மாட்டு வண்டி ஊர்வலம்: புதுமண ஜோடி அசத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாட்டு வண்டி ஊர்வலம்: புதுமண ஜோடி அசத்தல்

Updated : செப் 13, 2018 | Added : செப் 13, 2018 | கருத்துகள் (8)
Advertisement
மாட்டு வண்டி ஊர்வலம்: புதுமண ஜோடி அசத்தல்

கோபிசெட்டிபாளையம் : பட்டதாரி பெண்ணை மணம் முடித்த இன்ஜினியர், பாரம்பரிய நாட்டு இன மாடுகளை ஊக்குவிக்க, மாட்டுவண்டியில் ஊர்வலம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே வெள்ளாளபாளையத்தை சேர்ந்த கவி அரவிந்த், 26, பி.இ., முடித்துள்ளார். இவருக்கும், எம்.சி.ஏ., படித்துள்ள பிரவீணா, 24, என்பவருக்கும் பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில்,நேற்று காலை 6 மணிக்கு திருமணம் முடிந்தது.

திருமணம் முடிந்ததும், மணக்கோலத்தில் நாட்டு இன மாடுகள் பூட்டிய வண்டியில் ஊர்வலமாக செல்ல, கவி அரவிந்த் முடிவு செய்தார். சக நண்பர்கள், நாட்டு இன மாடுகள் பூட்டிய, இரட்டை மாட்டு வண்டிகளை ஏற்பாடு செய்தனர்.

மாட்டு வண்டியில், கவி அரவிந்த் - பிரவீணா தம்பதி ஊர்வலமாக புறப்பட்டனர். பாரியூர் கோவிலில் இருந்து ஊர்வலமாக தங்களது ஊரான வெள்ளாளபாளைத்தை அடைந்தனர்.

கவி அரவிந்த் கூறியதாவது ; எனக்கு வேலைக்கு செல்ல விருப்பமில்லை. மனைவியுடன் இணைந்து விவசாய பணி மேற்கொள்வேன். என் தந்தை மற்றும் முன்னோர், பாரம்பரியமாக மாட்டு வண்டியில் சென்றுதான் திருமணம் செய்துவந்தனர்.

பால் உற்பத்திக்காக, ஜெர்சி மற்றும் கலப்பின ரக மாடுகளை அதிகம் வளர்க்கின்றனர். அதனால், பாரம்பரிய நாட்டு இன மாடுகளை அழிவில் இருந்து பாதுகாக்கவும், அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மணக்கோலத்தில் ஊர்வலமாக வந்தோம். இவ்வாறு அவர் கூறினார்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X