5 மாநில தேர்தல் திருவிழா| Dinamalar

5 மாநில தேர்தல் திருவிழா

Added : அக் 11, 2018 | கருத்துகள் (1)
Advertisement

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கு, பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இதுபற்றிய ஒரு தொகுப்பு:
ராகுலுக்கு உதவிய மோடி
முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள ராஜஸ்தானில், ராகுல் பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரங்களில், மோடியையும், பா.ஜ., ஆளும் மத்திய, மாநில அரசுகளை ராகுல் விமர்சிக்கிறார். அதே நேரத்தில், மோடியின், 'மேக் இன் இந்தியா' திட்டம், ராகுலுக்கு உதவியுள்ளது. 'ராஜஸ்தான் மற்றும் தோல்புர் பகுதியை உலக நாடுகள் அறிய வேண்டும். இது தோல்புரில் உருவான பொருள் என, உலக நாடுகள் அறியும் வகையில், இங்கு தொழில் வளர்ச்சி ஏற்படுத்தப்படும்' என, ராகுல் பேசியுள்ளார். ராகுலின் இந்த பேச்சு,பா.ஜ., வினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
குழப்பத்தில் பா.ஜ.,
முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., அரசு, மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ளது. ஆட்சியை தக்க வைக்க, பா.ஜ., தீவிர முயற்சியில் உள்ளது. தற்போது, ஹிந்துக்களின் பண்டிகையான, நவராத்திரி காலம். இந்த நவராத்தியின்போது, வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும் என்ற முனைப்பில், பா.ஜ., உள்ளது. ஆனால், சிக்கலே அதில் தான் உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிட, 15க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களில் யாருக்கு சீட் தருவது என்பதில் தான், பா.ஜ.,வின் வெற்றி வாய்ப்பும் உள்ளது.அதிருப்தியாளர்களை இழுக்க காங்கிரஸ் தயாராக உள்ளதால், மிகவும் திறமையாக இந்தப் பிரச்னையை சமாளிக்க வேண்டிய நிலையில், பா.ஜ., உள்ளது.
தலையை தேடும் காங்.,
முதல்வர் ரமண் சிங் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள சத்தீஸ்கரில், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நினைப்பில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு, மிக முக்கியமான பிரச்னை ஏற்பட்டுள்ளது. கடந்த, 15 ஆண்டுகளாக, மாநிலத்தில் ஆட்சியில் இல்லாததால், மக்களை ஈர்க்கும் நல்ல தலைவர்கள் இல்லாமல், காங்கிரஸ் திணறுகிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், கூட்டணியில் இருந்து விலகியுள்ள நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் புபேஷ் பெகல் மீது, போலி, 'சிடி' தயாரித்த வழக்கில், சி.பி.ஐ., வழக்கு தொடர்ந்துள்ளது. தேர்தல் நேரம் என்பதால், அவரை கட்சியில் இருந்தும் நீக்க முடியவில்லை. அவரது தலைமையிலும் தேர்தலை சந்திக்க முடியவில்லை. இந்நிலையில், வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவற்றை கவனிக்க, ஐந்து பேர் அடங்கிய குழுவை அமைக்க, காங்., திட்டமிட்டுள்ளது.
தாமரை மலருமா?
தென் மாநிலங்களில், கர்நாடகாவைத் தொடர்ந்து, தெலுங்கானாவிலும் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில், பா.ஜ., தலைவர் அமித் ஷா தீவிரமாக உள்ளார். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் முதல்வராக உள்ள தெலுங்கானாவில், அடுத்த ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலை மனதில் வைத்து, வியூகங்கள் வகுக்கப்படுகின்றன.பா.ஜ., தலைவர் அமித் ஷா, கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்து, நிர்வாகிகளிடம் கேட்டுள்ளார். மாநிலத்தில், 60க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என, இலக்கு நிர்ணயித்துள்ளார். இவற்றில், 12 தொகுதிகளில் வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அரசு அமைய, பா.ஜ.,வின் உதவி தேவைப்படும் என்பதால், இந்தத் தொகுதிகளில் தீவிரமாக பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசியலில் இது சகஜம்
வட கிழக்கு மாநிலமான, மிசோரமில், முதல்வர் லால் தன்ஹாவ்லா தலைமையிலான, காங்கிரஸ் அரசுக்கு, ஆட்சியை தக்க வைப்பதைவிட, கட்சி நிர்வாகிகளை தக்க வைப்பதே, முக்கிய இலக்காக உள்ளது. கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.'தற்போதைய, எம்.எல்.ஏ.,க்களில், 30 சதவீதம் பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாது' என, முதல்வர் கூறியுள்ளார். ஏற்கனவே, கட்சியின் இரண்டு மூத்த தலைவர்கள், வெளியேறியுள்ளனர். இந்நிலையில், அதிருப்தியாளர்களை கொத்திச் செல்வதற்கு, மிசோ தேசிய முன்னணி கட்சி காத்திருக்கிறது. ஆனால், 'கட்சியில் இருந்து வெளியேறியவர்களால், எந்த பாதிப்பும் ஏற்படாது' என, வழக்கமான வார்த்தைகளை காங்கிரஸ் கூறி வருகிறது.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-அக்-201809:05:39 IST Report Abuse
Srinivasan Kannaiya திருவிழா முடிந்தவுடன் அந்த இடத்தி யாரும் இருக்கமாட்டார்கள்... அதே மாதிரி தேர்தல் முடிந்தவுடன் எல்லா அரசியல்வாதிகளும் காணாமல் போய் விடுகிறார்கள்... அடுத்து ஐந்தாண்டுகள் கழித்துதான் மக்கள் நினைவு வரும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X