பாராமுகம்! ரயில்வே ஸ்டேஷன் பிரச்னைகளில்... நடவடிக்கைக்கு காத்திருக்கும் பயணிகள்| Dinamalar

தமிழ்நாடு

பாராமுகம்! ரயில்வே ஸ்டேஷன் பிரச்னைகளில்... நடவடிக்கைக்கு காத்திருக்கும் பயணிகள்

Added : அக் 11, 2018
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளை அவதிக்குள்ளாக்கும், பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தும் நிலையில், நிர்வாகத்தின் பாராமுகத்தால், பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
பொள்ளாச்சியை பிற நகரங்களுடன் இணைக்கும் ரயில் வழித்தடங்கள், அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட பிறகு, எதிர்பார்த்த அளவுக்கு ரயில்கள் இயக்கப்படவில்லை. தற்போது இயங்கும் சொற்ப ரயில்களும் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தான் இயக்கப்பட்டன.
இந்நிலையில், இயக்கத்தில் உள்ள ரயில்களை கூட முழுமையாக பயன்படுத்த முடியாத சூழல், ரயில்வே ஸ்டேஷனில் நிலவுகிறது.
முன்பதிவில்லாத 'டிக்கெட்' வழங்க ஒரு 'கவுன்டர்' மட்டுமே செயல்படுகிறது.
இதனால், பெரும்பாலான நாட்களில் பயணிகள் வரிசையில் காத்திருந்து, 'டிக்கெட்' வாங்குவதற்குள் ரயில் கிளம்பி விடுகிறது.
இதனால், பலரும் ரயிலை தவற விடுவது தொடர்கதையாக உள்ளது. முன்பதிவு 'டிக்கெட் கவுன்டர்' பகுதி நேரம் மட்டுமே செயல்படுகிறது. பஸ் கட்டணமும் உயர்ந்துள்ளதால், ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அகல ரயில்பாதைக்கு முன், இயங்கி வந்த ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட ரயில்களை இயக்கினால், கோவை மாவட்டம் முழுவதும் உள்ள தென்மாவட்ட மக்கள் மற்றும் பக்தர்கள் பயனடைவர்.
இப்பிரச்னைகள் குறித்து பொதுநல அமைப்பினர், அரசியல் கட்சியினர், பயணிகள் நலச்சங்கத்தினர் ரயில்வே நிர்வாகத்துக்கு பல முறை தெரிவித்தும் தீர்வு காணப்படாமல் உள்ளது.
கடந்த, 2ம் தேதி ரயில்வே ஸ்டேஷன் நிகழ்ச்சியில், எம்.பி., மகேந்திரனிடம், இப்பிரச்னைகளை பயணிகள் முறையிட்டனர்.
உடனடியாக தீர்வு காணும்படி, ரயில்வே அதிகாரிகளுக்கு எம்.பி., உத்தரவிட்டார். ஆனால், இதுவரை ஒரே ஒரு 'டிக்கெட் கவுன்டர்' மட்டுமே செயல்படுகிறது. ரயில்வே நிர்வாகத்தின் பாராமுக நடவடிக்கையால், அனைத்து தரப்பினரையும் அதிருப்தியடைந்துள்ளனர்.
மூன்று மாதம் அவகாசம்!
பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், பாலக்காடு கோட்ட வர்த்தக ஆய்வாளர் ராம்குமார் கூறியதாவது:தற்போது பகுதி நேரமாக இயங்கும் முன்பதிவு கவுன்டர், காலை, 6:00 மணியில் இருந்து, இரவு, 8:00 மணி வரை இயங்கும்படி மாற்றப்பட உள்ளது. கவுன்டரில், முன்பதிவில்லாத டிக்கெட்டும் வழங்கப்படும்.
மேலும், தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரமும் அமைக்கப்படும். பொள்ளாச்சி - கோவை; பாலக்காடு - பொள்ளாச்சி; மங்களூரு - ராமேஸ்வரம் இடையே கூடுதல் ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களில் இவை அனைத்தும் நடைமுறைக்கு வரும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X