லோக் ஆயுக்தா மூலம் தமிழக முதல்வர் மீது விசாரணை: ம.தி.மு.க., மாநாட்டில் தீர்மானம் மூலம் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

லோக் ஆயுக்தா மூலம் தமிழக முதல்வர் மீது விசாரணை: ம.தி.மு.க., மாநாட்டில் தீர்மானம் மூலம் வலியுறுத்தல்

Added : செப் 16, 2018
Advertisement

ஈரோடு: மக்கள் ஆட்சி தத்துவத்தை கேள்விக்குரியாக்கும், பா.ஜ., மற்றும் அதன் கைப்பாவையாக இயங்கும், அ.தி.மு.க., அரசுகளை வீழ்த்த, தி.மு.க., தலைமையில், தோழமை கட்சியுடன் அணி சேர்ந்து அரசியல் கடமையாற்ற, ம.தி.மு.க., மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோட்டில் நேற்று நடந்த, ம.தி.மு.க., முப்பெரும் விழா மாநாட்டில், பொதுச் செயலாளர் வைகோ முன்னிலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:


* மக்களுக்கு எதிரான மீத்தேன் எரிவாயு, ?ஹட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டம், காவிரி உரிமை, முல்லைப்பெரியாறு உரிமைகளில் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. மக்கள் ஆட்சி தத்துவத்தை கேள்விக்குரியாக்கும், மத்திய அரசுக்கும், அதன் கைப்பாவையாக இயங்கும், அ.தி.மு.க.,வையும் வீழ்த்த, தி.மு.க., தலைமையிலான தோழமை கட்சிகளுடன் அணி சேர்ந்து, அரசியல் கடமை ஆற்றுவது என முடிவு செய்யப்பட்டது.


* தமிழகத்தில் நடைமுறையில் உள்ள, 69 சதவீத இடஒதுக்கீடு, மத்திய அரசு பள்ளிகளில் பிற்பட்டோருக்கான, 27 சதவீத இடஒதுக்கீடு போன்றவைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.


* தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.


* காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில், தமிழகத்துக்கு, 192 டி.எம்.சி., நீர் வழங்க உத்தரவிட்டது. மேல் முறையீட்டு தீர்ப்பில், 177.25 டி.எம்.சி., நீரை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இது, தமிழகத்துக்கான பேரிடியாகும். எனவே, இறுதி தீர்ப்பில் கூறியபடி, தமிழக உரிமை நீரை பெற முயல வேண்டும்.


* காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது, ராசிமணலில் தடுப்பணை கட்ட எச்சூழலிலும் அனுமதிக்கக்கூடாது. அதற்கு மத்திய அரசு, அனுமதி வழங்கக்கூடாது. மத்திய அரசு கொண்டு வரும் அணை பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற வேண்டும். மாநில அரசுகளின் அணை உரிமை காக்கப்பட வேண்டும்.


* முல்லை பெரியாறு பிரச்னையில் தமிழக நீர் உரிமையை நிலைநாட்ட, உச்சநீதிமன்றத்தில் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.


* டெல்டாவில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பெட்ரோலிய முதலீட்டு மண்டலம், தேனியில் நியூட்ரினோ திட்டம் போன்றவை அமைப்பதை கைவிட வேண்டும்.


* ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். தமிழக விளை நிலங்கள் வழியாக பைப்லைன் பதிக்கும் 'கெயில்' திட்டத்தை அனுமதிக்கக்கூடாது. தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்ல அறிவுறுத்த வேண்டும்.


* கேரளா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்துக்கு ஒப்புதல் பெற்று பணியை தொடர வேண்டும்.


* சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை, மக்கள் எதிர்ப்பை உணர்ந்து நிறுத்திவிட்டு, மூன்று வழித்தடத்தை விரிவுபடுத்த திட்டமிட வேண்டும்.


* தமிழகத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடப்பதால், அவர்கள் ஆட்சியில் நீடிக்கும் தார்மீக அருகதையை இழந்துவிட்டனர். எனவே, 'லோக் ஆயுக்தா'வை கொண்டு வந்து, முதல்வர் உள்ளிட்ட அனைவர் மீதும் ஊழல் குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும்.


* தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல், ஓராண்டை கடந்துவிட்டதால், உள்ளாட்சி நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.


* எழுத்தாளர், சிந்தனையாளர்கள், ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவது, கொல்லப்படுவது, கருத்து சுதந்திரத்தை பறிப்பதை மத்திய, மாநில அரசுகள் நிறுத்த வேண்டும்.


* ஜி.எஸ்.டி., உள்ளிட்ட பல்வேறு வரி, திட்டங்கள் மூலம், மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். 'நீட்' தேர்வை தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது என்பது உட்பட, 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X