புதிய கொள்முதல் கொள்கை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புதிய கொள்முதல் கொள்கை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Added : செப் 12, 2018
Advertisement

புதுடில்லி: விவசாயிகளுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், புதிய கொள்முதல் கொள்கைக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அமைச்சரவை கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: 'விவசாயிகளுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பது உறுதி செய்யப்படும்' என, கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கான வழிமுறைகளை உருவாக்கும்படி, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும், 'நிடி ஆயோக்' அமைப்புக்கு உத்தரவிடப்பட்டது. மத்திய வேளாண் அமைச்சகம், பல்வேறு மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தி, தன் பரிந்துரையை, நிடி ஆயோக் அளித்துள்ளது.அதன்படி, புதிய கொள்முதல் கொள்கை உருவக்கப்பட்டுள்ளது. இதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பல்வேறு உற்பத்தி பொருட்களுக்கு, குறிப்பாக, எண்ணெய் வித்துகளுக்கான கொள்முதல் விலை குறையும்போது, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உறுதி செய்ய, மூன்று வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.முதலாவதாக, மத்திய பிரதேசத்தில் உள்ளதுபோல், கொள்முதல் விலை குறையும்போது, மாநிலத்தில் உற்பத்தியாகும் பொருட்களில், 25 சதவீதத்தை, மத்திய அரசு, குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யும்.இரண்டாவதாக, தனியார் நிறுவனங்களையும் கொள்முதலில் ஈடுபடுத்தலாம். அவர்கள், குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.மூன்றாவதாக, குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் மத்திய அரசின் திட்டத்தின்கீழ், அனைத்து பொருட்களையும் மத்திய அரசே கொள்முதல் செய்யும்.குறைந்தபட்ச ஆதார விலையைவிட, கொள்முதல் விலை குறையும்போது, இந்த மூன்றில், ஏதாவது ஒரு திட்டத்தை, மாநில அரசுகள் செயல்படுத்தலாம்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X