவும், இந்த நாட்டின் தனிப்பட்ட கலாசார பெருமைக்காக வாழ்ந்த மாபெரும் தலைவர் மறைவு, நாட்டிற்கே பேரிழப்பாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X