புதிய குற்றச்சாட்டு: ரபேல் நிறுவனம் விளக்கம்| Dinamalar

புதிய குற்றச்சாட்டு: ரபேல் நிறுவனம் விளக்கம்

Added : அக் 11, 2018 | கருத்துகள் (43)
ரபேல், போர் விமானம், பிரான்ஸ், டசால்ட், அனில் அம்பானி, ரிலையன்ஸ்,

புதுடில்லி: ரபேல் போர் விமானம் வாங்க, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட வேண்டியது கட்டாயம் என்ற புதிய குற்றச்சாட்டுக்கு, ரபேல் விமானங்களை தயாரிக்கும் டசால்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.


புதிய குற்றச்சாட்டு


பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதில் ஊழல் நடந்துள்ளதாக, காங்., தலைவர் ராகுல் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். குறிப்பாக, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக பிரதமர் மோடி செயல்படுகிறார் என்று ராகுல் கூறி வருகிறார்.




இதை, டசால்ட் நிறுவனமும், பிரான்ஸ் அரசும், மத்திய அமைச்சர்களும் மறுத்து வருகின்றனர். இச்சூழ்நிலையில் பிரான்ஸ் நாட்டில் செயல்படும்,'மீடியாபார்ட்' என்ற இணைய தள இதழ் நேற்று புதிய குற்றச்சாட்டை முன் வைத்தது. டசால்ட் நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளன. அதில், ' 36 விமானங்கள் விற்பனைக்கான ஒப்பந்தம் கிடைக்க வேண்டும் என்றால், இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனத்தை பங்குதாரராக சேர்க்க வேண்டும். இது கட்டாயம், கடமையாக்கப்பட்ட ஒன்று' என்று கூறப்பட்டுள்ளதாகவும், அந்த இணைய தள இதழ் செய்தி வெளியிட்டது.

இந்த செய்தி, இந்தியாவில் புது புயலை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் மத்திய அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.


டசால்ட் நிறுவனம் விளக்கம்


இப்பிரச்னை குறித்து டசால்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ரபேல் விமானங்கள் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தில், 50 சதவீதத்தை இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும். இதற்காக ஒரு நிறுவனத்தை பங்குதாரராக நியமிக்க வேண்டும். இது குறித்து, எங்கள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லோய்க் சிகாயன், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தொழிற்சங்களிடம் மே 11ம் தேதி விளக்கம் அளித்துள்ளார்.




வெளிநாட்டு நிறுவனத்தை பங்குதாராக நியமிப்பது குறித்து தொழிற்சங்கங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்பது பிரான்ஸ் சட்டப்படி கட்டாயம். ஆனால், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் எந்த வித நெருக்கடியும் இல்லாமல் தான் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்காக டாசல்ட் - ரிலையன்ஸ் என்ற கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம 2017 ம் ஆண்டு பிப்., 10ம் தேதி உருவாக்கப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனத்தை தவிர பி.டி.எஸ்.எல்., டெப்சிஸ், கைனடிக், மகிந்திரா, மைனி மற்றும் சாம்டெல் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும், 100 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடுவது குறித்து பேச்சு நடந்து வருகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பத்திரிகையாளர் கருத்து


'லீ மான்டி' என்ற பிரெஞ்ச் நாளிதழின் தெற்கு ஆசிய பத்திரிகையாளர் ஜூலியன் போய்சவ் என்பவர் இப்பிரச்னை குறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், பிரான்ஸ் நாட்டில் செயல்படும் நிறுவனங்களின் நிர்வாகம், முக்கிய முடிவுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தொழிற்சங்களுக்கு தெரிக்க வேண்டியது கட்டாயம். அதன்படி, பிரான்ஸ் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்காமல், இந்தியாவில் கட்டப்பட உள்ள தொழிற்சாலை குறித்து தொழிற்சங்கங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கம் பிரான்ஸ் தொழிலாளர் சட்டம் குறித்தது. அதற்கும் அனில் அம்பானிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என, தெரிவித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X